எம்.ஜி.ஆர் மூன்று முறையும் முழுமையாக ஐந்து ஆண்டுகள் நீடித்தாரா?
இல்லை!
முதன்முறையாக 1977 ஜூன் மாதம் முதல்வரானார் எம்.ஜி.ஆர். அவரது ஆட்சியை பிரதமர் இந்திரா காந்தி 1980-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கலைத்துவிட்டார். அடுத்து நடந்த சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர் மீண்டும் வென்றார். முதல்வராக 1980-ம் ஆண்டு ஜூன் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். 85-ம் ஆண்டு ஜூன் வரைக்கும் அந்தச் சட்டமன்றத்துக்கு ஆயுட்காலம் உண்டு.
1984-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி முடிவெடுத்த நிலையில், இங்கே இருந்த அ.தி.மு.க-வினரும் முன்கூட்டியே தேர்தல் நடத்த நினைத்தார்கள். அப்போது முதல்வர் எம்.ஜி.ஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்தார். காங்கிரஸும் அ.தி.மு.க-வும் கூட்டணி அமைத்துச் செயல்பட்டதால் இங்கு சட்டசபையைக் கலைக்க ராஜீவும் தலையசைத்தார். தமிழக சட்டசபையை இவர்களாகவே கலைத்துக் கொண்டார்கள்.
84-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த தேர்தலிலும் அ.தி.மு.க வென்றது. டிசம்பர் 28-ம் தேதி தேர்தல் முடிவு வந்துவிட்டது. அப்போது எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இருந்தார். 85-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதிதான் சென்னை வந்தார். பதவியேற்பு விழாவே பிப்ரவரி 10-ம் தேதிதான் நடந்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதாவது 87-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் நாள் எம்.ஜி.ஆர் மறைந்தார்.
தொடர்ச்சியாக மூன்று முறை வென்று முதல்வரானவர் என்ற பெருமை அவருக்கு உண்டு. ஆனால் ஒரு தடவைகூட முழுமையாக அவர் முதல்வராக இருக்கவில்லை. முதல்முறை இந்திரா தடுத்தார். இரண்டாவது முறை இவர்களாகவே முடித்துக் கொண்டார்கள். மூன்றாவது முறை இயற்கை அனுமதிக்கவில்லை!

No comments:
Post a Comment