Thursday, January 1, 2015

உறிஞ்சப்படும் மலையகமக்களினது இரத்தமும், மலையக மக்களுடைய எதிர்காலமும்

அன்று பிரித்தானியர் ஆட்சியின் போது தேயிலை பறிப்பதற்காக, பெருந்தோட்ட தொழில்களிற்காக அடிமைகளாக அழைத்துவரப்பட்ட அந்த மக்கள் இன்றுவரை “இலங்கையர் தொப்பி அணிந்த” பிரித்தானிய முதலாளிகளினால் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர் என்பதுதான் கசப்பான உண்மையாகும். இலங்கைக்கு இரண்டாவது பெருவருவாயை ஈட்டி தரும் துறையாக பெருந்தோட்ட தொழில்துறை இருக்கின்ற போதும் அதற்காக தமது இரத்தத்தை உருக்கி வேலை செய்யும் அம்மக்களிற்கு கிடைக்கப்படவேண்டிய நியாயமான உரிமைகள் மறுக்கப்படுவதற்கு அவர்கள் சார்ந்த அரசியல்’வியாதிகளும்’, தொழில்சங்கங்களுமே உந்து சக்தியாக இருக்கின்றது இருக்கின்றன என்பதை அம்மக்கள் அறிந்திருக்கமாட்டார்கள் என்பது திண்ணம்.
அன்றிலிருந்து இன்றுவரை தேயிலை தோட்ட முதலாளிகளினால் கொடுக்கப்பட்ட சிறிய சிறிய லயன்களில் இருந்துகொண்டு தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் ஒரு தொழிலாளிக்கு கிடைக்கும் சம்பளத்தின் ஒரு பகுதியை தொழில்சங்கங்கள் உறிஞ்ச மிகுதி அவருக்கும் அவர் சார்ந்த குடும்பத்திற்கும் போதுமான மூன்று வேளை உணவினை வாங்கி, பசியை போக்க கூட போதுமானதல்ல.
இதனால் இவர்கள் தமது பிள்ளைகளிற்கு சிறந்த கல்வியை வழங்க முடியாத நிலையில் ( இந்த இடத்தில் ஒரு சம்பவத்தை குறிப்பிட்டேயாக வேண்டும். கொழும்பில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து கொண்டிருந்தபோது மலையக மாணவன் ஒருவன் தன் உயர்கல்விக்கு தன் குடும்பத்தால் பணம் செலவு செய்து படிப்பிக்க முடியாத நிலையில் தான் கூலி வேலை செய்தாவது படிக்கவேண்டும் என்ற ஆர்வத்துடன் வேலைக்கு வந்திருந்தான். கட்டிட கூலி வேலை செய்து அந்த உடல்வலியுடன் படிப்பது என்பது மிகவும் ஒரு கடினமான காரியம். இந்த மாணவனது திறைமையையும் ஆர்வத்தையும் அறிந்த இன்னொரு மேற்பார்வையாளர் இதனை அறிந்து என்னிடம் கூற நாம் இருவரும் இணைந்து இதனை அந்த நிறுவனத்தின் இயக்குனரின் காதுக்கு கொண்டு சென்று அந்த மாணவனின் கல்வி செலவிற்கு உதவுமாறு கோரி நின்றோம்.
எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அவர் அந்த மாணவனை இனி வேலை செய்ய வேண்டாம் என்று கேட்டதோடு மாணவனிற்கு மாதா மாதம் கல்வி செலவிற்கு தேவையான பணத்தை வழங்கி வந்தார். அந்த மாணவன் அவன் கல்விகற்ற பாடசாலையில் உயர்தர பரீட்சையில் முதலாவதாக வந்து சாதனை படைத்தான். இவனைப் போன்ற எத்தனை திறமையான மாணவர்கள் கல்வி கற்க தேவையான நேரத்தில் கிடைக்கவேண்டிய உதவிகள் கிடைக்காமல் கூலித்தொழிலாளிகளாகவும், குற்றாவாளிகளாகவும், பிச்சைகாரர்களாகவும் ஆகி கஸ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பது இயற்கைக்குத்தான் வெளிச்சம் ).
அவர்களையும் தோட்டவேலைக்கு, வீட்டுவேலைகளிற்கு, கூலி வேலைகளிற்கு என அனுப்பவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகின்றனர். இவர்களில் அனேகமானவருக்கு கிடைக்கப்படவேண்டிய இலவச சுகாதார, வைத்திய, கல்வி சேவைகள் மலையக அரசியல்வியாதிகளின் மற்றும் அவர்களது ஊதுகுழலான மலையக அரச உத்தியோகத்தர்களின் அலட்சியங்களாலும், ஊழல்களாலும், ஒடுக்குமுறைகளாலும் கிடைக்கப்படாமல் தடுக்கப்படுகின்றன. இதனால் இம்மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் அடைவது திட்டமிட்ட வகையில் தடுக்கப்படுகின்றது. இதனை உணர்ந்து, தொழிற்சங்கங்கள் பற்றிய உண்மை அறிந்து, அரசியல் வியாதிகளின் குணம் அறிந்து கிடைக்கப் படவேண்டிய தமது உரிமைகளிற்காக போராட முன்வரவேண்டும். போராடினால் மட்டுமே நாம் பிழைத்துகொள்ளகூடிய சந்தர்ப்பம் இருக்கிறது.
கிடைக்கப்படவேண்டிய உரிமைகள் :
1. இவ்வளவு காலமும் ஏமாற்றி உழைப்பை உறிஞ்சி அடிமைகளாக வைத்திருப்பதற்கான நட்ட ஈடு ( மறுத்தால் புலம்பெயர் தமிழர்கள் அந்த பொருட்களை தடை செய்து அழுத்தங்களை கொடுத்து அவர்களிற்கு உதவ வேண்டும் )
2. வீட்டு வசதி
3. இயல்பான வாழ்க்கையை கொண்டு நடத்தக்கூடிய உழைப்பிற்கேற்ற ஊதியம்
4. விடுமுறைகள், விடுமுறை கொடுப்பனவு
5. போதுமான மருத்துவ, கல்வி, சுகாதார வசதிகள்
6. ஓய்வூதிய கொடுப்பனவு
இலங்கை முழுவதிலும் இயல்பிலேயே அணிதிரண்ட தொழிலாளர்களாக மலையக மக்கள் காணப்படுகின்றனர். இழப்பதற்கு உழைப்பத்தவிர சொத்துக்கள் எதுவுமற்ற புரட்சிகரக் குணமும் கூட்டுணர்வும் கொண்ட மலையக மக்கள் தமது உரிமைக்காகப் போராட முன்வந்தால் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது, இலங்கை அதிகாரவர்க்கத்திற்கு ஏகபோக உலகத்திற்கும் மலையக மக்கள் அச்சுறுத்தலாகத் தென்படுகின்றனர். பரம்பரை பரம்பரையாக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையக லயன்கள் இருக்கின்றன. இலங்கை அதிகாரவர்க்கத்தைத் தகர்க்கும் அணுகுண்டு அந்த நாட்டின் மத்திய பகுதியிலுள்ள மலையக மக்களின் போர்க்குணமே. அதனால் தான் பிற்போக்குத் தொழிற்சங்கங்களின் ஊடாக அவர்களை அதிகாரவர்க்கம் கையாள்கிறது. அத் தொழிற்சங்கங்களின் பிடியிலிருந்து மக்களை விடுதலை செய்வதும் மக்களை அணிதிரட்டி புதிய தலைமைகளை உருவாக்குவதும் மக்கள் பற்றுள்ள ஒவ்வொருவரதும் முன்னால் உள்ள கடமை.

No comments:

Post a Comment