Wednesday, August 26, 2015

தீமையாகும் நன்மைகள்
........................
உங்கள் நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள். - (ரோமர் 14:16).
.
நம்மில் யாரும் பெரிய பெரிய பாவங்களையோ, தவறுகளையோ அதாவது, கொலையோ, கொள்ளையோ செய்வதில்லை. அப்படிப்பட்ட பாவங்களை செய்ய நாம் திட்டமிடுவதுமில்லை. இப்படிப்பட்ட பயங்கர பாவங்களில் நம்மை பிசாசானவன் விழ வைக்க முடியாததால், அவன் தந்திரமான ஒரு வழியை கையாளுகிறான். அதில் ஒன்று தேவன் நன்மை என்று சொல்லுகிற காரியத்தில் நம்மை எல்லையை மீறச் செய்து பாவத்தில் விழ வைப்பதே. நம்முடைய வாழ்க்கையிலே வேத வசனம் நன்மை என்று செர்ல்லக்கூடிய காரியங்கள் எப்படி தீமையாக மாறக்கூடும் என்று ஒரு சில காரியங்களை பார்ப்போம்.
.
ஓய்வு தேவன் தந்த ஒரு கிருபை. வாரத்தில் ஒரு நாள் நாம் ஓய்வெடுத்து கொள்ளும்படி தேவன் நமக்கு அனுக்கிரகம் செய்திருக்கிறார். ஆனால் அந்த ஓய்வெடுத்தல் எல்லையை மீறும்போது அது 'சோம்பேறித்தனம்' என்னும் பாவமாக மாறுகிறது.
.
நமது நாவின் ஆசையை நிறைவேற்ற அநேக வகையான பழங்களையும் காய்களையும் உணவு வகைகளையும் தேவன் கொடுத்திருக்கிறார். இவற்றை நாம் மகிழ்வோடு உண்ணலாம். ஆனால் அது எல்லையை மீறும்போது அது 'பெருந்தீனி' என்னும் பாவமாக மாறுகிறது.
.
நம்மை நாம் கவனித்து கொள்வதிலும் நமக்குரியவற்றில் ஞானமாய் இருப்பதும் நல்லது. ஆனால் நம்மை குறித்து மட்டுமே யோசித்து கொண்டிருக்கும்போது அது 'சுயநலம்' என்னும் பாவமாக மாறுகிறது.
.
பிறரோடு நல்ல உறவு வைத்து கொள்ள தகவல் தொடர்பு அவசியமானது. எல்லோரோடும் நன்றாக பேச வேண்டும். பழக வேண்டும். ஆனால் அது எல்லையை மீறும்போது 'புரளிபேசும்' பாவமாக மாறுகிறது.
.
ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும், வேலை பார்க்கும் நாட்களில் வாழ்கிறோம். ஒருவரோடொருவர் பேசுவதிலும், உதவுவதிலும் தவறில்லை. ஆனால் அது எல்லையை மீறும்போது பஞ்சும் நெருப்பும் போல அந்த நட்பு இருவரையும் அழித்து விடும்.
.
நாம் எதிர்பாலரோடு பழகுவதில்லை என்று சொல்லி, ஜாக்கிரதையாய் வாழலாம். ஆனால் ஒரே பாலின நண்பர்களுக்குள் நட்பு அதிகமாகும் போது ஓரின சேர்க்கை என்னும் விகற்பம் எழக்கூடும்.
.
அழகான ஏதேன் தோட்டத்தில் பிசாசு ஆதாமையும், ஏவாளையும் வஞ்சித்ததை நாம் மறந்து விடக்கூடாது. நன்மையென்று நினைத்து நாம் செய்து கொண்டிருக்கிற காரியங்கள் தீமையை நோக்கி சென்று விடாதபடி எல்லைகளை கவனமாக காத்து கொள்வோம். எந்த காரியத்திலும் நாம் எல்லை மீறாதபடி, எல்லைக்குள் அடங்கி இருக்க கற்று கொள்வோம்.  வாழ்க்கையில் எந்த ஒரு காரியத்திற்கும் அடிமையாகாதபடி எல்லாவற்றிலும் சமநிலையான சிந்தனையையும், தெளிவையும் பெற்று வாழ்வோம். நன்மையான காரியங்கள் தீமையாகாதபடி எல்லாவற்றையும் எல்லைக்குள் வாழ்ந்து கர்த்தருக்கு சாட்சியாக இருப்போம். ஆமென் அல்லேலூயா!
.
எதை நான் பேச வேண்டுமென்று
கற்று தாருமையா
எவ்வழி நடக்க வேண்டுமென்று
பாதை காட்டுமையா
ஒளியான தீபமே
வழிகாட்டும் தெய்வமே
. 

ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, எந்த காரியத்திலும் நாங்கள் எல்லையை மீறி செய்யாதபடிக்கு ஜாக்கிரதையாய் எங்களை காத்து கொள்ள கிருபை செய்யும். எந்த காரியமும் எல்லையை மீறும்போது பாவம் என்று உணர்ந்து, அதை தவிர்த்து வாழ கிருபை செய்யும். ஞானத்தை தாரும்.   எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
***

No comments:

Post a Comment