தேவபிதா எந்தன் மேய்ப்பன்
![]() |
| தேவபிதா எந்தன் மேய்ப்பன் |
இந்த பாடலை இயற்றியவர் நெய்யூரை சார்ந்த யோசேப்பு என்பவர். இவர் தன் சிறுவயதிலேயே தன் தாய் தந்தையரையும், உடன் பிறந்தோரையும் இழந்து அனாதையானார். தன் குடும்பத்தை இழந்து தனிமையின் துன்பத்தில் வாழ்ந்த இவர் தனக்கு ஆதரவாக கர்த்தரை ஏற்று கொண்டார். அது முதல் கர்த்தரை தன் சொந்த தந்தையாக நினைத்து, தனக்கு ஓர் உறவு இன்னும் இருக்கிறது என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வந்தார். இவர் இயற்றியை இந்த பாடலை படித்து பார்த்தால் இவர் கர்த்தரை எவ்வளவு நேசித்துள்ளார் என்பது புரியும்.
இந்த பாடல் பைபிளில் உள்ள 23ஆம் சங்கீதத்தை கருவாக கொண்டிருக்கிறது. தாவீது 23ஆம் சங்கீதத்தில் 'கர்த்தர் என் மேய்ப்பர்' என்று பாடியிருப்பார். ஆனால் நெய்யூர் யோசேப்பு 'கர்த்தர்' என்பதற்கு பதிலாக 'தேவபிதா' என்று கர்த்தரை உரிமையோடு தந்தையாக அழைத்து பாடியிருக்கிறார். இந்த பாடல் ஓர் தலைசிறந்த, பழமையான, எழில் கொஞ்சும் கிறிஸ்தவ கீர்த்தனையாக அமைந்துள்ளது. பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஓர் அழகிய பாடல்.
இங்கிலாந்தில் இருந்து இயேசுநாதரின் நற்செய்தியை அறிவிக்க வந்தவர் ஜெசிமன் என்ற ஆங்கிலேயர். இவர் பச்சைமலை, கொல்லிமலை ஆகிய பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு இயேசுவை பற்றி அறிவித்து வந்தார். மொழி தனக்கு இடராக இருப்பதை அறிந்த இவர், தமிழை கற்றார். தமிழை அறிந்த பின் இவருக்கு நெய்யூர் யோசேப்பு இயற்றிய 'தேவபிதா' பாடல் மிகவும் பிடித்துவிட்டது. வெளிநாட்டவரையும் கவர்ந்திழுத்தது தான் இந்த பாடல். கொல்லிமலை பகுதியில் சுவிசேசத்தை அறிவித்து வந்த ஜெசிமன் ஒரு முறை ஜுரம் கண்டு மறைந்தார். அந்த பகுதியிலேயே அவரை அடக்கம் செய்தனர். அடக்க நிகழ்வின் போது, கொல்லிமலை பழங்குடி மக்கள் அவருக்கு பிடித்த 'தேவபிதா எந்தன் மேய்ப்பன்' என்ற இந்த பாடலையே கண்ணீர் மல்க பாடினர்.
இந்த பாடலில் நெய்யூர் யோசேப்பு தன்னை இயேசுவின் மந்தையின் கீழுள்ள ஒரு ஆடாக பாவித்து பாடியுள்ளார். திரியேகரை சொந்த தந்தையை போல அழைத்து அழகாக பாடியுள்ளார். நல்ல மேய்ப்பன் வலைதடியாலும் கோலாலும் தன்னை அதட்டி நேர்த்தியான பாதையில் சுகமாய் நடத்தி செல்வதாகவும், பசும் புல்வெளிகளும், அமர்ந்த தண்ணீரும் உள்ள இடங்களுக்கு தன்னை அழைத்து சென்று மேய்ப்பதாக பாடுகிறார். இருள் நிறைந்த இடங்களில், பள்ளங்களில் செல்லும் போது, 'நல்ல மேய்ப்பன்' உடன் இருப்பதால் பயப்படமாட்டேன் என்கிறார். பகைவர்களான ஓநாய்களிடம் இருந்து தன்னை காத்து கொள்கிறார் என்றும், இறுதிவரை அவரது மந்தையிலேயே நிலைத்திருப்பேன் என்றும் பாடுகிறார்.
பாடல் வரிகள்...
தேவபிதா எந்தன் மேயப்பனல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே
ஆவலதாய் என்னை பைம்புல் மேல்
அவர் மேய்த்தமர் நீர் அருளுகின்றார்!
ஆத்துமந்தன்னை குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதி என்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார்!
தேவபிதா எந்தன் மேயப்பனல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே...
சாநிழல் பள்ளத்திரங்கிடினும்
சற்றும் தீங்கு கண்டஞ்சேனே
வானபரன் என்னோடிருப்பார்
வலைதடியும் கோலுமே தேற்றும்!
தேவபிதா எந்தன் மேயப்பனல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே...
பகைவற்கெதிரே ஒரு பந்தி
பாங்காய் என்கென்றேற்படுத்தி
சுக தயிலம் கொண்டென் தலையை
சுபமாய் அபிஷேகம் செய்குவார்!
தேவபிதா எந்தன் மேயப்பனல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே...
ஆயுள் முழுவதும் என் பாத்திரம்
அருளும் நலமுமாய் நிரம்பும்
நேயன் வீட்டில் சிறப்போடே
நெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன்!
தேவபிதா எந்தன் மேயப்பனல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே...
+(1).jpg)
No comments:
Post a Comment