அமெரிக்காவின் விண்வெளி ஆய்விற்குப் பொறுப்பாக உள்ள ‘நாஸா’ (NASA) நிறுவனத்தால் Lockheed Martin நிறுவனத்திற்கு ‘ஒறையன்’ விண்கலத்தின் கட்டமைப்புப் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தன. இந்நிறுவனத்தின் தலைமைத்துவத்தின் கீழ் Aerojet Rocketdyne, United Technologies Aerospace Systems மற்றும் Honeywell ஆகிய நிறுவனங்களும், 45 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களும் இணைந்து பணியாற்றி விண்கல வடிவமைப்பினை நிறைவு செய்துள்ளன
வடிவமைக்கப்பட்டுள்ள ‘ஒறையன்’ விண்கலத்தில் மூன்று பகுதிகள் பிரதானமாகக் காணப்படுகின்றன. அவை, விண்வெளி வீரர்கள் அமரும் பகுதி, அவர்களுக்கான சேவைகளை உள்ளடக்கிய பகுதி மற்றும் செலுத்தும் பகுதி ஆகியவைகளாகக் காணப்படுகின்றன. இப்பாரிய விண்கலத்தினை விண்ணில் செலுத்துவதற்காக Delta IV வகை உந்து இயந்திரம் பயன்படவுள்ளது. இவ்விண்கலத்தில் 6 விண்வெளி வீரர்கள் பயணிக்கக்கூடிய வசதி காணப்படுகிறது.
சேவைப் பகுதியில், பயணிக்கும் ஆய்வாளர்களுக்கான உணவு, சுவாசத்திற்கான ஒட்சிசன் வாயு மற்றும் இதர வசதிகளை வழங்கும் தொகுதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
விண்கலத்தின் பகுதிகள் ஏலவே வெவ்வேறான நேரடியான பரிசோதிப்புக்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தபோதிலும், தற்போது முழுமைப்படுத்தப்பட்ட விண்கலத்தொகுதி நேரடி ஆய்விற்கு உட்படுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் டிசெம்பர் 4 ஆம் திகதி இவ்விண்கலம் மனிதர்கள் இல்லாது விண்ணிற்கு செலுத்தப்படவுள்ளது. அமெரிக்க Cape Canaveral விமானப்படைத்தளத்திலிருந்து ஏவப்படும் விண்கலம், 4.5 மணித்தியாலம் நீடிக்கும் பயணத்தின்போது நேரடி அவதானிப்புகளைப் பெற ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்நேர ஆயிடையில் விண்கலம் புவியீர்ப்பு எல்லையைக் கடந்து, புவியை இருமுறை வலம்வந்து புவிமேற்பரப்பிலிருந்து 5800 கிலோமீற்றர் உயரத்தினை அடைந்ததும், புவியை நோக்கி மீளத் திரும்பவுள்ளது. அவ்வாறு புவியை அடையும் விண்கலம் மணிக்கு 32000 கிலோ மீற்றர் (32000 km/h) ) என்ற வேகத்தில் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறான வேகத்தில் வளிமண்டலத்தினை ஊடறுக்கையில் பிறப்பிக்கப்படும் அதிக வெப்பம், சமுத்திரத்தினுள் வீழுகையில் எதிர்கொள்ளப்படும் நிலைமைகள் நேரடியாக அவதானிக்கப்படவுள்ளன. குறிப்பாக, விண்கல மேற்பரப்பில் வளிமண்டல உராய்வினால் உருவாகும் உயர் வெப்பம் விண்கலத்தினுள்ளே கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக ஆக்கப்பட்ட மேலுறையின் செயல்திறன் இதன்போது அவதானிக்கப்படவுள்ளது.
மேற்குறிப்பிட்ட நேரடிப் பரீட்சிப்பு வெற்றிகரமாக அமைந்தால், மற்றுமொரு ஆய்விற்கான விண்பயணத்தினை 2017 ஆண்டில் நிகழ்த்த ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இரண்டாவதான இப்பயணம் சந்திரனையும் தாண்டி குறுங்கோள் ஒன்றினை அடைந்து மீள திரும்புவதாக அமையவுள்ளது.
ஆறு தினங்கள் நீடிக்கும் இப்பரிசோதனைப் பயணமும் மனிதர்களை உள்ளடக்காத விண்பயணமாக இடம்பெறவுள்ளது. புதிய தொழில்நுட்பம் ஊடாக ஆக்கப்பட்டுள்ள வெப்பக் கதிர்ப்புக் காப்புறை, அண்டவெளிக் கதிர்கள் (cosmic ray) மற்றும் சூரியக் கொடுஞ்சுடர்வீச்சு (solar flare) ஆகியவற்றிலிருந்து எந்தளவிற்குப் பாதுகாக்கின்றது என்பதை ஆய்வாளர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கும். எனவே, இப்பயணம் செவ்வாய் கோள் பயணத்திற்கான ஒத்திகையாகவும் அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விரு பரிசோதனைப் பயணங்களும் வெற்றிகரமாக அமையும் பட்சத்தில், பெறப்படும் அனுபவங்களையும் நோக்கப்பட்ட அவதானிப்புக்களையும் ஒருங்கிணைத்து மனித விண்பயணத்திற்கான மாற்றங்கள் விண்கலத்தில் மேற்கொள்ளப்படும். இதன்பின்னர், 2021 ஆம் ஆண்டளவில் செவ்வாய் கோள் நோக்கிய மனித விண்பயணம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment