Sunday, April 26, 2015

உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக் கொடுத்து, கொலை செய்வார்கள்"

"உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக் கொடுத்து, கொலை செய்வார்கள்"


120 சீனர்களை புனிதர்களாக அர்ச்சிப்பு செய்த போப் ஒருவரின் கதையை மட்டும் அடிக்கடி கூறி கொண்டே இருந்தார்...

'அன் வாங்' என்ற சிறுமி ஒருத்தியின் கதை தான் அவரை அந்தளவு கவர்ந்திருந்தது. 

சீன கிறிஸ்தவர்களால் மறக்க முடியாத ஒன்று கம்யூனிஸ்டுகளின் பாக்சர் புரட்சி. மிஷனரிகள், பாதிரியார்கள், குழந்தைகள், பெண்கள் என பலர் 'கிறிஸ்தவர்கள்' என்ற ஒரே காரணத்திற்காக கொலை செய்யப்பட்ட காலம்.

ஜூலை 1,1900 அன்று 'டாநிங்க்' என்ற சீன கிராமத்து கிறிஸ்தவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். சிக்கிய அத்தனை கிறிஸ்தவர்களையும் அங்கிருந்த தேவாலயத்தில் அடைத்த பாக்சர்கள், சீனாவில் அந்நிய மார்க்கத்தை ஏற்க அரசாங்க அனுமதி இல்லை என்றும் கட்டளையை ஏற்காத மக்களிற்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறினார்களாம்.

அதற்கு அஞ்சி பலர் கிறிஸ்துவை கைவிடுவதாக அறிவித்து செல்ல ஆரம்பித்தனர். ஆனால் சிலர் தேவாலயத்தை விட்டு நகரவில்லை. அவர்களுள் இன்று பெயர் காணப்பட்டவர்கள் அன் வாங், ஆன்று டிபிங்க், லூசியா வாங், அவரின் 5-வயது மகள், 9-வயது மகன் ஆகியோர்.

அன் வாங் சிறு வயதில் இருந்தே கிறிஸ்தவ மார்க்கத்தில் வளர்க்கப்பட்டவள். அந்த நாளன்று அவளிற்கு 14 வயது எட்டியிருந்தது. பாக்சர்களுக்கு அஞ்சிய அன் வாங்கின் வளர்ப்பு தாய் கிறிஸ்துவை கைவிடுவதாக அறிவித்து அங்கிருந்து விலகினார். அன் வாங் வராமல் நிற்பதை கண்டு அவளது கையை பிடித்து இழுக்க அவள் இன்னொரு கையால் தேவாலயத்தின் வாயிற்கதவை பிடித்து கொண்டு வர மறுத்து அழுதாளாம். போராடி பார்த்த வளர்ப்பு தாய் அன்வாங்கை விட்டு சென்று விட்டார்.

மறுதலிக்க மறுத்த கிறிஸ்தவர்களை புரட்சியாளர்கள் தேவாலயத்திலேயே அடைத்துவிட்டனர். இருளில் கிடந்தால் மனம் மாறலாம் என்பதற்காக தான். ஆனால் அன் வாங்கும் அவளுடன் இருந்த பிற கிறிஸ்தவர்களும் பின் வாங்கவில்லை. தேவாலாயத்தில் இருந்த மெழுகுவர்த்திகளை கொழுத்திய அன் வாங் ஜெபிக்க ஆரம்பித்துவிட்டாள். அவளுடன் சேர்ந்து பிற கிறிஸ்தவர்களும் இரவு முழுவதும் ஜெபமாலைகளுடன் பிராத்தனையில் அமர்ந்துவிட்டனர்.

அதிகாலையில் தேவலாயத்திற்கு வந்த புரட்சியாளர்கள், தேவாலயத்தை திறந்தனர். மெழுகுவர்த்தி ஒளியில் ஜெபத்தில் ஈடுபட்டிருந்த அவர்களை கண்ட பாக்சர்களுக்கு ஆத்திரம் அதிகமானது. அங்கிருந்தவர்கள் எல்லாரும் அடிக்கப்பட்டு தேவாலயத்தை விட்டு வெளியே தள்ளப்பட்டனர். 

அவர்கள் மறுதலிக்காமல் உறுதியாய் நிற்க சிரச்சேதம் முடிவு செய்யபட்டது. அத்தனை கிறிஸ்தவர்களையும் கொலை செய்ய பாக்சர்கள் இழுத்து சென்றனர். போகும் வழியிலும் அன்வாங் ஜெபித்து கொண்டே சென்றாள். அவளுடன் இருந்த பிறரும் பாடல்களையும் வசனங்களையும் கூறி கொண்டே சென்றார்களாம்.

'வெய்' என்ற சீன கிராமத்து தேவாலயம் முன்பு சிரச்சேதம் நிறைவேற்றப்பட்டது. வரிசையாக ஒவ்வொரு கிறிஸ்தவரும் தலை துண்டிக்கப்பட்டனர். பாக்சர்களுக்கு அஞ்சாத அன் வாங் இரத்தம் படிந்த அவ்விடத்தில் முழங்கால் படியிட்டு தேவாலயத்து சிலுவையை நோக்கியவாறு கண்களை மூடிவிட்டாள்.

அவளது தலையை துண்டிக்க வந்த புரட்சிகாரன், அவளை நோக்கி, "திருச்சபையை மறுதலி" என்றான். அன்வாங் பதில் சொல்லவில்லை. அவளை தொட்டு மீண்டும் ஒருமுறை சொன்னான். கண்ணை திறந்த அன்வாங், "என்னை தொடாதே, கிறிஸ்துவை மறுதலிக்க என்னால் முடியாது, என்னை கொன்றுவிடு"என்றிருக்கிறாள்.

அவள் இளவயதுள்ளவளாயும் அழகாகவும் இருப்பதை கண்ட அவன் அவளை கொல்ல மனதில்லாமல், "நீ கிறிஸ்துவை விட்டால், நல்ல வசதியுள்ள குடும்பத்தில் உன்னை மணம் முடித்து வைப்பேன். உன் வாழ்நாள் எல்லாம் நீ இன்பமாக வாழலாம்" என்று சொல்லியிருக்கிறான். அதற்கு அன் வாங் திருச்சபையை காட்டி, "நான் கிறிஸ்துவிற்கு மணப்பெண்ணாய் நிச்சயம் செய்யபட்டவள்" என்று சொல்லிவிட்டாள்.

இதனை கேட்டு எரிச்சலுற்ற அந்த புரட்சிகாரன், அவளது இடது தோள்பட்டையில் இருந்து சிறு மாமிசத்தை வெட்டி விட்டான். "தேவாலயத்தை மறுதலிக்க போகிறாயா மாட்டாயா?" என்று மீண்டும் கேட்க அன் வாங் "மாட்டேன்" என்றாள். இடது கை வெட்டபட்டது. அன் வாங் மண்டியிட்ட வாறே, "பரலோகத்தின் கதவு திறந்திருக்கிறது, இயேசு, இயேசு, இயேசு" என்று சத்திமிட்டாள். அவள் அவ்வாறு சத்தமிட அவளது தலையும் வெட்டபட்டு தரையில் விழுந்தது.

தலையை இழந்த நிலையிலும் அன் வாங்கின் உடல் முழங்கால் இட்டவாறே இருந்தது. அந்த புரட்சிகாரன் முதுகு பகுதியை எட்டி உதைக்க அந்த  உடலும் நிலத்தில் விழுந்தது. கொலை செய்யப்பட்ட 11 பேரையும் (அவர்களில் 6 நபர்கள் அடையாளம் தெரியவில்லை) பாக்சர்கள் ஒரே குழியில் புதைத்து விட்டனர்.

இதனை கண்ட வாங் லௌ என்ற 80 வயது மூதாட்டி அன் வாங்கின் கொலையை தன் நாற்குறிப்பில் எழுதிவிட்டு மறைந்துவிட்டார். அன்வாங்கின் வாழ்வை வெளி உலகத்திற்கு கொண்டு வந்த வாங் லௌ சீன மக்களால் இன்றும் மதிக்கப்படுகின்றார்.

பாக்சர் புரட்சி தணிந்தது. நவம்பர் 6,1901 அன்று சீன கிறிஸ்தவர்கள் அந்த உடல்களை மீண்டும் தோண்டி எடுத்தனர். ஒரு வருடத்திற்கு மேலாகியும் அந்த உடல்கள் எல்லாம் சிதையாமல் இருந்ததாம். இந்த செய்தி அங்கு வேகமாக பரவ, சீன கிறிஸ்தவர்கள் பலர் அவ்விடத்தில் கூடி அழுது அந்த உடல்களை முறையாக அடக்கம் செய்தனர்.

அன் வாங்கின் பாட்டியார், தந்தை, வளர்ப்பு தாய் என கிறிஸ்துவை கைவிட்ட அனைவரும் கிறிஸ்துவை ஏற்றனர். கத்தோலிக்க சபை அன் வாங்கை புனிதாராக அறிவித்தது. இன்றும் சீனாவில் அன் வாங்கின் வாழ்வு மறக்கப்படவில்லை....

Monday, February 18, 2013

அன்பான இறைவனிடம் நாம் கொண்ட அன்பு வீணல்ல

"கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்; அவர் மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்" - சங்கீதம் 34:8

இறைவனின் அன்பை சுவைப்பதும் அவர் மீது அன்பு செலுத்துவதும் பைத்தியகாரத் தனம் என்று எண்ணப்படும் காலம் இது! வாய்விட்டு சிரிக்க இயற்கையை ரசிக்க அன்பை ருசிக்க ஓய்வு இல்லாத கொடிய காலம் தான் இது!

இன்று அன்பும் அறமும் கேலிப் பொருள்களாகிவிட்டன. இறைவனும் இறை நம்பிக்கையும் கற்பனை என்றாகிவிட்டன. உண்மையையும் நன்மையையும்  உரைக்கும் நன்னூல்கள் கட்டுக் கதைகள் எனப்படுகின்றன. காலம் கடினமாகிறது! மனித மனம் இன்னும் கல்லாகி வருகிறது!

