Saturday, September 27, 2014

இந்தியாவை அதிர வைத்துள்ள அருண் செல்வராஜன்

இந்தியாவை அதிர வைத்துள்ள அருண் செல்வராஜன்

அண்மைய நாட்களாக (2014 sep)இந்திய ஊடகங்களில் மிகப் பரபரப்பான செய்தியாக மாறியிருப்பவர் அருண் செல்வராஜன் என்ற இலங்கை இளைஞர்.
சென்னையில் வைத்து என்ஐஏ எனப்படும் இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவரகத்தினால் கைது செய்யப்பட்டதை அடுத்து இவர் பற்றியும், இவரது தொடர்புகள் மற்றும் செயற்பாடுகள் குறித்தும், இவர் அளித்ததாகக் கூறப்படும் தகவல்கள் குறித்தும் நாளுக்குநாள் புதிய புதிய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
28 வயதான அருண் செல்வராஜன் என்ற இந்த இளைஞரை இந்தியப் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்திருப்பதற்குக் காரணம், அவர் பாகிஸ்தானின் உளவாளியாகச் செயற்பட்டவர் என்பதே.
சென்னையில் உள்ள சாலிக் கிராமத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வைத்து கடந்த 10ம் திகதி இரவு கைது செய்யப்பட்ட அருண் செல்வராஜன் இந்தியாவுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும் பல தகவல்களை வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
தென்னிந்தியாவில் உள்ள முக்கியமான பாதுகாப்பு, சுற்றுலா கேந்திர நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை இவர் பாகிஸ்தானுக்கு வழங்கியிருப்பதாக இந்திய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மூலமே இந்த தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அருண் செல்வராஜன் கைது செய்யப்பட்டது, இந்தியப் புலனாய்வு அமைப்புகளை கடுமையாக அதிர்ச்சி கொள்ள வைத்திருக்கிறது. ஏனென்றால், அவரால், மிகவும் இறுக்கமான பாதுகாப்பு கடைப்பிடிக்கப்படும் இடங்களுக்குள் கூட இலகுவாக நுழைய முடிந்துள்ளது. தகவல்களையும் படங்களையும் திரட்டி பாகிஸ்தானுக்கு அனுப்ப முடிந்துள்ளது.
கொழும்பிலுள்ள பாகிஸ்தான தூதரகத்தினால், தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உளவு பார்ப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டவர்களில் இவர் மூன்றாமவர்.
முதலாவதாக 2012ம் ஆண்டு தமீம் அன்சாரி என்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்காய வியாபாரி கைது செய்யப்பட்டார். அதையடுத்து சில மாதங்களுக்கு முன்னதாக கண்டியைச் சேர்ந்த ஸகீர் உசேன் என்ற இலங்கையர் கைது செய்யப்பட்டார்.
இப்போது அருண் செல்வராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அருண் செல்வராஜன் ஒரு இலங்கையர் என்றும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும் இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஆனால் குறிப்பாக எந்த இடத்தைச் சேர்ந்தவர் என்பது பற்றியோ, அவரது குடும்பத்தினர் பற்றியோ, தெளிவான தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை.
இதுவரை அவர் பற்றி வெளியான தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் குழப்பம் நிறைந்தவையாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
30 ஆண்டுகளுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் இருந்து இவரது குடும்பத்தினர் சென்னைக்குச் சென்றதாகவும், 10ம் வகுப்பு வரை அங்கேயே கல்வி கற்றதாகவும் செய்திகள் வெளியாகின.
2008ல் மீண்டும் கொழும்புக்குத் திரும்பியதாகவும், லைபீரியாவில் ஹோட்டல் ஒன்று ஆரம்பித்து அதில் நஷ்டப்பட்டு கொழும்பு திரும்பிய போது முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் மூலம் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, இவருக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருந்ததாகவும், அவர்களிடம் பயிற்சி பெற்றதாகவும் கூட செய்திகள் வெளியிடப்பட்டன.
இவர் இலங்கையில் சிறிது காலமே தங்கியிருப்பதாகத் தெரிகிறது.
அந்தக் காலகட்டத்தில் தான் இவர் பாகிஸ்தான் உளவாளியாக மாற்றப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் தூதரகத்தில் வீசா அதிகாரியாகப் பணியாற்றிய அமீர் சுபைர் சித்திக் என்பவரே இவரை உளவுப் பணிக்காக சென்னைக்கு அனுப்பி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தமீழ் அன்சாரி, ஸகீர் உசேன் ஆகியோரையும், பாகிஸ்தானுக்காக உளவாளியாகச் செயற்பட வைத்ததாக இவர் மீதே குற்றச்சாட்டு இருந்தது.
புதுடில்லியில் இருந்து கொழும்புக்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்களை அடுத்து அமீர் சுபைர் சித்திக் கடந்த மே மாதம் பாகிஸ்தானுக்குத் திருப்பி அழைக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் ஹாஜி எனப்படும் சிராஜ் அலி என்ற இன்னொரு பாகிஸ்தான அதிகாரியே அருண் செல்வராஜனை கையாண்டிருக்கிறார்.
அருண் செல்வராஜன் மூலம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் உள்ள பாதுகாப்பு நிலைகள் பற்றி தகவல்கள் பாகிஸ்தானுக்குத் தொடர்ச்சியாக கடைத்து வந்திருக்கின்றன.
கடற்படைத் தளங்கள், விமானப்படைத்தளங்கள், இராணுவப் பயிற்சித் தளங்கள் என்பன குறித்து மட்டுமன்றி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், கரையோரப் பகுதிகள், அணுமின் நிலையங்கள், முக்கிய ஆலயங்கள் என்று மிக விரிவான தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தரையில் இருந்து மட்டுமன்றி, வானில் சிறிய விமானத்தில் இருந்து கூட முக்கியமான இடங்களை படம் எடுத்து அனுப்பியிருக்கிறார். அவ்வாறு விமானம் மூலம் படம் எடுப்பதற்கு இவருக்கு மாவட்ட நிர்வாகங்களே அனுமதி கொடுத்திருக்கின்றன.
பாகிஸ்தானிடம் இருந்து கிடைத்த கோடிக்கணக்கான ரூபா பணத்தைக் கொண்டு ஐஸ் இவன்ட மனோஜ்மென்ட் என்ற நிறுவனத்தை தொடங்கி, தனது உளவு வலையமைப்பை பரவலாக்கியிருக்கிறார் அருண் செல்வராஜன்.
இந்த நிறுவனத்துக்கு ஹைதராபாத், பெங்களுர் நகரங்களிலும் கிளைகள் இருக்கின்றன. நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்துக் கொடுக்கும் இந்த நிறுவனத்தின் மூலம் முக்கிய பிரமுகர்களை வளைத்துப் போடவும், அதனைக் கொண்டு கேந்திர நிலைகளுக்குள் ஊடுருவவும் இவரால் முடிந்திருக்கிறது.
அருண் செல்வராஜன் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் விமானம் ஓட்டும் பயிற்சியைப் பெற்றுள்ளதாகவும் கூட தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
இவையெல்லாம் உண்மையானால், அருண் செல்வராஜன் மூலம் தமிழ்நாடு மற்றும் அயல் மாநிலங்கள் குறித்து மிகத் துல்லியமான தகவல்களை பாகிஸ்தான் பெற்றுவந்துள்ளது என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை.
இதைவிட பாகிஸ்தான் எதிர்ப்பு, இலங்கை எதிர்ப்பு போராட்டங்கள் பற்றிய தகவல்கள் படங்களையும் கூட இவர், பாகிஸ்தான உளவுத்துறை அதிகாரிகளிடம் திரட்டிக் கொடுத்திருக்கிறார்.
