இயேசு என்னும் சுமைதாங்கி!
First Published : 09 October 2014 03:43 PM IST
சுமைகள் இல்லாத வாழ்க்கை துடுப்பு இல்லாத படகைப்போன்றது என்றே சொல்லலாம். சுமைகள்தான் நாம் சாதனை புரியத் தூண்டுகோலாக அமைகின்றன.
நாமே சுமையாகத்தான் இப்பூவுலகில் பிறக்கிறோம். அடுத்தவருக்கு சுமையாக இருந்த பிறகுதான் நாம் நல்லடக்கம் செய்யப்படுகிறோம்.
ஒருவருக்கு (தாய்க்கு) மட்டும் சுமையாகத் தொடங்குகிற வாழ்க்கை நால்வருக்கு சுமையாக முடிகிறது. இதுதான் வாழ்க்கை.
சுமை என்று சொன்னாலே வருத்தத்தைக் கொடுக்கும். சுமை பாரமானது; அழுத்தக்கூடியது. சுமை என்பது துன்பம். ஒருவகையில் உலகில் எல்லோருமே துன்புறுகிறோம். இவ்வுலகில் துன்புறாதவர் எவருமில்லை. சுமை சுமந்து சோராதவர் யாருமிலர்.
இதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு அது சுமையாகக் தெரிவதில்லை.
நுகம் என்பது சக்கரம் பூட்டப்பட்ட வண்டியை சுலபமாக இழுப்பதற்கு குறுக்காக வைக்கப்படுகிற வழுவழுப்பான நீண்ட தடி. தமிழிலே மிக அழகாக நுகத்தடி என்பார்கள். எவ்வளவு பாரமானாலும் மாடுகள் சுலபமாக இழுக்க, நுகத்தடியில் அவற்றைப் பூட்டி, ஓட்டுகிறபோது, அவ்வளவு சுமையையும் தன் திமிலில் சுமந்து மாடுகள் இழுக்கிற பாங்கு நுகத்தடியின் அருமைக்கும் எளிமைக்கும் நல்லுதாரணம். அந்த நுகத்தடியும், உருளுகின்ற சக்கரங்களும், சுமைகளை சுகங்களாக்குகிறது. பாரத்தை இலகுவாக்குகிறது.
சுமை என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனால், சுமை என்பது மனிதருக்கு மனிதர் வேறு படலாம். சிலர் சட்டைப்பைக்குள் சுமப்பதை, சிலர் தோள்பட்டையில் சுமக்கலாம்; சிலர் தோளில் சுமப்பதை, சிலர் முதுகில் சுமக்கலாம்; சிலர் முதுகில் சுமப்பதை, சிலர் தலையில் சுமக்கலாம். ஆனால் எல்லோருமே சுமக்கிறோம். சுமக்கிற விதங்களில் வேண்டுமானால் அல்லது சுமக்கிற இடங்களில் வேண்டுமானால் மாற்றம் இருக்கலாம்.
கிராமப்புறங்களில் பாதையோரங்களில் சுமைதாங்கிக் கற்களை வைத்திருப்பார்கள். சுமைதாங்கி கற்கள் பெரும்பாலும் இறந்துபோன கர்ப்பிணிப்பெண்களின் நினைவாக அவர்களது உறவினர்களால் வைக்கப்படுவன என்று சொல்வதுண்டு.
அந்த சுமைதாங்கிக் கல்லில், சுமைகளுடன் நடந்து வருபவர்கள், நின்றவண்ணம் சுமைகளை இறக்கி வைத்துவிட்டு, சற்று நேரம் ஓய்வு எடுப்பார்கள். பின்னர் யாருடைய உதவியுமின்றித் தாங்களாகவே சுமைகளை எடுத்துக்கொண்டு தங்கள் பயணத்தைத் தொடர்வார்கள்.
அந்த சுமைதாங்கி ஒருவருடைய சுமையை சுகமாக்குகிறது. போகும் வழியில் உதவி செய்ய யாருமில்லையென்றாலும் தொடர்ந்து பயணம் மேற்கொள்ள உறுதுணையாக அமைகிறது. இங்கே சுமைகள் சுகமாகின்றது. சுமப்பவர்கள் சோர்வு நீங்கி, தொடர்ந்து பயணம் மேற்கொள்ள புத்துணர்ச்சி அளிக்கப்படுகிறது.
இதையேதான் இயேசுவும் செய்தார். "சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்' என்றார்.
வெறும் பேச்சோடு நில்லாமல் நமது துன்பங்களையெல்லாம் தாங்கும் சுமைதாங்கியாகிறார். இந்த இறைவன் தரும் ஆறுதல், இளைப்பாறுதல் இனிமையானது. வாழ்க்கையை முன்னெடுத்துச்செல்ல வலிமையளிப்பது.
No comments:
Post a Comment