இத்தகைய கொடிய வலையில் தவறி விழ தயாராக இருக்கும் அடுத்த நபராக நாம் கூட இருக்கலாம். இந்த பதிவு சலித்துப் போன உங்கள் உள்ளத்திற்கு புத்துணர்வு கொடுக்கும்! அன்பின் அறத்தின் இறை நம்பிக்கையின் அழகை உங்களுக்கு மீண்டும் உணர்த்தும்! மனதை விட்டு பிரிந்து சென்று கொண்டிருக்கும் அன்பையும் அறங்களையும் தடுத்து நிறுத்தும்! அவற்றின் மேன்மையை உணர வைக்கும்! 

வாருங்கள் உண்மையான உலகிற்கு செல்லலாம்...


1) இந்த காலத்தில் "உதவிக்கரம் கொடுப்பது" என்பதெல்லாம் ஒரு பொருட்டாக கூட கருதப்படுவது இல்லை. "நான் நல்லபடி இருக்கிறேன் அது எனக்கு போதும்", "எனக்கே ஆயிரம் துன்பங்கள் நான் எப்படி உனக்கு உதவ முடியும்?", "மனிக்கவும், முதலில் என்னை நான் கவனிக்க வேண்டும்" என்ற வார்த்தைகளையே இன்று அடிக்கடி கேட்க முடிகிறது. இத்தகைய காலத்தில் இந்த ஓட்டப்பந்தைய வீராங்கனை என்ன செய்கிறார் என்று பாருங்கள்! இலக்கை எட்ட இன்னும் சிறிது ஓடினாலே போதும், ஆனால் அதற்கு பதிலாக மயங்கிய இன்னொரு வீராங்கனைக்கு தோல் கொடுக்கும் இவரை என்ன சொல்வது?


2) "நான் தப்பி விட்டேன் அது போதும்" என்கிற உலகில் வாழும் நபர் என்ன செய்கிறார்? மழை வெள்ளத்தில் இருந்து தப்பிவிட்டோம் என்று மகிழ்வதை விட்டுவிட்டு இவர் செய்யும் 'தேவையில்லாத' காரியத்தை பாருங்கள்! "வெறும் பூனைகளுக்காக இந்த ஆபத்தான செயல் தேவையா?" என்றெல்லாம் சிந்திப்பதில்லை. இத்தகைய நற்செயல்களில் தான் ஆண்டவர் வாழ்கிறார்... 


3) பள்ளி கூடத்திற்கு செல்லாமல் இந்த சிறுவர்கள் செய்யும் குறும்பு தனத்தை பாருங்கள். தவறி ஆற்றில் விழுந்தால் என்ன செய்வார்கள்? இருந்தாலும் தங்கள் உயிரை காட்டிலும் ஒரு நாய்க்குட்டியின் உயிர் இவர்களுக்கு மேலாக தெரிகிறது! இவ்வாறு தான் நம் ஏசுவும் சேற்றில் விழுந்த நமக்கு கரம் கொடுத்தார்...


4) விலைவாசி விண்ணை எட்டிவிட்டது. இருந்தாலும் இந்த கடைக்காரர் வீடு இல்லாதவர்களுக்காக வெள்ளி கிழமைதோறும் மாலை 3-5 மணி நேரத்தில் இலவசமாக உணவு வழங்குவதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளார். இவருக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை? கடவுளும் இல்லை புண்ணியமும் இல்லை என்கிற நாத்திக உலகில் இந்த வீண் சேவை எதற்கு? இதில் இவருக்கு என்ன லாபம் கிடைக்கப் போகிறது?


5) மரியா என்ற ஆனாதை பெண் தனக்கு துணையாக டாமி என்ற நாய் குட்டியை அன்புடன் வளர்த்திருக்கிறார். தினமும் டாமியுடன் பக்கத்து தெரு சர்ச்சிற்கு சென்று வழிபடுவது இவரது வழக்கமாம். இன்று மரியா இறந்து விட்டார். டாமி தெருவில் சுற்றி திரிகிறது. தினமும் ஆராதனை நடக்கும் வேளையின் போது டாமி சர்ச்சிற்கு வந்து விடுகிறதாம்! சத்தமிடாமல் அமைதியாக சர்ச்சில் உட்கார்ந்து கொண்டு வந்து போகிற நபர்களை பார்த்து கொண்டே இருக்கிறதாம்! என்றாவது ஒருநாள் அங்கு மரியா வருவார் அவரை சந்திக்கலாம் என்று டாமி தினமும் இவ்வாறு செய்து வருகிறதாம். அந்த சர்ச் பாதிரியார், "டாமி மரியாவை நிச்சயமாக பரலோகில் சந்திக்கும்" என்கிறார்...

இறைவனை உணர, அன்பின் அழகை அறிய, தியாகத்தின் மேன்மையை அறிய மனம் வேண்டும்! அந்த மனம் இன்று நாத்திகத்தால் அழிந்து வருகிறது! நாத்திகம் ஈர்ப்புடையதே, ஆனால் மன நிறைவை அளிக்க அதனால் இயலாது! இறைவனின் அன்பை உணர்ந்து பாருங்கள், அவரது அன்பே மனநிறைவு அளிக்கும் உண்மையான இன்பம்!

Tuesday, January 1, 2013

2013ஆம் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், இத படிங்க ப்ளீஸ்....

நண்பர்களே,
இந்த ஆண்டிற்கான ஒரு வாழ்த்து செய்தி... நீங்கள் இறை நம்பிக்கை உடையவரா, இல்லாதவரா என்று தெரியாது... யாராக இருந்தாலும் இந்த ஆண்டில் கடவுள் உங்களுக்கு தேவையானதை தந்து காத்து நடத்துவார்....

ஒரு சின்ன உண்மை சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பம்...

ஒரு காட்டில் ஒரு சிங்கக்குட்டி தவறி பள்ளத்தில் விழுந்துவிட்டது... அதனை கண்ட அந்த சிங்கக்குட்டியின் தாய் என்ன செய்கிறது என்று பாருங்கள்...


அது செங்குத்தான பள்ளம், அதில் இருந்து எப்படியாவது அந்த குட்டியை  எடுக்க அந்த தாய் போராடுகிறது... மற்ற சிங்கங்களை அழைத்து வருகிறது... அனைத்து சிங்கங்களும் குட்டியை எப்படியாவது தூக்க போராடுகின்றன....


ஆனால், எந்த சிங்கமும் இறங்க துணியவில்லை... தாய் சிங்கமே கீழே பார்த்து பார்த்து இறங்கி குட்டியை அடைகிறது...


அதனை கவ்வி கொண்டு சிரமப்பட்டுமேலே மேலே எடுத்து வந்தது...


தன் நாவால் தடவி குட்டியின் மேல் தனக்குள்ள அன்பை காட்டுகிறது...


இதுதாங்க அன்பு, ஐந்து அறிவு ஜீவனுக்கு கூட இறைவன் எவ்வளவு அழகான குணத்தை தந்திருக்கிறார் பார்த்தீர்களா?

ஒரே ஒரு முறை கீழுள்ள வசனத்தை படிங்க...

"அன்பார்ந்தவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை: ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார்" - 1 யோவான் 4:7,8

Monday, December 31, 2012

பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாமல் இருக்கிறார்கள்

உங்களால் முடியுமா?

மன்னிப்பு.... எல்லாராலும் அருள முடியாது.... மனப்பூர்வமாக ஒருவர் தனக்கு செய்த தீங்கை மன்னிக்கிறார் ஒரு இளம்பெண்... அவருக்கு நேர்ந்த துன்பம் நமக்கு நேர்ந்து இருந்தால் நம்மால் இவ்வாறு மன்னிக்க முடியுமா? இந்த உண்மை சம்பவம் உங்களுக்கு மன்னிப்பின் அழகை என்ன என்று காண்பிக்கும்....

ஜேக்குலின்
ஜேக்குலின்

இந்த பெண்ணின் பெயர் ஜேக்குலின்... அவர் எந்த நாட்டை, எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை....

இவரது முகத்தை பாருங்கள்.... இது தான் இவரது உண்மையான உருவம்... நம் எல்லாரையும் போல சந்தோசமாக வாழ்ந்தவர்... இவர் கல்லூரியில் இவருடன் படித்த அனைவரும் ஜேக்குலின் போன்ற அமைதியான பாசமான தோழி இல்லை என்று கூறுகின்றனர்... ஜேக்குளினிற்கு தாய் இல்லை... தன் தந்தையையும் ஒரே அண்ணனையும் விட்டால் அவருக்கு வேறு யாரும் இல்லை...

ஜேக்குலினின் அழகான வாழ்வில் ஒரு துயர சம்பவம் நேர்கிறது...தன் இரு தோழிகளுடன் அவர் ஒரு சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தார்... அப்பொழுது மது அருந்திவிட்டு காரில் வேகமாக வந்த ஒரு வாலிபர் அவர்கள் மீது மோதிவிட்டார்...

ஜேக்குளினின் கண் முன்பே அவரது இரண்டு தோழிகளும் இறந்தனர்... ஜேக்குலின் உடல் முழுவதும் சிதைந்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்... அவரை அப்படியே விட்டுவிட்டு அந்த வாலிபர் ஓடி விட்டார்...

அங்கு இருந்த சில நல்மனம் படைத்த மனிதர்களால் அவர் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு சேர்க்கப்பட்டார்... மருத்துவர்கள் மிகவும் போராடி ஜேக்குளினின் உயிரை காப்பாற்றினர்...

ஆனால்.....

ஜேக்குலினின் தந்தை அவருக்கு ஒரு பெரிய ஆறுதல்...
ஜேக்குலினின் தந்தை அவருக்கு ஒரு பெரிய ஆறுதல்... 

இதுதான் அவருக்கு விபத்திற்கு பின் கிடைத்த உருவம்... ஜேக்குலின் மனம் உடைந்தார்... அவரது தந்தையும் அண்ணனும் அவருக்கு ஆறுதலாக இருந்தனர்... தன் வயது மக்களை கண்டால் ஜேக்குளினிற்கு கண்களில் கண்ணீர் வருகிறது.... தன் தோழிகள் நண்பர்கள் யாரும் இப்பொழுது அவரை காண வருவதில்லை... அவருக்கு எல்லாமே அவரது தந்தையும் அண்ணனும் தான்...

ஜேக்குலின் அவரது அண்ணனுடனும் தந்தையுடனும்
ஜேக்குலின் அவரது அண்ணனுடனும் தந்தையுடனும்

அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்... அந்த வாலிபரின் தாய் தன் மகனால் ஜேக்குளினிற்கு நிகழ்ந்த கொடுமை அறிந்து ஜேக்குலினை சந்தித்து கண்ணீர் மல்க அழுதார்... ஜேக்குலின் என்ன கூறினார் தெரியுமா?

"அவர் வேண்டுமென்றே அப்படி செய்யவில்லையே, தெரியாமல் நடந்த விபத்து தானே, எனக்கு அவர் மேல் வருத்தம் இல்லை" என்றார்.... அவரது இளகிய மனதை கண்டு அங்கிருந்த அனைவரும் துடித்து போயினர்...

இந்த சம்பவம்  இணையத்தில் வெளியாய் இருக்கிறது... ஒரு நபர் இவ்வாறு கமெண்ட் செய்திருந்தார், "எனக்கு ஜேக்குலின் போன்ற அழகான பெண் யாரும் தெரியாது... அவரது உருவத்தில் இயேசு நாதரை காண்கிறேன்..."

ஒரு  முறை கீழுள்ள வசனத்தை படியுங்கள்...

"கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்த பொழுது, அவரையும், அவருடைய வலது பக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடது பக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள். அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்" - லூக்கா 23:33,34

அன்பில் உயர்ந்தவர் பிதாவா அல்லது குமாரனா? - படியுங்கள் ப்ளீஸ்!

ஒரு கதையை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விருப்பம், சிறு கதை தான்.... அதன் பின் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் கூறுங்கள் ப்ளீஸ்...

ஒரு அன்பான தந்தை.... அவர் ஒரு ரயில் பாலத்தில் பணி புரிந்து வந்தார்.... அந்த ரயில் பாலம் சற்று வித்தியாசமானது.... ஆற்றின் மேல் அமைக்கப்பட்டிருந்தது.... ஏதாவது பெரிய கப்பல் வந்தால் அந்த பாலத்தை தாண்டி செல்ல முடியாது.... அப்பொழுது இவர் தான் அந்த பாலத்தை இயந்திரங்களால் இயக்கி அவற்றை சிறிது நேரம் மேல்நோக்கி பிளந்து நிற்குமாறு செய்ய வேண்டும்... அந்த நேரம் எந்த ரயிலும் அந்த பாலத்தில் வந்து விடக்கூடாது என்பதற்காக சிவப்பு ஒளி விளக்கை ஒளிரச்செய்து விடுவார்... கப்பல் தாண்டி சென்றவுடன் மீண்டும் பாலத்தை இயக்கி ஒன்றாக பொருத்தி விடுவார்... இப்பொழுது சிவப்பு விளக்கை அணைத்து, பச்சை விளக்கை 'ரயில் வரலாம்' என்பதற்காக ஒளிரச்செய்வார்... இது தான் அவரது வேலை...

பாசமான தந்தையின் ஒரே மகன்
பாசமான தந்தையின் ஒரே மகன்

அவருக்கு ஒரே ஒரு சின்ன மகன் இருந்தான்... அவருக்கு அவன் மேல் அளவுகடந்த பாசம்.... ஒரே மகன் அல்லவா? அவனிடம் விளையாடுவது என்றால் உலகத்தையே மறந்து விடுவார்... மகனும் அப்படி தான்... தந்தை என்றால் அவனிற்கு உயிர்... இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசித்தனர்...

ஒரு முறை அந்த சின்ன சிறுவனுக்கு ரயில்களை காண வேண்டும் என்று ஆசை வருகிறது... தன் தந்தையிடம் கூறினான். அவர் தான் பணிபுரியும் ரயில் பாலத்திற்கு அருகில் இருக்கும் ஒரு ரயில் நிலையத்திற்கு அழைத்து சென்று ரயில்களை காண்பிக்கிறார்... அந்த சிறுவன் அங்கு இருக்கும் மக்களை பார்க்கிறான்... ஒருவர் கவலையோடு அமர்ந்திருக்கிறார்... ஒரு பெண் போதை பழக்கத்திற்கு அடிமையானவளாக இருக்கிறாள்... ஒருவர் கோபமாக அமர்ந்திருக்கிறார்... ஒருவர் சுயநலவாதியாக காணப்படுகிறார்... ஒரு கணவன் மனைவி சண்டைபோட்டு விட்டு வெறுப்போடு அமர்ந்திருந்தனர்... சிலர் சந்தோசமாக காணப்பட்டனர்... இவ்வாறு பல்வேறு தரப்பு மக்கள் அங்கு இருந்தனர்... அந்த சின்னஞ் சிறுவனின் மனதிற்கு இவைகள் எல்லாம் புரியவில்லை... ரயிலையும் பிடித்தது அதில் இருந்த அனைவரையும் பிடித்தது... 