தமது நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு நிறுவனத்தின் மூலம், மேல்மட்டப் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் போன்றோரின் தொடர்புகளை பெற்று, அவர்களுடன் அருண் நெருக்கமாகியிருப்பதும் தெரியவந்துள்ளது.
ஊடகவியலாளர் என்ற போர்வையில் கடலோரக் காவல்படையின் நிகழ்வுகளுக்குச் சென்று படம் எடுத்துள்ளதும், இராணுவ அதிகாரிகளின் விருந்துபசார நிகழ்வு ஒன்றுக்குச் சென்று படம் பிடித்துள்ளதும் கூட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற ஏராளமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் இவையனைத்தும் உண்மையா அல்லது ஊகங்களா என்பது விசாரணைகளின் முடிவில் தான் தெரியவரும்.
எவ்வாறாயினும், இவரை ஒரு தீவிரவாத தாக்குதலுக்காக பயன்படுத்த பாகிஸ்தான் எண்ணியிருக்கவில்லை என்றே தெரிகிறது.
சென்னையை நன்கறிந்தவராகவும், பேச்சு மொழி நடையால் சந்தேகம் எழாது என்பதாலும், தேவையான தகவல்களைத் திரட்டிக் கொள்வதற்கு பாகிஸ்தான் இவரை மிக நன்றாகவே பயன்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.
இந்தளவுக்கு எல்லா மட்டங்களிலும் தொடர்புகளை ஏற்படுத்தி தனியொருவரால் தகவல் திரட்ட முடியாது.
இதனால் தான் இவருடன் தொடர்புடையவர்கள் பற்றிய விபரங்களை குடையத் தொடங்கியிருக்கிறது தேசிய புலனாய்வுப் பிரிவு. இதற்கிடையே இவரிடம் விசாரணை நடத்த .பி. எனப்படும் உள்ளகப் புலனாய்வுப் பிரிவும், சி.பி. எனப்படும் மத்திய புலனாய்வுப் பிரிவும் கூட முயற்சிக்கின்றன.
சி.பி. இவருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பிருக்கிறதா என்றும், ராஜீவ்காந்தி கொலை குறித்தும் விசாரிக்க முனைவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் ராஜீவ்காந்தி கொலை இடம்பெற்ற போது அருண் செல்வராஜனுக்கு ஐந்து வயது தான் ஆகியிருக்கும்.
எனவே அதுபற்றி விசாரிக்க சி.பி. முயற்சிக்கிறது என்றால், வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கலாம் என்றே கருத வேண்டியுள்ளது.
தமிழ்நாட்டிலும், ஏனைய தென்மாநிலங்களிலும் தாக்குதல் நடத்தி குழப்பம் ஏற்படுத்த பாகிஸ்தான் உளவுப்பிரிவு முயற்சிப்பதாக ஏற்கனவே பலமுறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.
இத்தகைய பின்னணியில் அருண் செல்வராஜன் பிடிபட்டிருப்பது, தமிழ்நாட்டில் அச்சத்தை தோற்றுவித்திருக்கிறது.
இவர் தமிழ்நாட்டில் தாக்குதல்களை நடத்துவதற்கான ஒருவராக இனங்காணப்படாத போதிலும் அதற்குத் தேவையான தகவல்களை வழங்கக் கூடிய ஒருவராகவே இந்திய அதிகாரிகளால் கூறப்படுகிறார்.
அருண் செல்வராஜன் கைது என்பது தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் பற்றிய சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலைக்குப் பின்னர் இலங்கைத் தமிழர்களை சந்தேகத்துடன் பார்க்கும் நிலை ஒன்று இருந்தது.
அண்மைக்காலமாக அந்தச் சூழல் மெல்ல மாறியிருந்த நிலையில் தான் அருண் செல்வராஜன் விவகாரம் மீண்டும் இலங்கைத் தமிழர்களை சந்தேகத்துடன் பார்க்கின்ற சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.
அருண் செல்வராஜனுக்கும் பாகிஸ்தானுக்கும் நேரடித் தொடர்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் பாகிஸ்தான் விவகாரத்தில் இலங்கைக்கு இந்தியா கடுமையான அழுத்தங்களை கொடுக்க முனையும்.
ஏற்கனவே புதுடில்லி கொடுத்த அழுத்தங்களையடுத்தே கடந்த மே மாதம் அமீர் சுபைர் சித்திக் இஸ்லாமாபாத்திற்கு திருப்பி அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் ஒருபோதும், தாம் இந்தியாவில் உளவு பார்ப்பதற்கு இலங்கையைத் தளமாகப் பயன்படுத்தவில்லை என்றே பாகிஸ்தான் கூறி வந்திருக்கிறத.
அருண் செல்வராஜன் பிடிபட்டவுடன் கூட, பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் இது பழைய செய்தி என்றும், இந்தியா அதனை அடிக்கடி புதுப்பித்துக் கொள்வதாகவும் எதுவும் தெரியாதது போல் பதிலளித்திருந்தார்.
அதற்குப் பின்னர், பாகிஸ்தானிடம் இருந்து எந்தக் கருத்தும் வெளியாகவில்லை. இந்தநிலையில், அருண் செல்வராஜன் விவகாரத்தில், கொழும்பு மீது மீண்டும் புதுடில்லி அழுத்தங்களைப் பிரயோகிக்க வாய்ப்புகள் உள்ளன.
அத்தகையதொரு நிலையில், அது கொழும்புக்கும் புதுடில்லிக்கும் இரடையிலான உறவுகளை பாதிக்குமா அல்லது கொழும்புக்கும் இஸ்லாமாகபாத்துக்கும் இடையிலான உறவுகளை பாதிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சுபத்ரா

சென்னையில் கடல் வழியாக ஊடுருவி மும்பை பாணியில் தாக்குதல் நடத்துவதற்கான வழிகளையும் அருண் வீடியோ காட்சிகளாக எடுத்து இ மெயில் சேர்த்து வைத்துள்ளாள்

arun_selvarajan
சென்னையில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையைச்சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி, விமானப் பயிற்சி பெற்றது தெரியவந்துள்ளது. அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அவர் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமன்றி சென்னையின் முக்கிய இடங்களை படம்பிடித்து அவர், பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
BTech-Engineering-Education-in-various-streams-and-Job-in-Indian-Naval-Academy-in-Ezhimala-in-Kerala
து தொடர்பில் இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளி அருண் செல்வராஜன்(28) சென்னை சாலிகிராமத்தில் புதன் கிழமை இரவில் கைது செய்யப்பட்டார். அருண் செல்வராஜின் பெற்றோர் இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர்கள்.
அங்கு சொந்தமாக ஹோட்டல் வைத்து வசதியாக வாழ்ந்துள்ளனர். அங்கு அடிக்கடி போர் ஏற்பட்டதால் குடும்பத்துடன் 30 ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்துடன் சென்னை வந்துவிட்டனர்.
இதனால் அருண் செல்வராஜன் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை சென்னையில் படித்தார். அதன் பின்னர் அவர்கள் குடும்பத்துடன் மீண்டும் கொழும்பில் குடியேறினர்.
கொழும்பில் வசித்த போதே ‘ஐஸ் ஈவண்ட்’ என்ற கலை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்தை தொடங்கினார் அருண். இந்நிலையில் ஹோட்டல் தொழில் நலிவடைய அருணின் குடும்ப பொருளாதாரமும் இறங்கியது. அடுத்து என்ன செய்வது என்று அருண் திணறிக் கொண்டிருந்தபோது அவருக்கு ஆட்டோக்காரர் ஒருவர் மூலம் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் தொடர்பு கிடைத்துள்ளது.
தமிழகம் வந்த அருண் செல்வராஜ்
பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் வழிகாட்டுதலின் பேரில் 2009ஆம் ஆண்டு அருண் செல்வராஜன் மட்டும் மாணவர் விசாவில் மீண்டும் சென்னை வந்தார். சாலிகிராமம் ஜே.கே.சாலையில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக ஒரு வீடு எடுத்து குடியேறினார்.
சென்னையில் அலுவலகம்
இந்தியாவில் சுதந்திரமாக சுற்றித் திரிவதற்கு வசதியாக இந்திய கடவுச்சீட்டு ஒன்றையும் ஐ.எஸ்.ஐ. எடுத்து கொடுத்திருந்தது.
இலங்கையில் வைத்திருந்த ‘ஐஸ் ஈவண்ட்’ நிறுவனத்தை அதே பெயரில் சென்னையிலும் தொடங்கினார் அருண். இதற்காக தனி இணையதளத்தையும் உருவாக்கி சென்னையில் பல விஐபிக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.
கலை நிகழ்ச்சி போர்வையில்
அதை பயன்படுத்தி பாதுகாப்பு கட்டுப்பாடு உள்ள அரசு நிலைகளுக்குள் கூட அருண் சென்று வந்தான். கலை நிகழ்ச்சிகள் நடத்தும்போது, முக்கிய இடங்களை படம் பிடித்தான். அவற்றை எல்லாம் தன் மடிக்கணினியிலிருந்து கொழும்பு தூதரகத்தில் உள்ள ஐ.எஸ்.ஐ. அதிகாரிக்கு அனுப்பி வந்தான்.
பாகிஸ்தான் உளவு அமைப்பு
அருண் மூலம் தகவல்கள் வந்து குவிவதை கண்ட பாகிஸ்தான் உளவு அமைப்பு, அவனை தென் மாநிலங்களில் முக்கிய இராணுவ நிலைகளுக்கு சென்று படம் எடுத்து அனுப்ப உத்தரவிட்டது. இதையடுத்து அருண் தனது ஐஸ்ஈவென்ட் நிறுவனத்துக்கு பெங்களூர், ஹைதராபாத் நகரங்களில் 2 கிளைகளைத் தொடங்கினான்.
கடற்படைத்தளங்கள்
இந்த கிளைகள் மூலம் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் உள்ளவர்களுடனும் அருணுக்கு தொடர்பு ஏற்பட்டது. இதை பயன்படுத்தி அவன் கொச்சி கடற்படை தளம், விசாகப்பட்டினத்தில் உள்ள நீர்மூழ்கி தளம் பற்றிய தகவல்களை சேகரித்து அனுப்பினான்.
அமுக்கிய உளவுத்துறை
இந்த நிலையில் அருண் செல்வராஜன் உத்தரபிரதேச மாநிலம் மெகராதபாத்தில் உள்ள ஒரு வங்கி மூலம் இலட்சக்கணக்கான பணத்தை பரிமாற்றம் செய்வதை உளவு துறை கண்டுபிடித்து தேசிய விசாரணைக் குழுவிடம் தெரிவித்தது. இதனால் உ|hரான தேசிய விசாரணை குழுவினர், இனியும் இவனை விட்டு வைக்கக் கூடாது என்று கைது செய்து விட்டனர். பிறகு சாலி கிராமத்தில் உள்ள அவன் வீட்டிலும், நுங்கம்பாக்கம், பெங்களூர், ஹைதராபாத் அலுவலகங்களில் சோதனை நடத்தினார்கள்.
மடிக்கணினி, அலைபேசி
இந்த வேட்டையில் 2 மடிக்கணினிகள், 2 செல்போன், ஏராளமான சிம் கார்டுகள், நவீன கமெராக்கள், டேட்டா கார்டுகள், பென்டிரைவ்கள், இலட்சக்கணக்கில் பணம் சிக்கியது.
மடிக்கணினிகளை சோதித்தபோது சென்னையில் உள்ள பல முக்கிய பகுதிகளின் நூற்றுக்கணக்கான படங்களையும், வீடியோ காட்சிகளையும் அருண், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. அதிகாரிக்கு அனுப்பி இருப்பது உறுதியானது.
5 ஆண்டுகள் சதி
கடந்த 5 ஆண்டுகளாக அவன் இந்த சதி செயலை செய்து வந்துள்ளான். அவன் அனுப்பிய படங்களை ஆய்வு செய்தபோது மெரினாவில் உள்ள கடலோர பாதுகாப்புப் படை, கல்பாக்கம் அணுமின் நிலையம், காமராஜர் சாலையில் உள்ள பொலிஸ் டி.ஜி.பி. அலுவலகம், கோயம்பேடு காய்கறி மார்க்கெட், கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், அரசு பொது மருத்துவமனை, தரமணியில் உள்ள டைடல் பார்க், பரங்கிமலையில் உள்ள இராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம், வண்டலூரில் உள்ள தேசிய சிறப்பு பாதுகாப்பு படை மையம் உட்பட பல இடங்கள் இருப்பது தெரிந்தது.
12 இடங்களில் படங்கள்
இதன் மூலம் அருண், சென்னையில் 12 இடங்களை தீவிரவாதிகள் தகர்க்கும் வகையில் படங்களை எடுத்து கொடுத்து இருப்பது தெரிய வந்துள்ளது. சென்னையில் கடல் வழியாக ஊடுருவி மும்பை பாணியில் தாக்குதல் நடத்துவதற்கான வழிகளையும் அருண் வீடியோ காட்சிகளாக எடுத்து இ மெயில் சேர்த்து வைத்துள்ளான். இதன் மூலம் ஐ.எஸ்.ஐ.யும், பாகிஸ்தான் தீவிரவாதிகளும் சென்னைக்கு குறி வைத்து இருப்பது மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அருணுக்கு கொடுக்கப்பட்ட 2 பணிகள்
தென்னிந்தியாவில் இந்திய இராணுவத்தின் பலம் குறித்த தகவல்களை சேகரிப்பது, தாக்குதல் நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்வது ஆகிய இரண்டும்தான் அருணுக்கு கொடுக்கப்பட்ட பணிகள்.
இராணுவ பலம்
இராணுவ பலத்தை அறிய சென்னை அடையாறு கடற்படை தளம், கொச்சி கடற்படை தளம், விசாகப்பட்டினம் நீர்மூழ்கி கப்பல் தளம், பரங்கிமலை இராணுவ பயிற்சி மையம் போன்ற தகவல்களை பாகிஸ்தான் அதிகாரிகள் கேட்டுள்ளனர். ஆனால் இவற்றில் எந்த பகுதியையும் முழுமையாக புகைப்படம் எடுக்கவோ, தகவல் சேகரிக்கவோ அருணால் முடியவில்லை. ஆனால் அதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார் என்பது அவரது மடிக்கணினியில் இருந்த படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
ரூ. 2 கோடி பணம்
இந்த பணிகளை செய்வதற்குத் தான் உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள ஒரு வங்கி மூலம் ரூ.2 கோடி பணத்தை அருணுக்கு வழங்கியுள்ளது பாகிஸ்தான் உளவுத்துறை.
நீர்மூழ்கிக் கப்பல் விவரம்
விசாகப்பட்டினத்தில் ‘அரிஹந்த்’ என்ற அதிநவீன அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா கட்டி வருகிறது. இந்த நீர்மூழ்கிக் கப்பல் பற்றிய தகவல்களை திரட்டித் தருமாறு பாகிஸ்தான் அதிகாரிகள் அருணிடம் கேட்டுள்ளனர். இதற்காக ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்துக்கு 2 முறை அருண் சென்று வந்துள்ளார். ஆனால், அவரால் விசாகப்பட்டினத்தில் உள்ள நீர்மூழ்கி கடற்படை தளம் அருகே கூட செல்ல முடியவில்லை.
