Wednesday, August 26, 2015

மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம்
.....................
அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.  என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம். - (1 யோவான் 3:16,18).
.
இந்த உலகத்தில் வாழ்கிற நாம் அநேகருக்கு நாமும் இந்த உலகத்தில் ஒரு பிரஜை என்பதுதான் எண்ணம். ஆனால் தேவனுடைய அன்பு நம்மில் இருப்பதால் ஒரு சிலருக்கு நாமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கிறோம். தேவையுள்ளவர்களுக்கு, காயப்பட்டவர்களுக்கு மற்றும் வேதனையிலிருப்பவர்களுக்கு, நாம் பேசும் ஒரு ஆறுதலான வார்த்தை, நாம் சிந்தும் ஒரு புன்னகை, லேசான தொடுதல், இவை அவர்களுக்கு உலகில் அவர்கள் வாழ்வதற்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கின்றன. போன வாரத்தில் ஒரு சகோதரி புறமதத்தை சேர்ந்தவர்கள், நான் வேலை செய்யும் இடத்தில் தன்னுடைய ஒரு குறையினிமித்தம் வந்திருந்தார்கள். அவர்களோடு நான் பேசும்போது, 'நீங்கள் கவலைப்படாதீர்கள், நான் உங்களுக்காக ஜெபிப்பேன்' என்று சொன்னேன். அடுத்த நாள் அவர்களை பார்த்தபோது, நான் சொன்னேன், 'நான் உங்களுக்காக ஜெபித்தேன், நீங்கள் சரியாகி விடுவீர்கள்' என்று அவர்களை சற்று அணைத்தவாறு கூறினேன். உடனே அவாகள் என்னை கட்டியணைத்து முத்தமிட்டு கண்ணீர் வடிக்க தொடங்கினார்கள். மிகவும் நன்றி என்று திரும்ப திரும்ப என்னை முத்தமிட்டார்கள். கண்களில் கண்ணீர் தாரை தாரையாக ஓடியது. நாம் பேசும் ஒரு சிறு ஆறுதலான வார்த்தையும், தொடுதலும், அவர்களுக்கு அத்தனை ஆறுதலை கொண்டு வந்ததை நினைத்தால், அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம் என்ற வார்த்தைதான் நினைவுக்கு வருகிறது.
.
ஒரு கிறிஸ்தவ சகோதரி, ஒரு மனநோய் இல்லத்தில் வேலை செய்துவந்தார்கள். அவர்கள் நினைத்தார்கள், கர்த்தர் படைத்த எந்த ஒரு சிருஷ்டிக்கும் அன்பு காட்ட வேண்டும் என்று. அவர்கள் வேலை செய்த இடத்தில் ஆனி என்கிற சிறுமி தனியாக ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்தாள். இந்த சகோதரி, அந்த சிறுமிக்காக ஜெபித்து கதைகளை சொல்லி தனி பாசம் காட்ட ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் முரட்டாட்டமாக இருந்த அந்த சிறுமி அந்த பாசத்திற்கு கட்டுப்பட ஆரம்பித்தாள்.  சில மாதங்களில் சரியான அவள், அந்த இடத்திலிருந்து வீட்டுக்கு செல்லலாம் என்று அனுமதிக்கப்பட்டாள். அவளோ, தனக்கு கிடைத்த அன்பினால் தான் சுகமானதுபோல மற்றவர்களுக்கும் அன்புகூரும் ஒரு வாய்க்காலாக தான் மாற வேண்டும் என்று விரும்பி அங்கேயே இருந்து அநேகருக்கு ஆறுதலாக இருந்து வந்தாள்.  
.
சில வருடங்கள் கழித்து, ஹேலன் கெல்லர், அவர்களுக்கு இங்கிலாந்தில், 'அமெரிக்காவின் மிகச்சிறந்த பெண்மணி' என்னும் விருது கொடுக்கப்பட்டது. அப்போது அவர்களிடம், 'உங்கள் குருடு மற்றும் செவிடு என்னும் குறைபாடுகளின்  மத்தியிலும் நீங்கள் வெற்றிகரமாக செயல்பட காரணம் என்ன?' என்று கேட்டபோது, அவர்கள் சொன்னார்கள், 'ஆனி சுலைவான் மாத்திரம் இல்லையென்றால், நானும் இங்கு இல்லை' என்று கூறினார்கள். அந்த ஆனி சுலைவான் வேறு யாருமில்லை, ஹெலன் கெல்லருக்கு துணையாக அவர்களுக்கு செவியாக, பார்வையாக கூடவே இருந்து, ஒரு ஆசிரியைiயாக, வழிகாட்டியாக இருந்து அன்பு செலுத்தி, அவர்களை உருவாக்கினது, அந்த சிறுமி ஆனியாக இருந்த அந்த பெண்ணே!
.
இந்த உலகத்திற்கு அந்த கிறிஸ்தவ பெண் ஒரு பொருட்டல்ல, அவர்கள் ஒரு மனுஷி மாத்திரமே, ஆனால் ஆனிக்கு அவர்கள் உலகமாயிருந்து, அவர்களை மீட்டெடுத்தவர்கள், அதுப்போல ஹெலன் கெல்லருக்கு ஆனியே உலகமாக இருந்து அவர்களுக்கு விழியாக ஒலியாக இருந்து அவர்களை உயர்த்தினார்கள்.
.
ஒருவேளை நீங்கள் நினைக்கலாம், நான் யாருக்கும் பிரயோஜனமில்லாதவன் என்று. நீங்கள் செய்யும் காரியங்களை மற்றவர்கள் குறைவாக பேசலாம், ஆனால் ஒரு சிலருக்கு நீங்கள் தான் உலகம் என்பதை மறந்து போகாதீர்கள்! கர்த்தருடைய அன்பு உங்களுக்குள் விதைக்கப்பட்டிருந்தால், நீங்கள் அன்போடு செய்யும் ஒவ்வொரு செய்கையும் நிச்சயமாக ஒரு சிலருக்கு மிகவும் தேவையாகவும், உலகமாகவும் இருக்க முடியும்! இன்று நம்முடைய ஆறுதலான ஒரு வார்த்தை ஒரு ஆத்துமாவிற்காகிலும் ஆறுதலை கொண்டு வரட்டும், கண்ணீரை துடைக்கட்டும், நமது புன்னகை அவர்களுக்கு வாழ்வில் ஒரு புது நம்பிக்கையை கொடுக்கட்டும்!    நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசியாத இந்த உலகத்தார் அவரும் ஒரு Avatar (ஒரு சகோதரன் எழுதியிருந்தார்) என்று நினைக்கலாம். ஆனால் அவரே நமக்கு ஜீவனாக, நமது வாழ்வாக, சுவாசமாக, உயிராக இருக்கிறார். அவரை விசுவாசிக்கிற நாம் அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.  என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம். ஆமென் அலலேலூயா!
.
மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம்
இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம்
அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்
இராஜ பாதையை செவ்வையாக்குவோம்
நம் இயேசு ராஜாவே இதோ வேகம் வராரே
அதி வேகமாய் செயல்படுவோம்
.

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் எங்கள் நல்ல தகப்பனே, உம்முடைய குமாரனாகிய கிறிஸ்து எங்களுக்காக மரித்ததினால் அன்பு என்ன என்று நாங்கள் விளங்கி கொள்ள கிருபை செய்தீரே உமக்கு நன்றி. எங்களை காண்கிறவர்கள் கிறிஸ்துவை காணும்படியாக எங்கள் அன்பை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த கிருபை செய்தருளும். நாங்கள் இந்த உலகத்தாருக்கு ஒரு பொருட்டாக இல்லாவிட்டாலும், எங்கள் மூலமாக ஒரு சிலராவது, உமது அன்பை பெற்று அவர்களுக்கு நாங்கள் உலகமாகவும் கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவும்  இருக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
**************
வண்ணத்துப்பூச்சியா? பச்சோந்தியா?
.................
'நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்'. - (ரோமர் 12:2).
.
கிறிஸ்தவர்களில் இந்த நாட்களில் இரண்டு வகையினர் காணப்படுகின்றனர். ஒரு வகையினர் பக்தியின் வேஷத்தை தரித்தவர்கள். மற்றவர்கள் உண்மையிலேயே புதிதாக்கப்பட்டவர்களாக கர்த்தருக்குள் வளருகிறவர்கள்.
.
மேற்கண்ட வசனத்தில் வேஷந்தரித்தல், மற்றும் புதிதாகுதல் என்ற இரண்டு வார்த்தைகளை பார்க்கிறோம். வேஷந்தரித்தல் என்பது சபைக்கு வரும்போது, அவர்களை போல பரிசுத்தவான்கள் யாரும் இருக்க முடியாது என்பது போன்று மிகவும் பரிசுத்தமாய் தோற்றமளிப்பார்கள். அவர்கள் காட்டும் தாழ்மையும், மிகவும் அன்போடு இருப்பவர்கள் போலவும் காட்சியளிப்பார்கள். வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை போன்று, வெளியே பரிசுத்தமாயும், உள்ளேயோ எலும்பும், சகல அசுத்தமும் நிறைந்தவர்களாக காணப்படுவார்கள். அவர்கள் உள்ளத்தில் உள்ளதை அவர்கள் வெளிப்படுத்தாமல், போலியான ஒரு பரிசுத்தத்தை அணிந்து கொண்டு, அதையே வெளியே வெளிப்படுத்துகிறார்கள்.
.
புதிதாக்கப்படுதல் என்பது, உள்ளத்திலிருந்து உண்மையாக புதிதாக்கப்பட்டவர்களாக, மறுரூபமாக்கப்பட்டவர்களாக, கர்த்தருக்குள் வளருகிறவர்களை குறிக்கும்.
.
நாம் பச்சோந்திகளை (Chameleon) பார்த்திருக்கிறோம். அவை தாங்கள் செல்லும் இடத்திற்கேற்றவாறு தங்கள் நிறத்தை மாற்றி கொள்ளும். சிவப்பான ஒரு இடத்திற்கு செல்லும்போது அது தன் நிறத்தை சிவப்பாக மாற்றி கொள்ளும், பச்சையான இடத்திற்கு செல்லும்போது, அதன் நிறத்தை பச்சையாக மாற்றி கொள்ளும். அது செல்லும் இடம் எதுவோ அதன் நிறம் எதுவோ அதுவாக தன்னை மாற்றி கொள்ளும் வகையை அது சேர்ந்தது. அதுபோல சில கிறிஸ்தவர்களும் வேஷந்தரிக்கிறவர்களாக, சபையிலோ, வேதப்பாட வகுப்பிலோ அங்கு இருக்கும் நிலைக்கு ஏற்றவாறு பரிசுத்தமாய் காட்சி அளிப்பார்கள். ஆனால் அதை விட்டு வெளியே உலகத்தில் வரும்போது, உலகத்திற்குரியவர்களாக மாறிவிடுவார்கள். எப்படி பச்சோந்தி, தன் நிறத்தை மாற்றினாலும், அது பச்சோந்தியாகவே இருக்கிறதோ, அப்படியே இவர்களும், தங்கள் உள்ளான இருதயத்தில் மாயக்காரர்களாகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் உண்மையான கிறிஸ்தவர்களே அல்ல!
.
ஆனால் வண்ணத்துப்பூச்சியை பார்த்தோமானால், அது அற்புத விதமாக முழு மாற்றத்தையும் பெறும்போது, மிகவும் அழகுள்ளதாக மாறுகிறது. முதலில் கூட்டுப்புழுவாக இருந்த பூச்சி, புதிதாக்கப்படுவதினால், அது முற்றிலுமாக மாறி விடுகிறது. அதுதான் உண்மை கிறிஸ்தவ வாழ்க்கையாகும். உண்மை கிறிஸ்தவனாகும். சபைக்கு வரும்போதும், வெளியே செல்லும்போதும், அவர்கள் கிறிஸ்துவினால் மாற்றப்பட்டவர்களாக, புதிதாக்கப்பட்டவர்களாக, உருமாறினாலும், அது நிரந்தரமானதாக இருப்பார்கள். எப்படி வண்ணத்துப்பூச்சி, ஒரு முறை வண்ணத்துப்பூச்சியாக மாறியப்பின் அது வண்ணத்துப்பூச்சியாகவே இருக்கிறதோ, அப்படியே இவர்களும் புதிதாக்கப்பட்டப்பின,; மறுரூபமாக்கப்பட்டப்பின், உண்மை கிறிஸ்தவர்களாக, கர்த்தரின் சாயலில் பூரண வளர்ச்சியை அடைந்தவர்களாக இருப்பார்கள்.
.
பிரியமானவர்களே, நாம் எந்த நிலையில் இருக்கிறோம்? பச்சோந்தியை போல நாம் செல்லும் இடத்திற்கு ஏற்றவாறு நம்மை மாற்றி கொள்கிறவர்களாக, இந்த உலகத்திற்கு உரிய வேஷத்தை தரித்தவர்களாக இருக்கிறோமா? அல்லது, வண்ணத்துப்பூச்சியை போல உருமாற்றம் பெற்று, நம் மனம் புதிதாகிறதினால், கிறிஸ்துவை போல மறுரூபமாகி கொண்டிருக்கிறோமா? உலகத்தின் வேஷம் ஒரு நாள் கடந்து போய் விடும் (1 கொரிந்தியர் 7:31).வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளாக வெளி தோற்றத்திற்கு பக்தியுள்ளவர்களாக வாழாதபடி, உள்ளேயே எல்லாவித அசுத்தத்தாலும் நிறைந்திருக்காதபடி, உள்ளான இருதயத்தில் மாற்றமுள்ளவர்களாக, பரிசுத்தமுள்ளவர்களாக வாழுவோமா? 'இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின (2 கொரிந்தியர் 5:17)' என்ற வசனத்தின்படி, வண்ணத்துப்பூச்சியை போல முற்றிலும் புதிதாக்கப்பட்டவர்களாக, மறுரூபமாக்கப்பட்டவர்களாக கர்த்தருக்காக எழும்பி பிரகாசிப்போமாக! ஆமென் அல்லேலூயா!
.
புதிதாக்கும் பரிசுத்தரே
புதுப்படைப்பாய் மாற்றுமையா
உடைத்துவிடும் உருமாற்றும்
பண்படுத்தும் பயன்படுத்தும்
.
ஆளுகை செய்யும் ஆவியானவரே
பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே
ஆவியானவரே - என் ஆற்றலானவரே
. 

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த நாளிலும் புதிய கிருபைகளால் எங்களை நிரப்பும். பச்சோந்திகளை போல நாங்கள் இடத்திற்கேற்றவாறு எங்களை மாற்றி கொள்ளாதவாறு, உள்ளான இருதயத்தில் புதிதாக்கப்பட்டவர்களாக, வண்ணத்துப்பூச்சியை போல நிறம் மாறாதவர்களாக, உமக்கென்று பிரகாசிக்கிறவர்களாக எங்களை மாற்றும். எங்களை காண்கிறவர்கள் உண்மையிலேயே கர்த்தரால் மாற்றப்பட்ட மறுரூபமாக்கப்பட்ட புதிதான சிருஷ்டிகளாய் எங்களை காண கிருபை செய்யும்.எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
**********
வேதாகம கேள்வி-பதில் போட்டி
 I. இந்த வார கேள்விகள்:  26 ஏப்ரல் 2015.
********************************************************
.
1. அந்தியோகியாவில் உள்ள கிறிஸ்தவர்கள், கொடிய பஞ்சம் வந்த
   போது எதை சேகரித்து யூதேயாவிலுள்ள சகோதரருக்கு
   கொடுத்தனுப்பினார்கள்?
.
2. வெளிப்படுத்தின விசேஷத்தில், வெட்டுக்கிளிகள் எத்தனை
   மாதமளவும் மனுஷரை சேதப்படுத்துவதற்கு அதிகாரம்
   உடையவைகளாயிருந்தன?
.
3. இஸ்ரவேலிலே நியாயந்தீர்ப்பது அரிதாயிருந்தால் யாரிடத்தில் போய்
   விசாரிக்க வேண்டும் என்று மோசே கூறினார்?
.
4. தானியேல் கண்ட தரிசனத்தில் எத்தனை மிருகங்கள் காணப்பட்டது?
.
5. மோசே கற்பலகைகைளை உடைத்தப்பின்பு எத்தனை கற்பலகைகளை
    வெட்டிக் கொண்டு வரும்படி தேவன் கூறினார்?
.
.
.

 உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற
வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும்.
.
.

குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய
பெயர்களை சரியாக எழுதவும்.கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை
சகோதரியா என்று எழுதவும். (Mr. - Mrs. - Miss. - or  Sis. - Bro.)
.
இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும்.
.
.
.

கடந்த 19 ஏப்ரல் 2015. கேள்வி பதில்கள்:
.
.

1. ஸீலோவாம் என்பதற்கு என்ன பொருள்?
.
சரியான பதில் : அனுப்பப்ட்டவன் யோவான் 9:7
2. எரேமியா தீர்க்கதரிசியை தண்ணீரில்லா உளையான துரவிலிருந்து தூக்கி உதவி செய்தவன் யார்?
.
 சரியான பதில் : எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக் .
எரேமியா 38:12,13
3. பவுலோடு கப்பற்சேதத்தில் இருந்தவர்கள் எத்தனை பேர்?
.
சரியான பதில் : 276 பேர்  அப் 27:37
4. பூலோகத்தில் சாட்சியிடுகிற மூன்று யாவை ?
..
சரியான பதில் : ஆவி, ஜலம் , இரத்தம் (1யோ. 5.8)
.
5. ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார்

 
    என்று புதிய ஏற்பாட்டில் கூறியிருக்கும் பழைய ஏற்பாட்டு விசுவாசி
    யார்?
.
சரியான பதில் : ஏனோக்கு (யூதா 15 )
ந்திரன் இரத்தமாக மாறும்
....
'பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்'. - (ஆதியாகமம் 1:14).
.
இந்த நாட்களில் நாம் எங்கு பார்த்தாலும் Blood Moon  என்று சொல்லப்படுவதை கேட்டு கொண்டிருக்கிறோம். சமூக வலையங்களில், அநேக சபைகளில் என்று எல்லாரும் அதை பற்றி பேசி கொண்டிருப்பதை காண்கிறோம். நான் ஆரம்பத்தில் இது எப்போதும் நடக்கிற சந்திர கிரகணம்தானே, இதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டங்கள் என்று நினைத்தேன். ஆனால் அதை குறித்து படிக்க வேண்டும் என்று நினைத்து படித்து, அது நமது ஆவிக்குரிய வாழ்விற்கு பிரயோஜனமாயிருக்கும் என்று எழுத ஆரம்பித்தேன்.
.
கிறிஸ்தவர்கள் யாரும் வான சாஸ்திரத்தை நம்புவதில்லை, நம்பவும் கூடாது. ஆனால் தேவன் சூரியனையும், சந்திரனையும் படைத்தபோது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்று சொன்னார். ஆகையால் அவைகள் நாம் வாழும் கடைசி நாட்களில் நமக்கு அடையாளமாக தேவனால் குறிக்கப்பட்டவைகளாக இருக்கின்றன.
.
'கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்' (யோவேல் 2:31) என்று வேதத்தில் வாசிக்கிறோம். சந்திரன் இரத்தமாக மாறுவது எப்போது நடைபெறுகிறது என்றால் சந்திர கிரகணத்தின் போது, பூமியானது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வருகிறது. அப்போது சூரியனுடைய ஒளிகதிர்கள் சந்திரனின் மேல் படாதபடி பூமி மறைக்கிறது. ஆனால் சில சூரியனுடைய கதிர்கள் வளைந்து சென்று சந்திரனில் படும்போது, சந்திரன் இரத்த நிலாவாக தெரிகிறது. இதனால் இது இரத்த நிலா என்றழைக்கப்படுகிறது.
.
இந்த சந்திர கிரகணம் வருடத்திற்கு இரண்டு முறை எப்போதும் நடைபெறுகிறது. நாம் எல்லாரும் அதை கண்டிருக்கிறோம். ஆனால் நான்கு சந்திர கிரகணங்கள் தொடர்ந்து அடுத்தடுத்து வரும்போது அது டெட்ராட் (Tedrad) என்றழைக்கப்படுகிறது. இது மிகவும் அபூர்வமான நிகழ்ச்சியாகும்.
.
சமீப காலத்தில் நான்கு சந்திர கிரகணங்கள் அடுத்தடுத்து, சென்ற வருடம், மற்றும் இந்த வருடத்திலும் வருவதாலும், மட்டுமல்ல அவை யூதர்களின் பண்டிகை நாட்களில் வருவதாலும் ஏதோ ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
.
இதுபோன்று யூதர்களின் பண்டிகை நாட்களில் நான்கு முறை டெட்ராட் என்று சொல்லப்படும் இரத்த நிலா முதலாம் நூற்றாண்டிலிருந்து பத்து முறையே நிகழ்ந்திருக்கிறது. கி.பி. 1492க்குப்பின் மூன்று முறையே நடைபெற்றிருக்கிறது. அவை:
.
Tetrad of 1493-1494
Tetrad of 1949-1950
Tetrad of 1967-1968
.
இந்த மூன்று முறை நிகழ்வுகளிலும் யூதர்களின் அரசியல் வாழ்வில் மிகப்பெரிய சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன.
.
முதலாம் டெட்ராடின் போது (1493 – 1494) ஸ்பெயின் நாட்டின் அரசன் பெர்டினான்டும், அரசி இசபெல்லாவும், யூதர்களுக்கு கத்தோலிக்க மதத்தை தழுவும்படி நான்கு மாதங்களே தவணை கொடுத்து, அதற்குள் மாறாவிட்டால் நாட்டை விட்டே சென்று விட வேண்டும் என்று ஆணையிட்டார்கள். அதன்படி 1,65,000 - 40,000 யூதர்கள் நாட்டை விட்டு கடந்து சென்று விட்டனர் என்று கூறப்படுகிறது. மீதமிருந்த யூதர்கள் தங்கள் விசுவாசத்தை அறிக்கை செய்ய வேண்டும். அவர்கள் கத்தோலிக்க மதத்தை தழுவினாலும், அவர்கள் சித்தரவதை செய்யப்பட்டு, அப்போதும் அவர்கள் கத்தோலிக்க மதத்திற்கு உண்மையாயிருந்தால் உயிரோடு விடப்பட்டார்கள். மறுதலித்தால் அவர்கள் உயிரோடு எரிக்கப்பட்டார்கள். அப்படி ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூதர்கள் எரிக்கபட்டதாக வரலாறு கூறுகிறது.
.
இரண்டாவது டெட்ராடின் போது, (1949 - 1950) கி.பி 70 நூற்றாண்டில் தீத்து ராயனால் உலகமெங்கும் சிதறின யூதர்கள் 1878 வருடங்கள் சொந்த நாடில்லாதபடி உலகமெங்கும் பரவியிருந்தாலும் தாங்கள் யூதர்கள் என்பதை அவர்கள் மறக்கவில்லை. தங்களுக்கென்று ஒரு நாடு வேண்டும் என்றும், தேவன் அவர்களை சந்திப்பார் என்றும் விசுவாசித்திருந்தார்கள். ஹிட்லர் கொடூரமான முறையில் ஏறக்குறைய ஆறு இலட்சம் யூதர்களை விஷவாயு மற்றும் சித்தரவதையின் மூலம் கொன்றப்பிறகு, இரண்டாம் உலக மகா யுத்தத்தின்பின்,  மே மாதம் 1949ம் ஆண்டு இஸ்ரவேல் என்னும் நாடு பிறந்தது. யூதர்களுக்கென்று ஒரு தனி நாடு கொடுக்கப்பட்டது. அது இந்த இரண்டாவது டெட்ராடின் போது நடைபெற்றது.
.
மூன்றாவது டெட்ராடின்போது, (1967- 68) இஸ்ரவேலர் ஏற்கனவே தனி நாடு பெற்றிருந்தபோதும் எருசலேம் அவர்களின் கீழ் இல்லாதிருந்தது. யூதர்கள் வேறு நாடுகளில் சிதறடிக்கப்பட்ட போதும் எருசலேமின் முகமாய் திரும்பி, எப்படியாவது எருசலேம் திரும்ப அவர்களிடம் கிடைக்க வேண்டும் என்று சுமார் 1878 வருடங்கள் ஜெபித்ததன் விளைவாக தேவன் அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றினார். 1967ஆம் ஆண்டு யோர்தான் நாடு இஸ்ரவேலின் மேல் படையெடுத்து வந்தபோது இஸ்ரவேலர் பதிலடி கொடுத்து போரிட்டபோது, போரில் ஜெயமெடுத்து, எருசலேம் இஸ்ரவேலரின் கைகளில் வந்தது. அல்லேலூயா!
.
இப்படி 500 வருடங்களில் யூதர்களின் வாழ்வில் மிக பெரிய நிகழ்வுகள் இந்த டெட்ராட் எனப்படும் இரத்த நிலாவின் போது நடைபெற்றது. இப்போது 500 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த டெட்ராட் எனப்படும் அரிய இரத்த நிலா கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது.
.
ஏப்ரல் 14, 2014 - பஸ்கா பண்டிகை
அக்டோபர் 8, 2014 - கூடார பண்டிகை
ஏப்ரல் 4, 2015 - பஸ்கா பண்டிகை
செப்டம்பர் 28 - கூடார பண்டிகை
.
இதில் ஏற்கனவே முதல் மூன்று சந்திர கிரகணங்களும் நடந்து முடிந்து விட்டன. இன்னும் ஒன்றே ஒன்று செப்டம்பர் மாதம் 28ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த செப்டம்பர் 28ம் தேதி யூதர்களின் வாழ்விலும், ஏன் உலகத்திற்குமே மிகபெரிய நிகழ்ச்சி ஒன்று நடைபெற இருப்பதாக வேத வல்லுநர்கள் கூறுகின்றனர்.
.
'கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்' என்ற யோவேல் தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனத்தின்படி கர்த்தருடைய பயங்கரமான நாள் வருவதற்கு முன் சந்திரன் இரத்தமாக மாறும். 'அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம் போலாயிற்று'(வெளிப்படுத்தின விசேஷம் 6:12) என்று இயேசுகிறிஸ்து ஆறாம் முத்திரையை உடைத்தபோது சந்திரன் இரத்தமாக மாறிற்று என்று பார்க்கிறோம்.
.
கர்த்தருடைய பயங்கரமான நாள் வருவதற்கு முன் இந்த இரத்தநிலா நிகழ்வதால் யூதர்கள் அதற்கு தங்களை ஆயத்தப்படுத்தி கொள்ள வேண்டும். அவர்கள் கிறிஸ்துவை மேசியாவாக ஏற்று கொள்ளாததால் அவர்கள் அந்திகிறிஸ்துவின் ஆட்சியை சந்திக்க வேண்டி வரும். ஆனாலும் இஸ்ரவேலர் அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள் என்று பவுல் அப்போஸ்தலன் எழுதுகிறார். 'இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபைவிட்டு, விலக்குவார் என்றும்ளூ  நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களுடனே செய்யும் உடன்படிக்கை என்றும் எழுதியிருக்கிறது' (ரோமர் 11:26-27).
.
சரி யூதர்களுக்கு இந்த காரியங்கள் சம்பவித்தாலும், உலகத்தில் இருக்கும் அனைவருக்குமே பெரிய ஒரு சம்பவம் நடைபெற இருப்பதாக வேத வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். ஒருவேளை இந்த சமயத்தில் இயேசுகிறிஸ்துவின் வருகை இருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். 'அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்'(மத்தேயு 24:36) என்று வேத வசனம் திட்டமும் தெளிவுமாக கூறியிருந்தாலும், வேத வல்லுநர்கள் அடையாளங்களை வைத்து கிறிஸ்துவின் வருகை இந்த நாளில் இருக்கலாம் என்று கருதுகின்றனர்.
.
கிறிஸ்துவின் வருகை செப்டம்பர் மாதம் 28ம் தேதியாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் நாம் அவரை சந்திக்க ஆயத்தப்பட வேண்டும். நான் ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற ஜெபம், 'இன்றைய நாளில் உம்முடைய வருகை இருக்குமென்றாலும் உம்மை சந்திக்கும்படி என்னை தகுதிப்படுத்தும், என் பாவங்களை கழுவி சுத்திகரித்தருளும், பாத்திரவானாய் மாற்றும்' என்பதே. அதுப்போல நாம் ஒவ்வொருவரும் அவருடைய வருகை இந்த நாளில் இருக்கும் என்றாலும் ஆயத்தமான நிலையில் காணப்பட வேண்டும். நாம் கடைசி நாட்களில் வந்திருக்கிறோம் எனபதை கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதையும், பூமி அதிர்ச்சிகளையும், உலகத்தில் நடக்கிற மற்ற கிரியைகளையும் காணும்போது அறிய முடியும். ஆனால் நாம் ஆயத்தமாயிருக்கிறோமா என்பதே நாம் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.
.
ஒருவேளை செப்டம்பர் 28ம் தேதிக்குள் கர்த்தர் வந்துவிட்டால் நாம் அவரை முகமுகமாய் சந்திப்போமா? அல்லது, குன்றுகளே, மலைகளே எங்களை மறைத்து கொள்ளுங்கள் என்று ஓடி ஒளிந்து கொள்வோமா? கர்த்தர் ஏற்கனவே எச்சரிப்பின் சத்தத்தை தொனிக்க செய்து, அநேகர் இந்த நாட்களில் இந்த இரத்த நிலாவை குறித்து பேசியும், பகிர்ந்தும் வருகிறார்கள். நாம் நம்முடைய இருதயத்தை கடினப்படுத்தி, வானம் உண்டானது முதல் எல்லாம் அப்படியே தான் இருக்கிறது என்று ஆயத்தமாக்கப்படாமல் இருப்போமானால் நம்முடைய நிலைமை பரிதாபமாயிருக்கும். ஆகையால் கர்த்தருடைய வருகைக்கு அவருடைய இரத்தத்தால் கழுவப்பட்டு, அவர் விரும்பும் பரிசுத்தத்தில் நிலைத்திருந்து ஆயத்தப்படுவோம். மாரநாதா! கர்த்தர் சீக்கிரம் வருகிறார்! ஆமென் அல்லேலூயா!
.
 இருள் சூழும் காலம் இனி வருதே
அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும்
திறவுண்ட வாசல் அடைபடுமுன்
நொறுங்குண்ட மனதாய் முன் செல்வோர் யார்?
.
 திறவுண்ட வாசல் அடைபடுமுன்
 நொறுங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்?
 நாட்கள் கொடியதாய் மாறிடுதே
 காலத்தை ஆதாயம் செய்திடுவோம் 
ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும் என்ற வார்த்தையின்படி நாட்கள் கர்த்தருடைய பயங்கரமான நாட்களுக்கு நேராக எங்களை வழிநடத்தி கொண்டிருப்பதால் எங்களை ஆயத்தப்படுத்தி கொள்ள கிருபை செய்யும். கர்த்தருடைய வருகை இந்த நாளில் இருக்குமென்றாலும் நாங்கள் ஆயத்தமான கன்னிகைகளை போல தயாராக இருக்கும்படி எங்களை கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவி சுத்திகரியும். அவருடைய வருகைக்கு எங்களைஆயத்தப்படுத்தும்.எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென். 
நாம் அனைவரும் ஜெபம் செய்திடுவோம்
...
எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள். - (1 பேதுரு 4:7).
.
ஆண்டவரை அதிகமாய் நேசிக்கிற ஒரு சகோதரி தான் வேலை செய்து வந்த அலுவலகத்திற்கு பல வருடங்களாக ஒரே பாதையின் வழியாக நடந்தே வந்து போய் கொண்டிருந்தார்கள். ஒரு நாள் ஆண்டவரிடம், 'அப்பா இத்தனை வருடங்களாக இதே பாதையில் நடந்தே வருகிறேனே, எனக்கு நீங்கள் ஒரு வாகனம் கூடதரவில்லையே' என்று கேட்டார்கள். ஆண்டவர் சொன்னார், 'மகளே இந்த வழியில் நீ நடந்து செல்வதால் எத்தனை தீமையான காரியங்களை நீ பார்க்க நேரிடுகிறது, ஆகவே அதற்காக ஜெபிக்கிறாய். இந்த ஜெபம் தேவை வேகமாக வாகனத்தில் சென்றால் யாரையும, எதையும்; பார்க்க நேரிடாதே' என்று பேசினார், ஆம், ஆண்டவர் நம் ஜெபங்களை எவ்வளவாய் எதிர்ப்பார்க்கிறார் பாருங்கள்!
.
'ஒரு சிறு பட்டணத்திலே ஞானமுள்ள ஒரு ஏழை மனிதன் இருந்தான் அவன் தன் ஞானத்தாலே அந்த பட்டணத்தை விடுவித்தான். ஆனாலும் அந்த ஏழை மனிதனை ஒருவரும் நினைக்கவில்லை' (பிரசங்கி 9:15). அதுபோல உங்களுடைய ஜெபத்தினால் உங்கள் பட்டணத்தை தேவன் இரட்சிப்பார். நான்கு சுவருக்கு மட்டும்தான் உங்கள் ஜெபம், கண்ணீர் தெரியும். ஆனால் அந்தரங்கத்தை பார்க்கிற தேவன் வெளியரங்கமாய் பதில் கொடுப்பதை நீங்கள் பார்க்க முடியும். யாரும் உங்களை நினைக்காமல் இருக்கலாம், ஆனால் கொர்நேலியுவின் ஜெபத்தை நினைவு கூர்ந்த தேவன உங்கள் ஜெபத்தையும் நினைவு கூருவார், பதில் கொடுப்பார்.
.
இந்த நாட்களில் நம் தேசத்திற்காக, மற்ற தேசங்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டியது எத்தனை முக்கியம்! இயற்கை சீற்றத்தால் நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கான பேர் அல்லவா? இப்போது இந்தியாவிலும் மிக பெரிய நில நடுக்கம் சேலத்தில் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சேதம் ஏதும் வராதபடி திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையும் அல்லவா?
.
பிரியமானவர்களே, இன்றைய முக்கிய தேவை ஜெபம். சபையார், ஊழியர்களுக்காக தவறாமல் ஜெபிக்க வேண்டும், கணவன் மனைவிக்காக, மனைவி கணவனுக்காக, இருவரும் சேர்ந்து பிள்ளைகளுக்காக கட்டாயம் ஜெபிக்க வேண்டும். நாம் அனைவரும் நம் தேசத்தின் பாதுகாப்பிற்காக ஜெபிக்க வேண்டும்.
.
அந்தகார சக்திகளின் கிரியைகள் தேசத்திலிருந்து அற்றுப்போக அவைகளின் கிரியைகளை கடிந்து கொண்டு ஜெபிக்க வேண்டும். நம் தேசத்திற்காக மட்டுமன்றி, உலக நாடுகளுக்காக, அதிலிருக்கும் கிறிஸ்தவர்களுக்காக, மற்றவர்களின் இரட்சிப்பிற்காக நாம் ஜெபிக்க வேண்டும். நாம் ஜெபிக்கும்போது, யாருமே பார்க்காதிருந்தாலும், கேட்காதிருந்தாலும், அந்தரங்கத்தில் பார்க்கும் தேவன் வெளியரங்கமாய் பதிலளிப்பார். தேசங்களில் எழுப்புதலை ஊற்றுவார். அல்லேலூயா!
.
'என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக்கொடுப்பேன் (2நாளா-7:14)என்று சொன்ன தேவன் நாம் நம்மை தாழ்த்தி ஜெபிக்கிற ஜெபத்திற்கு நிச்சயமாக பதில் கொடுப்பார்.
.
தேசங்களுக்காக ஜெபிப்போம், ஆத்துமாக்களுக்காக ஜெபிப்போம், நம் தேவைகளுக்காக, நம் குடும்பங்களுக்காக ஜெபிப்போம். கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார். ஆமென் அல்லேலூயா!
.
தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூறு
சேனையின் கர்த்தர் உன் நடுவில்
பெரிய காரியம் செய்திடுவார்
.
பலத்தினாலும் அல்லவே பராக்கிரமம் அல்லவே
ஆவியினாலே ஆகும் என்று
ஆண்டவர் வாக்கு அருளினாரே
ஜெபம்
எங்கள்அன்பின் பரம தகப்பனே நேபாளில் நடந்த பூமி அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்கிறோம் தகப்பனே. தங்கள் ஜீவனை இழந்து, தங்கள் உறவினர்களை இழந்து, தங்கள் உடைமைகளை இழந்து தவிக்கிற ஒவ்வொருவரையும் ஆறுதல் படுத்துவீராக. இதுப்போன்ற இயற்கை அழிவுகள் எங்கள் நாட்டில் வராதபடிக்கு காத்து கொள்வீராக. வரப்போகிற நாட்களில் இந்தியாவில் அதிக அளவு பூமிஅதிர்ச்சி ஏற்படும் என்று கேள்விப்படுகிறோமே, தேவன் தாமே எங்கள் நாட்டை பாதுகாத்து கொள்வீராக. எங்கள் ஒவ்வொருவரையும் ஜெபிக்கிறவர்களாக மாற்றும். திறப்பில் வாசலில் நின்று தேசங்களுக்காக ஜெபிக்கிறவர்களாக மாற்றும்.எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
தீமையாகும் நன்மைகள்
........................
உங்கள் நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள். - (ரோமர் 14:16).
.
நம்மில் யாரும் பெரிய பெரிய பாவங்களையோ, தவறுகளையோ அதாவது, கொலையோ, கொள்ளையோ செய்வதில்லை. அப்படிப்பட்ட பாவங்களை செய்ய நாம் திட்டமிடுவதுமில்லை. இப்படிப்பட்ட பயங்கர பாவங்களில் நம்மை பிசாசானவன் விழ வைக்க முடியாததால், அவன் தந்திரமான ஒரு வழியை கையாளுகிறான். அதில் ஒன்று தேவன் நன்மை என்று சொல்லுகிற காரியத்தில் நம்மை எல்லையை மீறச் செய்து பாவத்தில் விழ வைப்பதே. நம்முடைய வாழ்க்கையிலே வேத வசனம் நன்மை என்று செர்ல்லக்கூடிய காரியங்கள் எப்படி தீமையாக மாறக்கூடும் என்று ஒரு சில காரியங்களை பார்ப்போம்.
.
ஓய்வு தேவன் தந்த ஒரு கிருபை. வாரத்தில் ஒரு நாள் நாம் ஓய்வெடுத்து கொள்ளும்படி தேவன் நமக்கு அனுக்கிரகம் செய்திருக்கிறார். ஆனால் அந்த ஓய்வெடுத்தல் எல்லையை மீறும்போது அது 'சோம்பேறித்தனம்' என்னும் பாவமாக மாறுகிறது.
.
நமது நாவின் ஆசையை நிறைவேற்ற அநேக வகையான பழங்களையும் காய்களையும் உணவு வகைகளையும் தேவன் கொடுத்திருக்கிறார். இவற்றை நாம் மகிழ்வோடு உண்ணலாம். ஆனால் அது எல்லையை மீறும்போது அது 'பெருந்தீனி' என்னும் பாவமாக மாறுகிறது.
.
நம்மை நாம் கவனித்து கொள்வதிலும் நமக்குரியவற்றில் ஞானமாய் இருப்பதும் நல்லது. ஆனால் நம்மை குறித்து மட்டுமே யோசித்து கொண்டிருக்கும்போது அது 'சுயநலம்' என்னும் பாவமாக மாறுகிறது.
.
பிறரோடு நல்ல உறவு வைத்து கொள்ள தகவல் தொடர்பு அவசியமானது. எல்லோரோடும் நன்றாக பேச வேண்டும். பழக வேண்டும். ஆனால் அது எல்லையை மீறும்போது 'புரளிபேசும்' பாவமாக மாறுகிறது.
.
ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும், வேலை பார்க்கும் நாட்களில் வாழ்கிறோம். ஒருவரோடொருவர் பேசுவதிலும், உதவுவதிலும் தவறில்லை. ஆனால் அது எல்லையை மீறும்போது பஞ்சும் நெருப்பும் போல அந்த நட்பு இருவரையும் அழித்து விடும்.
.
நாம் எதிர்பாலரோடு பழகுவதில்லை என்று சொல்லி, ஜாக்கிரதையாய் வாழலாம். ஆனால் ஒரே பாலின நண்பர்களுக்குள் நட்பு அதிகமாகும் போது ஓரின சேர்க்கை என்னும் விகற்பம் எழக்கூடும்.
.
அழகான ஏதேன் தோட்டத்தில் பிசாசு ஆதாமையும், ஏவாளையும் வஞ்சித்ததை நாம் மறந்து விடக்கூடாது. நன்மையென்று நினைத்து நாம் செய்து கொண்டிருக்கிற காரியங்கள் தீமையை நோக்கி சென்று விடாதபடி எல்லைகளை கவனமாக காத்து கொள்வோம். எந்த காரியத்திலும் நாம் எல்லை மீறாதபடி, எல்லைக்குள் அடங்கி இருக்க கற்று கொள்வோம்.  வாழ்க்கையில் எந்த ஒரு காரியத்திற்கும் அடிமையாகாதபடி எல்லாவற்றிலும் சமநிலையான சிந்தனையையும், தெளிவையும் பெற்று வாழ்வோம். நன்மையான காரியங்கள் தீமையாகாதபடி எல்லாவற்றையும் எல்லைக்குள் வாழ்ந்து கர்த்தருக்கு சாட்சியாக இருப்போம். ஆமென் அல்லேலூயா!
.
எதை நான் பேச வேண்டுமென்று
கற்று தாருமையா
எவ்வழி நடக்க வேண்டுமென்று
பாதை காட்டுமையா
ஒளியான தீபமே
வழிகாட்டும் தெய்வமே
. 

ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, எந்த காரியத்திலும் நாங்கள் எல்லையை மீறி செய்யாதபடிக்கு ஜாக்கிரதையாய் எங்களை காத்து கொள்ள கிருபை செய்யும். எந்த காரியமும் எல்லையை மீறும்போது பாவம் என்று உணர்ந்து, அதை தவிர்த்து வாழ கிருபை செய்யும். ஞானத்தை தாரும்.   எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
***
உலகம், மாமிசம், பிசாசின் மேல் வெற்றி
.****************.
'அப்பொழுது நோவா தானியேல் யோபு ஆகிய இம்மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்'. - (எசேக்கியேல் 14:14).
.
இந்த அதிகாரத்தில் தேவன் எசேக்கியேல் தீர்க்கதரிச மூலம் 'மனுபுத்திரனே, ஒரு தேசம் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணிக்கொண்டேயிருந்து, பாவஞ்செய்தால்,  நான் அதற்கு விரோதமாக என் கையை நீட்டி' பஞ்சம், பட்டயம், கொள்ளை நோய், துஷ்ட மிருகங்கள் ஆகிய நான்கு தீங்குகளை அந்த தேசத்தின் மேல் வரப்பண்ணுவேன்' என்று கூறுகிறார். 'அப்பொழுது நோவா தானியேல் யோபு ஆகிய இம்மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள்  என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்' என்று பார்க்கிறோம்.
.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் மங்கின குதிரை தோன்றியதை நாம் எல்லோரும் தொலைக்காட்சியின் மூலம் பார்த்தோம். வெளிப்படுத்தின விசேஷத்தின் ஆறாம் அதிகாரம் 8-ம் வசனத்தின் முத்திரை உடைக்கப்பட்டு, மங்கின குதிரை வெளிப்படுகிறது. 'நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட மிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலை செய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது' (வெளிப்படுத்தின விசேஷம் 6:8).பாருங்கள், இந்த இடத்திலும், பஞ்சம், பட்டயம், சாவு, துஷ்டமிருகங்களினால் கொலை செய்யப்படுவதை காண்கிறோம்.
.
இந்த தீங்குகள் நேரிடும்போது, நோவா. தானியேல், யோபு போன்ற பழைய ஏற்பாட்டு பக்தர்கள் இருந்தாலும், அவர்கள் தங்கள் ஆத்துமாக்களை மாத்திரம் தப்புவிப்பார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. அது ஏன் அவர்கள் பெயர்கள் மாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது? ஏன் அவர்கள் மாத்திரம் தங்கள் ஆத்துமாக்களை தப்புவிப்பார்கள்?
.
நோவா: நோவா உலகத்தின் மேல் ஜெயம் கொண்டவராக காணப்பட்டார். எத்தனையோ பேர் அவரிடம் மழையா பெய்ய போகிறது? என்று அவரை கேலி பண்ணினாலும், பேழையை கட்டி அவரும், அவருடைய குடும்பமுமாக எட்டு பேர் மாத்திரம் காக்கப்பட்டார்கள். பேழைக்குள் இருந்தவர்கள் காக்கப்பட்டார்கள். பேழைக்கு வெளியே இருந்தவர்கள் அழிக்கப்பட்டார்கள். '...அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் காக்கப்பட்டார்கள். அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது,...' (1பேதுரு 3:21) என்று பார்க்கிறோம். பேழையிலே காக்கப்பட்டது, ஞானஸ்நானத்திற்கு ஒப்பாக கூறப்பட்டுள்ளதை பாருங்கள். 'விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்'  (மாற்கு 16:16) இந்த வார்த்தைகளின்படி, ஞானஸ்நானம் பெற்றவர்கள் காக்கப்படுவார்கள். மற்றவர்கள் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுவார்கள்.
.
தானியேல்: தானியேல் மாம்சத்தின் மேல் வெற்றி பெற்றவராக காணப்பட்டார். 'தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்'. - (தானியேல் 1:8). தானியேல் வாலிப பிராயத்தில் இருந்தாலும், திராட்சரசம் தனக்கு வேண்டாம் என்று தன் இருதயத்தில் தீர்மானம் செய்து அதன்படி நடந்து கொண்டார். நாமும் கூட மாம்சீகத்திலே வெற்றி பெற்றவர்களாக நடக்க வேண்டும். மாம்ச இச்சைகளுக்கும், ஜீவனத்தின் பெருமைக்கும் நீங்கினவர்களாக காணப்பட வேண்டும். மதுபானத்தையோ, சிற்றின்பங்களுக்கோ நாம் இடம் கொடாமல், பேரின்ப நாதரை மகிமைப்படுத்தும் வாழ்வையே வாழ வேண்டும். தானியேல் அவற்றை வெறுத்ததால் தாழ்ந்து போய் விடவில்லை. புறஜாதியான இராஜா கர்த்தரை மகிமைப்படுத்தும்படியாக வாழ்ந்து காட்டி, பெரும்பான்மையான மக்கள் மத்தியில் சிறுபான்மையான தானியேலின் தேவனே தேவன் என்பதை நிரூபித்து காட்டினார். கர்த்தர் அவரையும், அவருடைய தோழர்களையும், அடிமைகளாக வந்த அந்த நாட்டில் பெரிய அதிபதிகளாக மாற்றினார். அல்லேலூயா!
.
யோபு: யோபு சாத்தானின் மேல் வெற்றி பெற்றவராக காணப்பட்டார். சாத்தான் எத்தனை தான் சோதனைகளை கொண்டு வந்தாலும், கர்த்தரை தூஷிக்காதபடி வாழ்ந்து தன் உத்தமத்திலே நிலை நின்றவர். தேவனே சாத்தானிடம் அவரை குறித்து சவால் விடும்படி உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தார். அவர் தன் பிள்ளைகள், சொத்துக்கள், சுகங்கள் எல்லாவற்றையுமே இழந்துவிட்ட போதிலும், தேவனை தூஷிக்காதபடி பரிசுத்தமாய் வாழ்ந்த அவருக்கு எல்லாமே இரட்டிப்பாய் திரும்பவும் கிடைத்தது.; தேவனுக்கு முன்பாக சாத்தான் தோல்வியடைந்தான். இந்த நாளில் தேவன் நம்மை குறித்து சாத்தானிடம் சவால் விடும்படியான வாழ்க்கையை நாம் வாழ்கிறோமா, அல்லது அவர் வெட்கப்படும்படியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?
.
இப்படிப்பட்ட மூன்று புருஷர்களை போல நாமும் இந்த கடைசி நாட்களில் வாழும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம். இந்த மனிதர்களை போல உலகத்தின் மேலும், மாம்சத்தின் மேலும், சாத்தானின் மேலும் வெற்றி பெற்றவர்களே, உலகத்தில் வர இருக்கிற பஞ்சம், பட்டயம், கொள்ளைநோய், துஷ்ட மிருகங்களின் பாடுகளிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். அவர்களின் ஆத்துமாக்களே தப்புவிக்கப்படும். நாம் அவர்களை போல வாழ்ந்து, வரப்போகும் உபத்திரவ மற்றும் மகா உபத்திரவ காலத்திற்கு தப்புவோமா? ஞானஸ்நானம் எடுக்காதவர்கள், சீக்கிரமாய் ஞானஸ்நான சாட்சிக்கு நம்மை ஒப்புக்கொடுப்போமா? கர்த்தர் சீக்கிரம் வருகிறார். ஆயத்தமாவோம். ஆமென் அல்லேலூயா!
.
சுயவெறுப்பின் கோட்டிற்கு வா - நீ வா
நயமாக அழைக்கிறார் வா - நீ வா
உலக மாமிச ஆசை
வீண் என தள்ளி விட்டு வா வா - நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா
.
ஆசைகள் அனைத்தையும் அழித்திட வா - நீ வா
உன்னை சிலுவையில் பதித்திட வா - நீ வா
இச்சையின் வலையில் நீ
சிக்கி விடாதே வா, வா - நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா
. 

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, உலக, மாமிச இச்சைகளை வெறுத்து, சாத்தானின் மேல் ஜெயம் எடுத்து கர்த்தருக்காக வாழும்படியாக எங்களை ஒப்பு கொடுக்கிறோம் தகப்பனே. நோவா, தானியேல், யோபுவை போல வாழவும், வரப்போகும் மகா உபத்திரவ காலத்திற்கு எங்களையும், எங்கள் குடும்பங்களையும் தப்புவித்து கொள்ளும்படியாக எங்களை அர்ப்பணிக்கிறோம். ஞானஸ்நான சாட்சிக்கு ஒப்புக்கொடுக்காதவர்கள் இந்த கடைசி நாட்களில் ஒப்புக்கொடுக்கவும் கர்த்தருடைய வார்த்தைக்கு செவி கொடுத்து கீழ்ப்படியவும் கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
**********
இன்றும் என்றும் ஜீவிக்கிறார்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார்; அவர் இங்கேயில்லை; இதோ,  அவரை வைத்த இடம். -  (மாற்கு 16:6).
.
மூன்று மனிதர்கள் மற்றவர்களுக்கு விரோதமாக குற்றம்செய்தார்கள் என்று விசாரிக்கப்பட்டார்கள். இருவர் தவறு செய்திருந்தனர் ஒருவர் எந்த தவறும் செய்யவில்லை.
.
மூன்று பேரும் அரசாங்கத்தால் விசாரிக்கப்படடனர் இருவருக்கு அவர்கள் செய்த குற்றத்திற்கு சரியான தண்டனை விதிக்கப்பட்டது ஒருவருக்கு சரியான தீர்ப்பு வழங்கப்படவில்லை.
.
மூன்று பேருக்கும் சிலுவை சுமக்க கொடுக்கப்பட்டது இருவர் அதை சுமக்கும்படி தவறு செய்திருந்தனர் ஒருவர் அதை சுமக்கும் அளவு எந்த தவறும் செய்யவில்லை.
.
மூன்று பேரையும் கிண்டல் செய்து அவர்கள் மேல் துப்பினர் இருவர் திரும்ப திட்டி சபித்து, அவர்கள் மேல் திரும்ப துப்பினர் ஒருவர் அமைதியாக எல்லாவற்றையும் சகித்துக் கொணடார்.
.
மூன்று பேரையும் சிலுவையில் ஆணிகளால் அறைந்தார்கள் இருவர் அதற்கு பாத்திரராயிருந்தார்கள் ஒருவர் அதற்கு எந்தவிதத்திலும் பாத்திரராயிருக்கவில்லை.
.
மூன்று பேரும் சிலுவையில் தொங்கும்போது பேசினர் இருவர் வாக்குவாதம் செய்தனர் ஒருவர் அப்படி வாக்குவாதம் செய்யவில்லை.
.
மூன்று பேரும் மரணம் வரும் நிச்சயித்திருந்தனர் இருவர் அதை எதிர்த்தார்கள்ஒருவர் எதிர்க்கவில்லை.மூவரும் சிலுவையில் மரித்தார்கள் மூன்று நாட்கள் கழித்து, இருவருடைய கல்லறைகளில் அவர்களுடைய உடல் இருந்தது  ஒருவருடைய உடல் அங்கே இல்லை அவர் உயிர்த்தெழுந்தார் ஆமென் அல்லேலூயா!
.
உலகத்திலே வந்த எந்த மனிதனிலும், மனிதனாய் உலகத்தில் வந்து அவதரித்த தெய்வமாகிய கிறிஸ்துவே மரித்து உயிர்த்தெழுந்து இன்னும் ஜீவிக்கிறவராக இருக்கிறார். அவர் ஜீவிப்பதால் நாம் ஜீவிக்கிறோம். அவர் ஜீவிப்பதால் நாளைய தினம் குறித்து கவலையோ பயமோ நமக்கு இல்லை. ஏனென்றால் நம்முடைய எதிர்காலமும்,  நம்முடைய வாழ்க்கையும் அவருடைய கரத்தில் இருக்கிறது. அதனால் நாம் வாழுகிற வாழ்க்கைக்கும் பிரயோஜனமுண்டு. நாம் நமக்கு வருகிற எந்த பிரச்சனைகளைக் குறித்தும் கலங்கி தவிக்க வேண்டிய அவசியமில்லை. நம்முடைய வாழ்க்கை அவருடைய கரத்தில் இருப்பதால் அவர் அந்த பிரச்சனைகளுக்கு தீர்வை நமக்குத் தருவார்;. நாம் விசுவாசத்தோடு அதை அவரிடம் கேட்க வேண்டும். அப்போது அவர் நமக்கு நன்மையாய் எல்லாவற்றையும் மாற்றித் தருவார். ‘அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்’.               -  (ரோமர் 8:28). இந்த சத்தியம் நம் உள்ளத்தில் ஆழமாக பதிந்து விட்டால் போதும், நம்மை எதுவும், யாரும் அசைக்கமுடியாது.
.
எல்லாம் நன்மையாக என் இயேசு மாற்றிடுவார்
தாங்கொண்ணா துன்ப துயரங்கள்
தவிக்க வைக்கும் சூழ்நிலைகள்
எல்லாம் நன்மையாக என் இயேசு மாற்றிடுவார்
.

ஜெபம்
எங்கள் மேல் கண்களை வைத்து ஆலோசனை சொல்லும் எங்கள் நல்ல தகப்பனே, உம்மைத் துதிக்கிறோம். இயேசுகிறிஸ்து தமக்கு வந்த எந்த துன்பத்திலும் வாய்த்திறவாமல் எல்லாவற்றையம் சகித்து எங்களுக்காக சிலுவை சுமந்து, எங்களுக்கு வாங்கிக் கொடுத்த இரட்சிப்பிற்காக ஸ்தோத்திரம். அவர் உயிரோடு எழுந்தபடியால், நாங்கள் இன்று ஜீவிக்கிறோம். எங்களது துன்பமான சூழ்நிலைகளையும் அவர் நன்மையாக மாற்றி எங்களை ஆறுதல்படுத்தி ஆசீர்வதிக்கிறதற்காக ஸ்தோத்திரம்.  எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.