போதை பழக்கத்திற்கு அடிமையான பெண் அந்த சிறுவனிடம் குறும்பு செய்து விளையாடுகிறாள்... அனைத்தையும் சுற்றி பார்த்து விட்டு, சந்தோசமாக தன் தந்தையுடன் அந்த சிறுவன் திரும்பினான்... ஆனால் தான் கண்டவைகளை அவன் மறக்கவே இல்லை...

சில நாட்கள் சென்றன... அவன் தன் தந்தையோடு அவர் பணிபுரியும் அந்த ரயில் பாலத்திற்கு வந்தான்... தந்தை பாலத்தை இயக்கும் அறையில் இருந்தார்... சிறுவனோ அவரை விட்டு ஆற்று பாலம் அருகில் உள்ள அந்த ஆற்றுக்கு வந்து சந்தோசமாக விடையாடினான்...

அங்கு ஒரு பெரிய கப்பல் வருகிறது.... அதனை கண்டு அவனது தந்தை சிவப்பு விளக்கை ஒளிரச்செய்து விட்டு, ரயில் பாலத்தை இயக்கி இரண்டாக பிளந்து மேலாக தூக்கி நிறுத்தினார்.... கப்பல் இப்பொழுது பாலம் வழியாக சென்றது... பெரிய கப்பலானதால் அது மெதுவாக அந்த வழியாக செல்ல சிறிது நேரம் ஆகும்...
பிளக்கப்பட்ட பாலம்
பிளக்கப்பட்ட பாலம்

இப்பொழுது ஒரு துயரம்... சிவப்பு விளக்கை கவனிக்காத ஒரு ரயில் பாலம் பிளந்திருப்பது தெரியாமல் அந்த பாலத்தில் வருகிறது.... அதனை விளையாடி கொண்டிருக்கும் சிறுவன் பார்த்துவிடுகிறான்... கப்பல் கடந்து சென்றுவிட்டது, ஆனால் சிவப்பு விளக்கை கவனிக்காத ரயிலோ விரைவாக பாலத்தில் வந்து கொண்டிருக்கிறது.... சிறிது நேரத்திற்குள் பாலத்தை இறக்கினால் தான் ரயிலை பாதுகாத்து அதில் உள்ள மக்கள் அனைவரையும் உயிர் பிழைக்க செய்ய முடியும்... 

சிவப்பு விளக்கை கவனிக்காத ரயில்
சிவப்பு விளக்கை கவனிக்காத ரயில்

செய்வது அறியாது திகைத்து, தன் தந்தையை நோக்கி சத்தமிட்டான்... சத்தமிட்டான்... சத்தமிட்டான்.... ஆனால் அவனது சத்தம் அறையில் இருந்த தந்தைக்கு எட்டவில்லை.... தந்தை இருக்கும் அறையில் இருக்கும் இயக்கி போல் அந்த பாலத்திற்கு இன்னொரு இயக்கியும் இருந்தது... அந்த இன்னொரு இயக்கி பாலத்திலேயே இருந்தது.... அதனை அறிந்திருந்த சிறுவன், அந்த இயக்கியை பிடித்து இழுத்து பாலத்தை கீழே இறக்குவதற்காக பாலத்தின் அருகில் ஓடி வந்து பிடித்திழுக்க முயற்சிக்கிறான்...

பாலத்தை இறக்க முயலும் சிறுவன்
பாலத்தை இறக்க முயலும் சிறுவன் 

இப்பொழுது தந்தை கப்பல் சென்றுவிட்டதா என்று எட்டி பார்க்கிறார்.... அவருக்கு அதிர்ச்சி... கப்பல் கடந்திருந்ததை மட்டுமல்லாமல் சிவப்பு விளக்கை கவனிக்காத ரயில் பிளந்திருக்கும் பாலத்தில் வருவதையும் காண்கிறார்.... பாலத்தில் உள்ள இயக்கியை பிடித்து இழுக்க முயலும் தன் மகனையும் கண்டார்... அப்பொழுது அந்த சிறுவன் பிடுத்திலுக்க முயன்று தவறி விழுந்து அந்த பாலத்தின் பிளவில் மாட்டிகொண்டு அழுகிறான்...

தந்தைக்கு பதற்றம் அதிகரித்தது... இன்னும் சில நொடிகளில் பாலத்தை இறக்கினால் தான் ரயில் தப்பிக்கும்.... பாலத்தை இறக்கினால் அந்த சிறுவன் நசுங்கி இறந்து விடுவான்... அந்த தந்தை துடிக்கிறார்.... ஒன்று தன் மகனை காப்பாற்றி, ரயிலை விபத்தில் விட்டு விட வேண்டும்... இல்லை எனில், ரயிலை காத்து தன் மகனை இழக்க வேண்டும்... தந்தை மனதை கல்லாக்கி, இயக்கியை இழுத்துவிடுகிறார்... பாலம் இறங்கியது... சிறுவனின் உயிரும் பிரிந்தது...

உண்மையை அறிந்த ஒரு உயிர்
உண்மையை அறிந்த ஒரு உயிர்

கண்ணீருடன் ஓடி வந்து பாலத்தின் இடையில் நசுங்கி இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த தன் மகனை வாரி அனைத்து முத்தமிட்டு அழுதார்... ரயிலில் போதை பழக்கத்திற்கு அடிமையான அந்த பெண்ணும் அமர்ந்திருக்கிறாள்.... 

மனமுடைந்து சிந்தப்படும் கண்ணீர்
மனமுடைந்து சிந்தப்படும் கண்ணீர்

இதனை கண்டு நடந்ததை புரிந்து கொண்டு மனம் உடைந்தாள்.... அவள் கையில் இருக்கும் போதை பொருள் தானாக விழுகிறது.... பாவியான தன்னை காக்க ஒரு பாவமும் அறியாத அந்த சிறுவன் இறந்ததை கண்டு இடிந்து விடுகிறாள்... இதனை அறியாத ரயிலும், அதில் இருந்த மற்ற பயணிகளும் சென்று கொண்டிருந்தனர்....

மனந்திரும்பிய பெண்ணின் மகிழ்ச்சி
மனந்திரும்பிய பெண்ணின் மகிழ்ச்சி

காலம் செல்கிறது... அந்த பெண் தன் போதை பழக்கத்தில் இருந்து விடுப்பட்டு இருந்தாள்.... மீண்டும் இறந்த அந்த சிறுவனின் தந்தையை அவள் காண நேர்கிறது.... இருவரும் திகைத்து நிற்கின்றனர்... அவள் திருமணமாகி கையில் ஒரு அழகான குழந்தையுடன் இருந்தாள்...  

தன் மகனின் உயிருக்கு அர்த்தம் கிடைத்த மகிழ்ச்சியில்...
தன் மகனின் உயிருக்கு அர்த்தம் கிடைத்த மகிழ்ச்சியில்...

அவளை கண்டவுடன் இறந்த தன் மகனின் நினைப்பு அவருக்கு வந்துவிட்டது... இருந்தாலும் தன் மகனின் உயிர் ஒரு பெண்ணின் வாழ்வையே மாற்றியதை கண்டு மகிழ்ந்தார்... அவள் ஒரு வார்த்தையும் பேசவில்லை, புன்னகையோடு சென்றுவிடுகிறாள்... அவள் கையில் இருக்கும் குழந்தையின் முகத்தை பார்த்து ஆறுதல் அடைந்து சந்தோசமாக குதித்தார்...

இதில் ரயில் பயணிகளின் மேல் யாருக்கு உள்ள அன்பு பெரியது?

ரயிலில் இருந்த மக்கள் அனைவரையும் காக்க, தன் ஒரே மகனை வேண்டுமென்றே இறக்க செய்த தந்தையா? (அல்லது)  துடித்து போய் ரயில் பயணிகளை காக்க வந்து தன் உயிரை இழந்த மகனா?

ஒரு முறை கீழுள்ள வசனங்களை படியுங்கள்....

"மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைத்தான் ரட்சித்துக் கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம். தன்னை தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன் மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன் மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள். அவரோடே கூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப் படியே அவரை நிந்தித்தார்கள். ஆறாம் மணி நேரமுதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்" - மத்தேயு 27:42-46

"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" - யோவான் 3:16

இந்த கதையை படமாகவும் பார்க்கலாம்...  இங்கே கிளிக் செய்யவும் (கல்மனதையும் இந்த கதை கரைக்கிறது! - ஒரே ஒரு முறை பாருங்கள் - 6 நிமிடங்கள் தான்) 

Sunday, December 30, 2012

ஒரு குழந்தையின் உயிர் இன்று 60000 மக்களை வாழவைக்கிறது...

ஒரு உண்மை சம்பவம் உங்களுக்காக...

இறந்தும் 60000 ஏழை மக்களை வாழ வைக்கும் சிறுமி
இறந்தும் 60000 ஏழை மக்களை வாழ வைக்கும் சிறுமி

ஒரு சின்னஞ்சிறு சிறுமியின் உயிர் இன்று 60,000 ஏழை மக்களை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது. அந்த சிறுமியின் பெயர் ரேச்சல். அவளுக்கு ஒரு ஆசை வந்தது... 

தன் தாயிடம் சென்று , "என் அடுத்த பிறந்த நாளிற்குள் 300$ சேமித்து, அதனை ஏழை மக்களின் குடிநீர் வசதிக்காக நன்கொடையாக அனுப்புவேன்...." என்று புன்னகையோடு கூறினாள்...

அடுத்த பிறந்த நாளும் வந்தது... ஆனால் அவளால் கூறிய படி 300$ சேர்க்க முடியாதிருந்தது... தன் தாயிடம் அடுத்த பிறந்த நாளிற்குள் எப்படியும் சேர்த்து அனுப்புவேன் என்று மீண்டும் நம்பிக்கையோடு கூறினாள்...

ஆனால் இறைவன் தனக்கு பிடித்த உயிர்களை சீக்கிரமாக தன்னிடத்தில் எடுத்து கொள்வார்.... அடுத்த பிறந்த நாளை காண்பதற்குள் ரேச்சலையும் தன்னிடத்தில் அழைத்து கொண்டார்.... ஒரு விபத்தில் அந்த சிறுமி தன் உயிரை இழந்தாள்...

அந்த சிறுமியின் ஆசை நிறைவேறாமல் போய்விட்டது... அவளது நல்லடக்கத்தின் போது அவளது தாய், ரேச்சலின் ஆசையை பற்றி கூறி அழுதது அங்கு இருந்த மக்களின் மனதை கரைத்துவிட்டது.... அங்கு இருந்த நல்லெண்ணம் கொண்ட ஒருவர் அந்த சிறுமியின் ஆசையை மீடியாவிற்கு தெரியப்படுத்தினார்... அவளது இறுதி ஆசை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது... அதனை கண்டு பலர் மனம் உருகி அந்த சிறுமியின் பெயருக்கு நன்கொடைகளை அனுப்ப ஆரம்பித்தனர்...

சிறிது நாளிற்குள் 1.2 மில்லியன் டாலர்கள் சேர்ந்தது... அதனை பயன்படுத்தி ஆப்ரிக்க ஏழை பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளுக்கு ஒரு அறக்கட்டளையால் குடிநீர் வசதிகள் செய்து தரப்பட்டது...

ரேச்சலை இழந்த அவள் தாயும், பாட்டியும், தாத்தாவும் ரேச்சலால் பயனடைந்த மக்களை கண்டு தங்கள் துன்பத்தை விடுவதற்காக, அந்த அறக்கட்டளை அவர்களை அந்த பகுதிக்கு அழைத்து சென்றது...

ரேச்சலின் பாட்டிமா, தாய், தாத்தா

அவர்கள் அங்கு வந்து சேர்ந்தவுடன்... அங்கிருந்த ஏழை மக்களும் குழந்தைகளும் ரேச்சலின் குடும்பத்தை கண்ணீர் மல்க அன்போடு வரவேற்றனர்... "ரேச்சலுக்கு எங்கள் நன்றிகள்" என்று கரம் தட்டி தங்கள் நன்றிகளை வெளிப்படுத்தினர்...

அங்கிருந்த ஆப்ரிக்க மக்கள் ஏழைகளானதால் அவர்களால் இறைவனிற்கு என்று ஒரு ஆலயம் கூட கட்ட வசதி இல்லாதிருந்தது.... ஒரு குகைக்குள் ஏசுநாதரின் படங்களை வைத்து மெழுகுவர்த்திகள் ஏற்றி வழிபட்டு வந்தனர்...

சிறுமி ரேச்சல் படம் இயேசுவின் படமோடு
சிறுமி ரேச்சல் படம் இயேசுவின் படமோடு
ரேச்சலின் தாய் அந்த குகைக்குள் சென்று பார்த்து கண்ணீர் சிந்தினார்... ஏசுநாதர் படத்தின் காலிற்கு கீழ் ரேச்சலின் படத்தை வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி இருந்தனர்...

கண்ணீர் சிந்தும் தாய்
கண்ணீர் சிந்தும் தாய்

அவரது தாய் அந்த இடத்தில் சிறிது நேரம் ஜெபம் செய்தார்... பின்பு அவரை தேற்றி ரேச்சலின் பாட்டிமாவும் தாத்தாவும் அங்கிருந்து அழைத்து சென்றனர்...
ரேச்சலின் நினைவு கல்லில் மட்டும் அல்ல
ரேச்சலின் நினைவு கல்லில் மட்டும் அல்ல

ஒரு நாள் முழுவதும் அந்த குடும்பம் அந்த ஏழை மக்களுடன் செலவழித்தனர்... "ரேச்சல் இன்னும் இறக்கவில்லை, அவள் இன்றும் இந்த மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள்" என்று அவளது தாய் கூறினார் (புன்னகையுடன்....)

தாகமாயிருந்தேன் என் தாகத்தைத் தீர்த்தீர்கள்
தாகமாயிருந்தேன் என் தாகத்தைத் தீர்த்தீர்கள்...
"...........பசியாய் இருந்தேன், எனக்குப் போஜனங் கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன் என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாய் இருந்தேன் என்னைச் சேர்த்துக் கொண்டீர்கள்; வஸ்திரம் இல்லாது இருந்தேன், எனக்கு வஸ்திரங் கொடுத்தீர்கள்; வியாதியாய் இருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலில் இருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள் என்பார்.

அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவர்களாகக் கண்டு உமக்குப் போஜனங் கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவர்களாகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங் கொடுத்தோம்? எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும், காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள்.

அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்........" - மத்தேயு 25:35-40

'இதே வண்ணத்தில்' கொடுக்கப் பட்டுள்ள இரண்டு மேற்கோள் வாக்கியங்களையும் ஒரு முறை படியுங்கள்....

No comments:

Post a Comment