4 பேர் எங்கே?
அருணின் இந்த செல்போன் எண்ணுக்கு சந்தேகத்துக்கு இடமான அழைப்புகள் அதிகமாக வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அருண் செல்வராஜன் வசித்துவந்த வீட்டுக்கு 4 இளைஞர்கள் அடிக்கடி வந்து சென்றுள்ளனர். அவர்களுக்கும் உளவுப் பணியில் நெருங்கிய தொடர்பு இருக்கும் என்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் உறுதியாக நம்புகின்றனர்.
இதனால் அவர்களையும் பிடிக்கும் பணியில் தற்போது இறங்கியுள்ளனர். அவரது இ-மெயில் முகவரியிலும், அலைபேசி எண்ணிலும் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் விமான பயிற்சி சென்னையில் ஒரு தனியார் நிறுவனம் மூலம் விமானம் ஓட்டுவதற்கு பயிற்சி பெற்றிருக்கிறார் அருண். இதற்காக அவர் கொடுத்திருந்த சில விண்ணப்பங்களின் நகல்கள் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்தன.
அருணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் உத்தரவின் பேரில்தான் விமானம் ஓட்டும் பயிற்சியில் சேர்ந்ததாக கூறியிருக்கிறார். போலி ஆவணங்கள் விமானம் ஓட்ட பயிற்சியில் சேர அருண் கொடுத்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பதையும் அதிகாரி கள் கண்டுபிடித்துள்ளனர். அருணிடம் இருந்து மேலும் பல முக்கியமான தகவல்கள் கிடைக்கும் என்று அதிகாரிகள் உறுதியாக நம்புகின்றனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில்
அருண் செல்வராஜன் குடும்பத்துடன் சென்னையில் இருந்து மீண்டும் கொழும்பு சென்ற நிலையில், அங்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உளவுப் பிரிவில் அருண் சேர்ந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சில நாட்கள் விடுதலைப் புலிகளிடத்தில் அவர் பயிற்சி பெற்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த தகவல்களைக் கூற அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
மேலும் விசாரணை அருண் செல்வராஜனை விசாரிக்க றோ, ஐ.பி. போன்ற பல்வேறு புலனாய்வு அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டால், பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினால், தமிழகத்தில் பதுங்கியுள்ள மற்ற ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் குறித்தும், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதல் திட்டங்கள் குறித்தும் தெரிய வரும் என்று புலனாய்வு அதிகாரிகள் கருதுகிறார்கள்.
பொலிஸ் காவலில் விசாரிக்க மனு
இந்த நிலையில் நீதிமன்றக் காவலில் உள்ள அருண் செல்வராஜனை 7 நாள்களுக்கு பொலிஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய தேசியப் புலனாய்வு பொலிஸார், பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தனர்.
மனுவைப் பெற்று கொண்ட நீதிபதி மோனி, ’16ஆம் திகதி செல்வராஜனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். அதன் பின்னர் பொலிஸ் காவலில் எடுத்து விசாரணை செய்வதற்கான கால அவகாசம் அறிவிக்கப்படும்’ என்றார் நீதிபதி.
கல்பாக்கம் அணுமின்நிலையம்
இதனிடையே அருண் செல்வராஜனிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தமிழகத்தின் 20 இடங்களில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய தொழில் பாதுகாப்புப் படை, மத்திய கடலோர காவல் படை, கமாண்டோ பிரிவு உள்ளிட்ட அமைப்பினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீவிர கண்காணிப்பு அணுமின் நிலையத்தின் நுழைவு வாயில் மற்றும் அதன் வளாகப் பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது. மேலும், அணுமின் நிலையத்துக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment