Monday, May 11, 2015

மன்னிக்கப்பட முடியாத பாவம்

மன்னிக்கப்பட முடியாத பாவம்
டாக்டர். கேட்டிஸ் ஹட்சன்.


    "அப்பொழுது, பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவும் காணவும்தக்கதாக அவனை சொஸ்தமாக்கினார். ஜனங்கள் எல்லாரும் ஆச்சரியப்பட்டு: தாவீதின் குமாரன் இவர் தானோ? என்றார்கள். பரிசேயர் அதைக் கேட்டு: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயர்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானே அல்லாமல் மற்றப்படி அல்ல என்றார்கள். இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத் தானே விரோதமாய் பிரிந்திருக்கிற எந்த இராஜ்ஜியமும் பாழாய்ப்போம்; தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது. சாத்தானை சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாய் இருக்குமே; அப்படிச் செய்தால் அவன் இராஜ்ஜியம் எப்படி நிலை நிற்கும்? நான் பெயர்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாரால் துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள். நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய இராஜ்ஜியம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே. அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழிய பலவானுடைய வீட்டிற்குள் ஒருவன் புகுந்து, அவன் உடமைகளை எப்படிக் கொள்ளையிடக் கூடும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம். என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்." 

    அடுத்த இரண்டு வசனங்களுக்கும் விசேஷமாக உங்களுடைய கவனத்தை செலுத்தும்படி கேட்கிறேன்:

    "ஆதலால், நான் உங்களுக்கு சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை. எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாய் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை” - மத்தேயு 12:22-32.

    "மன்னிக்கப்பட முடியாத பாவம்'' எனும் தலையங்கம் எனக்கு விருப்பமில்லை. ஆயினும் இது நன்றாகத் தெரிந்த ஒரு கூற்றாக இருப்பதனால் நான் இதனைத் தெரிந்து கொண்டேன். உண்மையிலேயே, எல்லாப் பாவமும் மன்னிக்கப்பட முடியாதவையே. தேவன் ஒருபோதும் பாவத்தைப் பார்ப்பவரும் அல்ல, ஒருபோதும் பாவத்தை மன்னிப்பவருமல்ல என்பதன் மூலம் நான் இதனைக் கூறுகிறேன். எல்லாப் பாவங்களுக்கும் செலுத்தப்பட வேண்டும். தேவன் பாவிகளை மன்னிக்கிறாரே அல்லாமல், பாவத்தை அல்ல. பாவம் மன்னிக்கப்பட முடியுமாக இருந்திருக்குமானால், எமது பாவத்திற்காக இயேசு மரித்தது முட்டாள்த்தனமாக இருக்கும். ஆகவே, எல்லாப் பாவமும் மன்னிக்கப்பட முடியாதவை என நான் கூறுகிறேன். எல்லாப் பாவங்களுக்கும் செலுத்தப்பட வேண்டும். இயேசு பாவ - கடனைச் செலுத்தி முடித்தபடியால் தேவன் பாவிகளை மன்னிக்க முடியும். உண்மையிலே, "மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள முடியாதவாறு மனிதர் செய்யும் பாவம்” எனும் தலையங்கம் நன்றாக இருக்கும்.

    இம்மையிலும் மறுமையிலும் ஒருபோதுமே மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள முடியாத வகையில் ஒரு மனிதன் செய்யக் கூடிய ஏதாவதொன்று இருக்குமானால் அது சிந்திப்பதற்கு பயங்கரமானதாகத்தான் இருக்கும்.

    அது எதுவாக இருப்பினும், மன்னிப்பு இல்லாத பாவம் ஒன்று மட்டுமே உண்டு. மத்தேயு 12:31 கூறுகிறது: "எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மன்னிக்கப்படும்ஞ்..”. ஒருபோதுமே மன்னிக்கப்பட முடியாத பாவத்தைக் குறித்து வேதாகமம் பேசுகிறது.

    மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள முடியாதவாறு மனிதர் செய்யும் பாவம் சில எபிரெயர் புத்தகத்தில் பதிவாகியுள்ளது:

    "ஏனெனில், ஒருதரம் பிரகாசிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்” - எபிரெயர் 6:4-6

    இப்போது மக்கள் இங்கே செய்தது எதுவானாலும் இதுதான் மன்னிக்கப்பட முடியாத பாவமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், மன்னிக்கப்பட முடியாத பாவம் இரண்டு இருக்க வேண்டும்.

1
மன்னிக்கப்பட முடியாததல்லாத பாவம்

    கொலைதான் மன்னிக்கப்பட முடியாத பாவம் என சிலர் கூறுவார்கள். நீங்கள் ஒருவரைக் கொலை செய்தால், உம்மால் அந்த உயிரைத் திருப்பி்க் கொண்டுவர முடியாது. ஆகவே நீர் ஒரு மன்னிக்கப்பட முடியாத பாவத்தை செய்துவிட்டீர் என அவர்கள் கூறுவார்கள். ஆனால் கொலை மன்னிக்கப்பட முடியாத பாவம் அல்ல.

    தாவீது, தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற மனிதனாக இருந்த போதிலும், பத்சேபாளின் கணவனை யுத்தத்திற்கு அனுப்பி கொன்று போட்டதாக பழைய ஏற்பாட்டில் பதிவாகியுள்ளது. இது வேண்டுமென்று, திட்டமிட்டு, யோசித்து செய்த கொலையாகும். அப்படியிருந்தும் தேவன் அவரை மன்னித்தார்.

    பேதுரு, தனது பட்டயத்தை உருவி பிரதான ஆசாரியனின் சேவகனுடைய காதை வெட்டும்போது அவரின் இதயத்தில் கொலைக்கான நோக்கம் இருந்திருக்க வேண்டும். அவர் அவனின் காதிற்கு அல்ல, அவனின் தலைக்கே இலக்கு வைத்திருக்க வேண்டும்! பேதுரு தனது இதயத்தில் கொலைசெய்ய வேண்டும் என்றிருப்பார், ஆனால் அவரது முயற்சி தவறிவிட்டது.

    ஒரு காரணமும் இல்லாமல் நாம் எமது சகோதரரைப் பகைத்தால், கொலை செய்கிறவர்களாய் இருப்போம் என யோவானின் முதலாவது நிருபம் கூறுகிறது. கொலையானது, மிகவும் பயங்கரமான பாவமாக இருப்பினும் இது மன்னிக்கப்பட முடியாத பாவம் அல்ல.

    விபசாரம் ஒரு பயங்கரமான பாவம். எனினும், இது மன்னிக்கப்பட முடியாத பாவம் அல்ல. யோவான் எட்டாம் அதிகாரத்தில், ஒரு பெண் இந்த விபசார செயற்பாட்டில் பிடிபட்டாள். அவளை இயேசுவிடம் கொண்டுவந்தபோது, அவர் கீழே பார்த்துக் கொண்டு, தரையிலே தமது விரலினால் எழுதிக்கொண்டிருந்தார். அவர் நிமிர்ந்து பார்த்த போது, அவளைக் குற்றம் சாட்டியவர்கள் போய்விட்டார்கள். "பெண்ணே, உன்மேல் குற்றம் சாட்டியவர்கள் எங்கே?” என இயேசு கேட்டார். அதற்கு அவள், "இல்லை ஆண்டவரே” என்றாள். இயேசு அவளை நோக்கி: "நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவம் செய்யாதே” என்றார்.

    யோவான் நான்காவது அதிகாரத்தில், ஒரு பெண் ஐந்து தடவைகள் திருமணம் செய்திருந்தாள். அவளின் ஐந்து புருஷர்களும் மரித்து விட்டனரா அல்லது அவர்கள் அவளை விட்டுவிட்டார்களா அல்லது அவள் அவர்களை விட்டுவிட்டாளா என்பது எனக்குத் தெரியாது. எனினும், அடுத்த தடவையும் திருமணம் செய்யமாட்டேன் என அவள் தீர்மானித்தாள். அவள் சாதாரணமாக ஒரு மனிதனோடு வாழ ஆரம்பித்தாள். சமாரியாவி்ன் கிணற்றின் அருகில் இயேசு அவளை சந்தித்து, ஜீவ தண்ணீரைக் குறித்து அவளுடன் பேசினார். அவள் அவரிடம் அதனைக் கேட்டாள், இயேசு அவளுக்கு ஜீவ தண்ணீரைக் கொடுத்தார். அவள் இரட்சிக்கப்பட்டவளாக நகரத்திற்குள் சென்று ஒரு கூட்ட ஜனத்தை இயேசுவிடம் கொண்டுவந்தாள். அநேகர் அவளைப் பின்தொடர்ந்து, இயேசு இருந்த இடத்திற்கு வந்தனர். அவர்கள் இயேசுவைக் கண்டபோது அவரில் விசுவாசம் வைத்தனர். இயேசு அவளை மன்னித்தார்.

    இந்த குறிப்பிட்ட பாவத்தையிட்டு குற்ற உணர்வுள்ள மக்கள் என்னிடம் ஒன்று இரண்டு தடவைகளுக்கு மேலாக வந்துள்ளனர். அவர்கள், "இந்த பயங்கரமான காரியத்தை தேவன் மன்னிப்பார் என நான் நம்பவில்லை. நான் எப்போதாகிலும் இரட்சிக்கப்படலாம் என நினைக்கவில்லை” எனக் கூறுவார்கள்.

    இவ்வாறான ஒரு மனிதனை கிறிஸ்துவுக்காக வழிநடத்தியது எனக்கு ஞாபகம் இருக்கிறது. அந்த மனிதன் தான் திருமணம் செய்திராத ஒரு பெண்ணுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் அவர்கள் திருமணமாகாதவர்கள் என்பது பிள்ளைகளுக்கு தெரியாது என்பதுமான காரியத்தையிட்டு மிகவும் பாரப்பட்டவராக இருந்தார். அவர் இதனை என்னுடன் பகிர்ந்து கொண்டதுடன், தான் மன்னிக்கப்பட முடியாது என்று எண்ணினார். உண்மையிலே அவர், தான் நரக ஆக்கினைக்கானவர் என எண்ணினார். நான் சமாரியப் பெண்ணின் சம்பவத்தை அவருக்குக் கூறியபோது, அவர் மகிழ்ச்சியுடன் அழுது, "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! நான் எப்போதுமே இரட்சிக்கப்பட முடியாது என எண்ணினேன்! தேவன் இப்போது என்னை இரட்சிப்பார் எனக் காண்கிறேன்!” என்றார். அவர் இயேசுவை விசுவாசித்து, மகிமையாக இரட்சிக்கப்பட்டார். அவர்கள் சரியான ரீதியில் திருமணம் செய்து கொண்டு, இப்போது ஒரு நல்ல கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்கிறார்கள். விபசாரம் மன்னிக்கப்பட முடியாத பாவம் அல்ல.

    கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்குவது மன்னிக்கப்பட முடியாத பாவம் அல்ல. "பிரசங்கியாரே, ஏன் நீங்கள் இதனை குறிப்பிடுகிறீர்கள் என எனக்குத் தெரியாது” என நீங்கள் கூறக்கூடும். நான் இதனை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் இது ஒரு பயங்கரமான பாவமாகும். ஒரு நபர் செய்யக்கூடிய கேவலமான பாவங்களுள் ஒன்று, ஒரு மனிதனின் உண்மையான மடமைத்தனத்தைக் காட்டும் பாவமாகும்.

    மற்றய எல்லாப் பாவத்திலும் சில கோபமூட்டும் விஷயம் உண்டு. உதாரணத்திற்கு, பிசாசு ஒரு நபரிடம் வந்து, "ஏய்! நீ பசியாக இருக்கிறாய், உன்னிடம் சாப்பாடு இல்லை. நீ ஏன் கொஞ்சம் பணத்தைத் திருடக் கூடாது?” எனக் கூறக் கூடும். அவ்வாறான பாவத்திற்கு கோபமூட்டும் விஷயம் இருப்பதுடன், இன்னொரு விதத்தில் அந்தப் பாவத்திற்கு பலனுண்டு. நீர் ஏதாவது ஒன்றைத் திருடினால், அது பணமாகவோ, ஒரு மோட்டார் வாகனமாகவோ, உணவாகவோ அல்லது எதுவாக இருப்பினும் நீர் திருடியது பலனாக உமக்கு இருக்கும். நான் திருடுவதற்கு எதிராக இருந்த போதிலும், வேதாகமமும் "களவு செய்யாதிருப்பாயாக” எனக் கூறும் போதிலும் திருடுவதன் பின்னால் இலாபம் இருக்கிறது.

    கொலையிலும் கூட சில கோபமூட்டும் விஷயம் இருக்கிறது. ஒருவர் இன்னொருவருக்கு தவறினை செய்து, அதனைத் தொடர்ந்து செய்து வருகையில் அந்த மனிதன் தனது பொறுமையை இழப்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியும். நான் உனக்கு ஒரு முடிவு கட்டுவேன்! என அவன் நினைப்பான். அவன் நினைத்ததன் பின்னால் ஒரு திருப்தி கிடைக்கும். நான் அவனை முடிவு கட்டிவிட்டேன். அவன் இனிமேலும் எனக்கு தவறு விளைவிக்க மாட்டான். அவன் போய்விட்டான். அங்கே கொலையில் சில திருப்தி உண்டு - இருக்கிறது என்றாகிலும் நான் நினைக்கலாம்.

    போதைவெறி கொள்வதிலும் சில கோபமூட்டும் விஷயம் இருக்கலாம். நான் ஒருபோதும் போதைவெறியில் இருந்ததில்லை, எனினும் வெறியில் இருப்பதில் சில திருப்தி இருக்கக் கூடும். இதனைவிட ஒரு மனிதன் தனது கடின உழைப்பிலாலான பணத்தை கசப்பான பானத்திற்கு செலவழித்து, வெளியே சென்று மீண்டும் மீண்டும் போதையேற்றி, குறைகூறும் மனைவியிடமும், பசியோடிருக்கும் பிள்ளைகளிடமும் வீட்டிற்குத் திரும்பி வந்து, மறுநாளில் மீண்டும் புறப்பட்டுச் சென்று அதே காரியத்தை செய்கிறான். நான் இந்தப் பிழையைப் பொறுத்துக் கொள்ளவில்லை. இருப்பினும் வெறியாக இருப்பதற்கும் கோபமூட்டும் விஷயம் இருக்கத்தான் வேண்டும்.

    ஆனால் உண்மையிலே கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்குவதில் ஒரு திருப்தியுமே இல்லை. பிசாசு இந்தப் பாவத்தை மக்கள் செய்யும்படி தூண்டி அவர்களுக்கு எந்த ஒரு பலனையும் கொடாமல் விட்டு விடுகிறான். ஆகவே சபித்தலானது கேவலமான பாவங்களுள் ஒன்றாகும். கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்குவதில் உண்மையிலே எந்தவொரு திருப்தியும் இல்லாமையால், ஒரு மனிதனின் மடமைத்தனத்தைக் காட்டுகிறது.

    அதுமாத்திரமல்லாமல், "கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக” எனும் கட்டளையானது கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, இச்சை செய்யாதிருப்பாயாக எனும் கட்டளைகளுக்கு முன்னதாக வருகிறது. ஏன்? ஏனெனில் பாவத்தின் புற்றுநோய் போன்ற தன்மையை தேவன் அறிவார். அத்துடன் எந்தப் பாவம் மற்றையதிலும் கேவலமானது என்பதையும் அறிவார் - அதனால் அவர் இந்தக் கட்டளையை மற்றைய கட்டளைகளுக்கு மேலாக வைத்துள்ளார். சபித்தலானது மிகவும் கேவலமான பாவமாக இருந்த போதிலும், இது மன்னிக்கப்பட முடியாத பாவமல்ல.

    ஸ்கோபீல்ட் வேதாகம குறிப்பி்ல் டாக். சி.ஐ. ஸ்கோபீல்ட் கூறுகையில், பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளை சாத்தானி்ன் கிரியையாக சாட்டுவதே மன்னிக்கப்பட முடியாத பாவம் என்கிறார். நான் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதுதான் மன்னிக்கப்பட முடியாத பாவமென நான் நினைக்கவில்லை. இந்த நகரத்திலுள்ள சில மனிதர்கள், நல்ல பிரசங்கியார்கள், பரிசுத்த ஆவியானவரின் கிரியையை சாத்தானின் கிரியையாகச் சாட்டினார்கள். அது பரிசுத்த ஆவியின் கிரியையாக இருந்த போதிலும், அதனை அவர்கள் பொறாமையினால் அப்படிக் கூறினார்கள். எமது அயலவர்கள் வேதாகம நேரத்தில் 1,122 இரட்சிப்பின் தீர்மானத்தினைப் பதிவு செய்தோம்.

    நகரத்திலே நன்றாகக் கருதப்பட்ட சில மக்கள், "இந்தச் சிறுவர்கள் தாம் என்ன செய்கிறோம் என்பதை அறியாமற் செய்கிறார்கள். இவர்கள் எழுந்து முன்னுக்குச் செல்கின்றனர் ஏனெனில் அவர்கள் இவர்களுக்கு பபிள்க்கம் அல்லது விளையாட்டுப் பொருட்கள் அல்லது ஏமாற்றும் பொருட்கள் சிலவற்றைக் கொடுத்தார்கள்” என்றனர். அப்படியல்ல; அவர்கள் சுவிசேஷப் பிரசங்கத்தினைக் கேட்டபடியாலும், இரட்சிக்கப்பட வேண்டுமெனும் தாகம் இருந்தபடியினாலும் அவர்கள் வந்தார்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவை தமது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டுமென வந்தார்கள். தேவ செயலை தேவனுக்கல்லாமல் வேறொன்றிற்குச் சாட்டும் போது, பரிசுத்த ஆவியானவரின் கிரியையை பிசாசினுடையதாகும்படி மற்றவர்களை நம்பச் செய்கிறீர்கள். இது அநேக மக்களால் அநேக தடவைகளில் செய்யப்பட்ட போதிலும், இவர்களில் சிலர் இரட்சிக்கப்பட்டனர் அல்லது பின்பு இரட்சிக்கப்பட்டனர். ஆகவே பரிசுத்தாவியானவரின் கிரியையை பிசாசின் கிரியைக்கு ஒப்பிடுவது மன்னிக்கப்பட முடியாத பாவம் அல்ல.

    இயேசு கிறிஸ்துவை சாதாரணமாக நிராகரிப்பது மன்னிக்கப்பட முடியாத பாவம் அல்ல. இயேசு கிறிஸ்துவை தமது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள முன்பதாக பெரும்பாலும் அநேகர் அவரை நிராகரித்துள்ளனர்.

    நான் பதினொரு வயதாக இருக்கும் போது இரட்சிக்கப்பட்டேன். ஆயினும் நான் அவரை ஏற்றுக்கொள்ள முன்னதாக இரட்சிக்கப்படுவது குறித்து தேவன் என் இருதயத்தோடு அநேக தடவைகள் பேசினார். ஆகவே இயேசு கிறிஸ்துவை சாதாரணமாக நிராகரிப்பது மன்னிக்கப்பட முடியாத பாவம் அல்ல.

    கடந்த இரண்டு வாரங்களில் கிறிஸ்துவை நிராகரித்த அநேக மக்களை நான் நினைத்துப் பார்க்க முடியும். நான் தனிப்பட்ட ரீதியில் அவர்களிடம் இயேசுவை இரட்சகராக விசுவாசிக்கும்படி கேட்டேன். அவர்களோ ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னமும் அவர்கள் இரட்சிக்கப்பட சாத்தியம் உண்டு. அவர்கள் அவ்வாறு மறுத்ததினால் ஆபத்தான காரியத்தைச் செய்தார்கள் என நான் நினைக்கிறேன். அவர்கள் வாகன விபத்திலே மரிக்கக் கூடும். இயேசு வரக் கூடும். அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படக் கூடும். ஆனாலும் இது மன்னிக்கப்பட முடியாத பாவமல்ல.

    கொலை, விபசாரம், கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்குதல், பரிசுத்த ஆவியானவரின் கிரியையை சாத்தானின் கிரியைக்கு ஒப்பிடுதல், இரட்சகரை சாதாரணமாக நிராகரித்தல் - ஆகிய இவைகள் பயங்கரமான பாவங்களாக இருந்த போதிலும், இவைகள் மன்னிக்கப்பட முடியாத பாவம் அல்ல. மன்னிக்கப்பட முடியாத பாவம் எது என நான் நினைப்பதைக் கூறுவதற்கு முன்பதாக, யார் இதனைச் செய்வார் என்பதைக் கூறவேண்டும்.

2
மன்னிக்கப்பட முடியாத பாவத்தை யார் செய்வார்?

    இரட்சிக்கப்பட்ட நபர் ஒருவரும் மன்னிக்கப்பட முடியாத பாவத்தைச் செய்யமாட்டார். கேட்டிஸ் ஹட்சன் ஆகிய நான் ஒருபோதும் மன்னிக்கப்பட முடியாத பாவத்தை செய்ய முடியாது. ஏன்? ஏனெனில் நான் பதினொரு வயதிலிருக்கும்போது, எனது விசுவாசத்தை இயேசு கிறிஸ்துவின் மீது வைத்தேன். என்னுடைய பாவங்களெல்லாம் ஒரே தடவையில் சதாகாலத்திற்கும் மன்னிக்கப்பட்டுவிட்டது; இதனோடு சம்பந்தப்பட்ட எல்லாம் ஏற்கனவே மூடப்பட்டு, கையெழுத்திடப்பட்டு, முத்திரைபதிக்கப்பட்டு வழங்கப்பட்டாயிற்று. நான் மீண்டும் திரும்பிச்சென்று நான் செய்ததை செய்யாமல் மாற்ற முடியாது. நான் ஏற்கனவே விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்டுவிட்டேன்.

    "இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்ஞ்” என ரோமர் 5:1 கூறுகிறது. நீதிமான்களாக்கப்படுதலானது மீண்டும் திரும்பிச் சென்று ஆக்கினைத் தீர்ப்பைப் பி்ன்பற்றும் ஒரு காரியமல்ல. நீதிமானாக்கப்படுதல் என்பது எல்லாக் குற்றமும் போய்விட்டது, அதாவது தேவன் உமது பாவங்களை மன்னிப்பது மட்டுமல்லாது, உமது அக்கிரமங்களெல்லாவற்றையும் நினைப்பதுமில்லை என வாக்களித்துள்ளார். "எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான். எவனுடைய அக்கிரமத்தைக் (பாவத்தை) கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ அவன் பாக்கியவான்” (சங்கீதம் 32:1,2). ஒரு விசுவாசிக்கிற பாவியை தேவன் நீதிமானாக்கும் போது, அவனுடைய பாவங்களை அவன் பேரில் ஒரு போதும் சாட்டுவதில்லை எனும் வாக்குறுதியையும் ஏற்படுத்துகின்றார். அறிக்கை செய்யப்படாத பாவங்களுக்காக கிறிஸ்தவர்கள் தேவனுக்கு முன்பாக நிற்க வேண்டிவரும்.

    இதில் துக்கமான காரியம் என்னவெனில், தங்களின் பாவங்களுக்கு ஏற்கனவே மன்னிப்பைப் பெற்றுக் கொண்ட மக்கள்தான் இந்த மன்னிக்கப்பட முடியாத பாவத்தைக் குறித்து அதிகம் கவலைப்படுகின்றனர்.

    "நான் இந்த மன்னிக்கப்பட முடியாத பாவத்தைச் செய்துவிடுவேனோ எனப் பயப்படுகிறேன். நான் சபையிலே முன்னுக்குச் சென்று இயேசுவை விசுவாசித்தது எனக்குத் தெரியும். ஆனாலும், நான் மரணக் கோட்டைத் தாண்டிப் போய்விட்டேன் எனும் நினைப்பு எனக்கு வந்துகொண்டே இருக்கிறது” எனக் கிறிஸ்தவர்கள் எனக்குக் கூறியிருக்கிறார்கள்.

    உங்கள் சிந்தனையை இலகுவாக்க எனக்கு அனுமதியுங்கள். நீங்கள் இயேசுவை விசுவாசிப்பீர்களாக இருந்தால், நீங்கள் ஒருபோதும் மன்னிக்கப்பட முடியாத பாவத்தைச் செய்ய மாட்டீர்கள். இதனோடு சம்பந்தப்பட்டவைக்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது. கணக்கு முடிக்கப்பட்டது. புத்தகம் மூடப்பட்டு விட்டது. உமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டது. அதனை முடித்துக் கொள்ளும். யோவான் 5:24 ல் இயேசு கூறியதைக் கவனியுங்கள்: "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார். நீர் இயேசுவை விசுவாசிக்கும் அந்த நேரத்திலேயே உமக்கு உண்டு. "ஆக்கினைக்குட்படாமல், ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்” மீண்டும் பாவத்தின் தண்டனை அவன் மீது வைக்கப்படுவதில்லை. "மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்.” முற்றுப்புள்ளி. இது ஒரு பெரிதான வாக்கியம்!

    "நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்” என வேதாகமம் ஏசாயா 43:25ல் கூறுகிறது. ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் இந்த வசனத்தை மனப்பாடம் செய்துகொண்டு, அவர்களின் பாவங்களை சாத்தான் நினைவிற்குக் கொண்டுவரும் போது அவனுக்குக் கூற வேண்டும்.

    "...என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுகிறதில்லை” என யோவான் 6:37 கூறுகிறது. இயேசு கிறிஸ்துவின் மீது தனது விசுவாசத்தை வைத்து வரும் நபரை தேவன் ஒருபோதும் புறம்பே தள்ளமாட்டார். ஆகவே இரட்சிக்கப்பட்ட நபர் ஒருபோதுமே மன்னிக்கப்பட முடியாத பாவத்தை செய்யமாட்டார்.

    இரட்சிக்கப்படாத மக்கள் மட்டுமே இந்த மன்னிக்கப்பட முடியாத பாவத்தை செய்வார்கள்.

    மன்னிக்கப்பட முடியாத பாவம் ஒன்று மட்டுமே உள்ளது என நான் ஆரம்பத்தில் கூறியதை நினைவுபடுத்திப் பாருங்கள். நீங்கள் ஒருபோதுமே "மன்னிக்கப்பட முடியாத இரண்டு பாவங்கள்” எனும் பிரசங்கத்தினை கேட்டிருக்கமாட்டீர்கள். "எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்ஞ்.” என வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது. இயேசுவுக்கு விரோதமாகவோ அல்லது வேதாகமத்திற்கோ அல்லது பிரசங்கியாருக்கோ அல்லது வேறுயாருக்கோ விரோதமாக யாராவது ஒரு வார்த்தை கூறினால் அது மன்னிக்கப்படும்.

    ஆனால் பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பேசினால் அது மன்னிக்கப்பட மாட்டாது. இது மாத்திரம்தான் மன்னிக்கப்பட முடியாத பாவம். எபிரெயர் 6ம் அதிகாரத்தில் ஒரு மன்னிக்கப்பட முடியாத பாவம் குறிப்பிடப்பட்டிருக்கையில், இந்த இரண்டு பாவமும் ஒன்றாகும்.
அந்த இடத்தில் மன்னிக்கப்பட முடியாத பாவத்தைச் செய்த மக்களைக் கவனியுங்கள். எபிரெயர் 6:4-6 வசனம் கூறுகிறது, "ஒருதரம் பிரகாசிக்கப்பட்டும் போனவர்கள்ஞ்.. மனந்திரும்புவதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்.” மன்னிக்கப்பட முடியாத பாவத்தை யார் செய்வாரெனில் பிரகாசிப்பிக்கப்பட்ட பாவி, தேவனுடைய வார்த்தையைக் கேட்ட பாவி, எப்படி இரட்சிக்கப்பட முடியும் என்பதைத் தெரிந்து கொண்ட பாவி, இரட்சிப்பைக் குறித்து விளங்கிக் கொண்ட பாவி, ஆனாலும் தொடர்ச்சியாக கிறிஸ்துவை நிராகரித்துக்கொண்டு போகிறவர்.

    இப்போது, எபிரெயர் 6 வது அதிகாரம் கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்டதென விசுவாசிப்பவர்கள் உண்டு, ஆனால் அது அவ்வாறல்ல.
ஆனால் 9 வது வசனத்தில், "பிரியமானவர்களே, நாங்கள் இப்படிச் சொன்னாலும், நன்மையானவைகளும் இரட்சிப்புக்குரியவைகளுமான காரியங்கள் உங்களிடத்தில் உண்டாயிருக்கிறதென்று நம்பியிருக்கிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அவர் பேசியதில் இரட்சிப்புக்குரிய காரியங்கள் இல்லை. அவர்கள் இரட்சிக்கப்படாதவர்கள்.

    "தேவனுடைய நல்வார்த்தையையும் ருசிபார்த்தவர்கள் என இது கூறுகிறதே” என நீங்கள் கூறலாம். ஆம், அவர்கள் ருசி பார்த்தவர்கள், ஆனால் சாப்பிட்டுப்பார்க்கவில்லை. "பரிசுத்த ஆவியைப் பெற்றவர்கள்” என நீங்கள் கூறலாம். ஆம், பரிசுத்த ஆவியானவர் ஆரம்ப - இரட்சிப்பின் காரியத்தை அவர்களில் செயற்படுத்தினார், அவர்களோ கிறிஸ்துவை நிராகரித்து, பரிசுத்த ஆவியானவர் இழுப்பதற்கு விட்டுக் கொடாமல் மறுத்தவர்கள்.

    எபிரெயர் 6 ஆவது அதிகாரத்தில் உள்ள மக்கள் யார்? அவர்கள் தேவனுடைய வசனம் பிரசங்கிக்கப்பட்ட அவிசுவாசிகள், தேவனுடைய வார்த்தையினால் பிரகாசிப்பிக்கப்பட்ட பாவிகள். அவர்கள் தேவனுடைய வார்த்தையை ருசிபார்த்தவர்கள்; அவர்கள் பரிசுத்த ஆவியானவருடன் சேர்ந்து அவரின் ஆரம்ப - இரட்சிப்பின் கிரியையிலே சென்றவர்கள், ஆயினும் தொடர்ச்சியாக கிறிஸ்துவை மறுதலித்தார்கள்.

    பரிசுத்த ஆவியானவர் இல்லாமல் ஒருவரும் இரட்சிக்கப்பட முடியாது. "என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசி நாளில் நான் அவனை எழுப்புவேன்” என யோவான் 6:44ல் வேதாகமம் கூறுகிறது. பாவிகள் பரிசுத்த ஆவியானவரினால் கிறிஸ்துவிடம் இழுக்கப்படுகிறார்கள், பரிசுத்த ஆவியானவர் இல்லாமல் ஒருவனும் இரட்சிக்கப்பட முடியாது.

    எபிரெயர் 6 வது அதிகாரத்திலுள்ள மக்கள் இரட்சிப்புக்கு முன்னான காரியத்தில் பரிசுத்த ஆவியானவரினால் செயலாற்றுவிக்கப்பட்டவர்கள். அவர்கள் மாறுகின்ற இடம் வரைக்கும் கொண்டுவரப்பட்டவர்கள், கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும் இடம் வரைக்கும் கொண்டு வரப்பட்டவர்கள்; எப்படி இரட்சிக்கப்படுவதென்று அவர்களுக்குத் தெரியும்; அவர்கள் பிரகாசிப்பி்க்கப்பட்டவர்கள்; அவர்கள் அதைக் கண்டவர்கள்; அதை விளங்கிக் கொண்டவர்கள் - ஆயினும் பிரகாசிப்பிக்கப்பட்ட பாவிகளாக அவர்கள் கூறுவது, "இல்லை! நான் இரட்சிக்கப்பட மாட்டேன்!” இறுதியிலே, வேதாகமம்: "மனந்திரும்புவதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்” எனக் கூறுகிறது.

3
எது மன்னிக்கப்பட முடியாத பாவம்?

    இந்த மன்னிக்கப்பட முடியாத பாவம், பிரகாசிப்பிக்கப்பட்ட பாவிகளினால் செய்யப்படுகிறது. இது இரட்சிக்கப்பட வேண்டும் என முழு விருப்பத்தையும் நிராகரிக்கும் ஒரு பாவி, இழந்துபோகும் வரைக்கும் பரிசுத்த ஆவியானவரின் மன்றாட்டை நிராகரிப்பதாகும்.

    மன்னிக்கப்பட முடியாத பாவம் ஒரு அன்பான தேவனை மாற்றமாட்டாது என்பதை விளங்கிக்கொள்வது முக்கியமானது. தேவனின் அன்பு மாறாதது. தேவன் மாறுபாடு இல்லாதவர்; தேவன் பாவிகளை நேசிக்கிறார்; பாவிகள் இரட்சிக்கப்பட வேண்டும் என தேவன் விரும்புகிறார். மன்னிக்கப்பட முடியாத பாவம், மாற்றமுடியாத தேவனை மாற்றாது.

    மன்னிக்கப்பட முடியாத பாவத்தைக் குறித்த பயங்கரமான காரியம் என்னவெனில், இது பாவியை மாற்றுகிறது. ஒருவர் தான் இரட்சிக்கப்படத் தேவையில்லை எனும் இடத்தை அடையும் வரைக்கும் தொடர்ச்சியாக கிறிஸ்துவை நிராகரிக்கிறார்.

    வெளிப்படுத்தின விசேஷம் நூல் உபத்திரவ காலத்தைக் குறித்து கூறுகையில், பூமிக்கு அழிவு வரும்போது, வானத்திலிருந்து 120 இறாத்தல் நிறையுடைய கல்மழை விழுந்தது, கொள்ளைநோயும், பூமியதிர்ச்சிகளும், மூன்றில் ஒருபங்கு மரணமும் பின்பு அதிகமானோரும் மரித்தனர். நரகத்திலிருந்து வெட்டுக்கிளிகள் (இவை நமக்குத் தெரிந்த சாதாரண வெட்டுக்கிளிகள் அல்ல, இவை திமிங்கலம் போன்ற விலங்கு) புறப்பட்டு வந்தது, இவைகள் பூமியிலுள்ள தேள்களைப் போல மனுஷரைக் கொட்டி, ஐந்து மாதத்திற்கு வேதனைப்படுத்தும். வெளிப்படுத்தின விசேஷ நூலில் இந்த உபத்திரவங்கள் எல்லாம் விபரிக்கப்பட்ட பின்பு, மனிதர்கள் இரட்சிக்கப்பட விருப்பமில்லாதவர்களாகவே காணப்படுகிறார்கள். அவர்கள் ஒரு தடவையாகிலும் இயேசுவிடம் திரும்பி, "நாம் இரட்சிக்கப்பட வேண்டும்” எனக் கூறவில்லை. அவர்கள் மனந்திரும்பி, ஜெபிப்பதற்கு பதிலாக, கல்லுகளையும், மலைகளையும் நோக்கி, "சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவரின் முகத்திற்கு எம்மை மறைக்கும்படி எம்மீது விழுங்கள்” என வேண்டிக்கொண்டனர். அவர்கள் இரட்சிக்கப்படுவதைப் பார்க்கிலும் தற்கொலை செய்ய விரும்பினார்கள்! "இரட்சிக்கப்படுவதைப் பார்க்கிலும் மலைகள் எம்மீது விழுந்து, எம்மைக் கொல்லுவதை விரும்புகிறோம்” என்றனர்.

    என்ன நடந்தது? அவர்கள் அநேக தடவைகள் பரிசுத்த ஆவியானவருக்கு இல்லை எனக் கூறிய அவர்களின் தொடர்ச்சியான கலகம் அவர்களின் சொந்த இருதயத்தையே மாற்றிவிட்டது. அவர்களுக்கு இரட்சிக்கப்பட வேண்டும் எனும் விருப்பமே இல்லை.

    மன்னிக்கப்பட முடியாத பாவத்தை செய்தவர் இனிமேலும் மன்னிக்கப்பட வேண்டும் எனும் விருப்பம் அற்றவரானால் மட்டுமே மன்னிக்கப்பட முடியாத பாவம், மன்னிக்கப்பட முடியாததாக இருக்கும். இதுதான் மன்னிக்கப்பட முடியாத பாவத்தைக் குறித்த பயங்கரமான காரியம். நீர் கிறிஸ்துவை நிராகரிக்கும் போது, உமது இருதயம் கடினத்தின் மேல் கடினமடையும். நீங்கள் இந்தப் புத்தகத்தை வாசித்துக்கொண்டு இருக்கும்போதிலும், "டாக். ஹட்சன், நான் சிறுவனாக இருக்கையில் உணர்ந்தது போல உணருவேனாக இருந்தால், நான் முதல்தடவையாக பாடல் குழுவினர் பாடுவதைக் கேட்டபோது, ஒரு பிரசங்கியார் நரகத்தைக் குறித்துப் பிரசங்கித்ததை முதற்தடவையாகக் கேட்டபோது, எனது இளம் உதடு உதறியது, குளிர் மேற்கொண்டது. பாடற் குழுவினர், "நான் பாவிதான் ஆனாலும் நீர் மாசற்ற இரத்தம் சிந்தினீர்” எனப் பாடியபோது, எனக்குள்ளே ஏதோ இருந்து என் இதயத்தை வெளியே இழுப்பது போலவும், என்னை முன்செல்லத் தள்ளுவது போலவும் இருந்தது. ஒரு சிறுவனான எனது கன்னங்களில் கண்ணீர் வடிந்தோடியதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. இவ்வாறான உணர்வு மீண்டும் எப்போதாகிலும் எனக்குக் கிடைக்குமானால் நான் இயேசுவை எனது இரட்சகராக விசுவாசிப்பேன்” என சிலர் கூறுவது எனக்குக் கேட்கிறது.

    எப்போதாகிலும் இவ்வாறான உணர்வை மீண்டும் பெற்றுக்கொள்வேன் என நீர் நினைப்பது எவ்வளவு மடமைத்தனம்! ஆனால் சாத்தான், "நீர் இதைப்போல இன்னும் மேலதிகமான உணர்வினைப் பெற்றுக்கொள்ளும் வரையிலும் பொறுத்துக்கொள்ளும். அதன் பின்னர் இரட்சி்க்கப்படலாம்” என்கிறான். கேவலமான வஞ்சகன். முதற்தடவையாக தேவன் உமது இதயத்துடன் பேசியபோது, நீர் இரட்சிக்கப்பட வேண்டும் என உணர்ந்ததைப் பார்க்கிலும் அதிகமாக இனி ஒருபோதும் உணரப்போவதில்லை என்பது அவனுக்குத் தெரியும். நீர் ஒவ்வொரு தடவையும் கிறிஸ்துவை நிராகரிக்கும் போதும், உமது இரட்சிக்கப்பட வேண்டும் எனும் உணர்வு குறைந்து குறைந்து சென்று, இரட்சிக்கப்பட வேண்டும் எனும் விருப்பம் முழுவதையும் இழந்து, இறுதியான நிராகரிப்பை மேற்கொள்வீர் என்பது பிசாசுக்குத் தெரியும்.

    நான் அண்மையில் எண்பது வயதிற்கு மேற்பட்ட ஒரு மனிதனுக்குக் கிறிஸ்துவைப் பற்றிக் கூறினேன். அவர் மரிக்கும் தருவாயில் இருக்கிறார் என்பது அவருக்குத் தெரியும். அவர் வேதாகமத்தை விசுவாசிப்பவர். மோட்சம் உண்டென விசுவாசிப்பவர். நரகம் ஒன்று உண்டென விசுவாசிப்பவர். ஆனாலும் இந்த வயதான மனிதர் "எவ்வாறாக இருப்பினும், நான் இரட்சிக்கப்பட வேண்டும் எனும் விருப்பம் எனக்கு எவ்வளவேனும் இல்லை” என்றார்.

    இவருக்கு என்ன நடந்தது? இவர் எப்பொழுதும் இவ்வாறாகவே உணர்ந்ததில்லை. ஒரு காலத்தில் இவரின் இளமையான இதயம் இரட்சகர் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் என்றிருந்தது. என்ன நடந்தது? இவர் பிரகாசிப்பிக்கப்பட்டவர். இவர் தேவனின் வார்த்தையைக் கேட்டவர். எப்படி இரட்சிக்கப்பட வேண்டும் என்பது இவருக்குத் தெரியும். பரிசுத்த ஆவியானவர் இவருடன் இடைப்பட்டார் - ஆனால் இவர் கிறிஸ்துவை நிராகரித்தார். இவரின் தொடர்ச்சியான நிராகரிப்பினால் இரட்சிக்கப்பட வேண்டும் எனும் முழு விருப்பத்தையும் இழந்துவிட்டார்.

    இதனாலேயேதான் 50 வயதினைத் தாண்டிய பின்னர், மிகவும் குறுகிய வீதமான மக்கள் மட்டுமே இரட்சிக்கப்படுகின்றனர். இரட்சிக்கப்பட்ட மக்களி்ல் 76 வீதமானோர், அவர்களின் பன்னிரண்டு வயதிற்கு முன்னரே இரட்சிக்கப்பட்டுள்ளனர். அதாவது நீங்கள் பன்னிரண்டு வயதிற்கு மேற்பட்டவராக இருப்பீர்களானால், நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் இருபத்தினான்கு வீதத்திற்குக் குறைவடைகிறது. இது தேவன் உங்களை இரட்சிக்க விரும்பவில்லை என்றோ அல்லது அவரால் உங்களை இரட்சிக்க முடியாது என்றோ கருத்தல்ல; ஆனால் நீங்கள் இரட்சிக்கப்பட வேண்டும் எனும் சந்தர்ப்பம் குறைந்துள்ளது. தமது வாழ்க்கை முழுவதிலும் சபைக்கு சென்றபோதிலும் தொடர்ச்சியாக கிறிஸ்துவை நிராகரித்த மக்களை ஆதாயம் செய்துகொள்வது கடினமானது. இவர்கள் பிரகாசிப்பிக்கப்பட்ட பாவிகள். "ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டுப் போனவர்கள்ஞ்.. மனந்திரும்புவதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்".

    எந்தவொரு உணர்ச்சியோ, மன எழுச்சியோ, விருப்பமோ இல்லாமற் போகும்வரைக்கும் நீர் கிறிஸ்துவை நிராகரிக்கலாம். இவ்வுலகில் உள்ள எல்லாப் பிரசங்கியார்களும் பிரசங்கித்தும், உமது கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீர்கூட வராமற் போகலாம். அந்த வயதான மனிதன் எனக்குக் கூறியது போல, "நான் இரட்சி்க்கப்படத் தேவையில்லை; இரட்சிக்கப்பட வேண்டும் எனும் விருப்பம் எனக்கில்லை” என நீங்களும் கூறலாம். இதுதான் மன்னிக்கப்பட முடியாத பாவம்.

    உமக்கு ஒரு உணர்வின் ஏதாவது அறிகுறி இருக்குமானால், பரிசுத்த ஆவியானவர் உமது இதயத்தை கொஞ்சமாவது இழுப்பாராக இருந்தால், சாதாரணமான ஒரு சிறிதளவு ஆர்வம் காணப்படுமானால், இரட்சிக்கப்படுவதற்கான கொஞ்ச விருப்பம் இருக்குமானால், தேவனின் சார்பில், உமது சொந்த நன்மை கருதி அந்த சிறிய விருப்பம் உம்மை விட்டுக் கடந்துபோக முன்னதாக உடனடியாக தயவுசெய்து செயற்படும்.

    இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்பட முடியாத பாவம் ஒன்று உண்டு. அதுதான் இரட்சிக்கப்பட வேண்டும் எனும் முழு விருப்பத்தையும் இழக்கும் வரை கிறிஸ்துவை நிராகரிக்கும் மன்னிக்கப்பட முடியாத பாவம்.

    நான் உமக்கு என்ன கூற முடியும்? நீர் இரட்சிக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்த சபைக்கு எப்போதாகிலும் வந்து, நான் பிரசங்கித்ததைக் கேட்டவர்கள் நரகத்திற்குப் போவதை நான் நினைத்துக்கூடப் பார்க்க விரும்பவில்லை. நான் பிரசங்கித்த ஒவ்வொருவரையும் நான் ஞாபகம் வைத்திருக்க வேண்டும் என விரும்புகிறேன். நான் ஆட்டுக்குட்டியானவருடன் கலியாண விருந்தில், அந்த நீளமான பந்தியில் உட்கார்ந்திருக்கும் போது, நான் எழுந்து முன்னும் பின்னுமாக நடந்து, நீர் அந்த இடத்தில் இருக்கிறீர் என்பதைக் கண்டுகொள்ளும் வரையில், நான் சாப்பிட விரும்பமாட்டேன் என நினைக்கிறேன். நீர் அங்கே இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.

4
நீர் கிறிஸ்துவை இன்று விசுவாசிக்க வேண்டும் என நாம் மன்றாடுகிறோம்

    நான் இருபது வருடங்களுக்கு மேலாக போதகராக சேவை செய்து வந்த போரஸ் கில் பப்டிஸ்ற் சபையிலுள்ள எனது அன்பான மக்களுக்கு பிரசங்கி்த்த, "அந்த மன்னிக்கப்பட முடியாத பாவம்” எனும் பிரசங்கத்தினை நீங்கள் இப்போது வாசித்துள்ளீர்கள். நான் இப்போது ஏதோ ஒரு வகையில் உங்களையும் எனது சபையில் இருந்த அன்பான மக்களில் ஒருவராகவே கருதுகிறேன். இந்தப் புத்தகத்தை வாசித்த யாராகிலும் ஒருவர் இரட்சகர் இல்லாமல் மரித்துப் போவதை நான் விரும்பவில்லை. ஆகவே தயவுசெய்து இரட்சிக்கப்பட வேண்டும் எனும் விருப்பம் உமக்குக் கொஞ்சமாகிலும் இருக்குமானால், உடனடியாக இதனையிட்டு ஏதாவது செய்யும்.

    நீர் கிறிஸ்துவுக்கு, "இல்லை” என சொல்லும் ஒவ்வொரு தடவையும், உமது விருப்பம் மங்கினதாகி இறுதியில் இரட்சிக்கப்பட வேண்டும் எனும் உமது முழு விருப்பத்தையும் முற்றாக இழந்து, மன்னிக்கப்பட முடியாத பாவத்தை செய்துவிடுவீர். நான் போரஸ் கில் பப்டிஸ்ற் சபை மக்களுக்குக் கூறியதைப் போல, மன்னிக்கப்பட முடியாத பாவத்தை செய்தவருக்கு, மன்னிக்கப்பட வேண்டும் எனும் விருப்பம் இல்லாத வரைக்கும் தான் மன்னிக்கப்பட முடியாத பாவம், மன்னிக்கப்பட முடியாததாக இருக்கும். நீர் சாகும் போது பரலோகத்திற்கு போவீர் என்பதை அறிந்துகொள்ள வேண்டும் எனும் ஒரு கொஞ்ச விருப்பம் உமக்கு இருக்குமேயானால், நீர் இன்றைக்கே கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும் என கெஞ்சிக்கேட்கிறேன். கிறிஸ்துவை விசுவாசிப்பது என்பது அவர் மீது சார்ந்திருந்து, உமது இரட்சிப்புக்காக அவரை நம்புவதாகும். நீர் அவரிடம் உமது சொந்த வார்த்தையில் பின்வருமாறு கூறலாம்.

    "அன்பான கர்த்தராகிய இயேசுவே, நான் ஒரு பாவியென்றும், என்னை என்னாலே இரட்சிக்க முடியாது என்றும் தெரிந்து கொண்டேன். நீர் எனக்காக மரித்தீர் என நான் விசுவாசிக்கின்றேன். உம்மை எனது இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன். நான் சாகும்போது என்னைப் பரலோகம் கொண்டுசெல்வதற்கு, பரிபூரணமாக உம்மீது மாத்திரமே நான் சார்ந்திருக்கிறேன். ஆமென்."

    நீர் இந்த ஜெபத்தையோ அல்லது இவ்வாறான ஒரு ஜெபத்தையோ ஜெபித்து, உமது இரட்சிப்புக்காக அவரை விசுவாசிப்பதாக இயேசுவிடம் கூறியிருப்பீரானால், நீர் கிறிஸ்தவ வாழ்வு வாழ்வதற்கு உதவிசெய்யக் கூடிய சில இலவசப் புத்தகங்களை நான் உமக்கு அனுப்பிவைக்க விரும்புகிறேன்.
 

தீர்மானப் பத்திரம்
அன்பான போதகரே,
"அந்த மன்னிக்கப்பட முடியாத பாவம்” எனும் டாக். கேட்டிஸ் ஹட்சன் அவர்களின் தேவசெய்தியை வாசித்தேன். நான் ஒரு பாவி என்பதையும், இயேசு கிறிஸ்து சிலுவையிலே இரத்தம் சிந்தி எனக்காக மரித்தார் என்பதையும் விசுவாசிக்கிறேன். நான் இங்கே இப்போது அவரை மட்டுமே எனது சொந்த இரட்சகராக விசுவாசிக்கின்றேன். நான் சாகும்போது என்னைப் பரலோகம் கொண்டுசெல்ல அவரில் மட்டுமே நான் பரிபூரணமாகத் தங்கி இருக்கிறேன்.
திகதி ........................................................
பெயர் ......................................................
விலாசம் ..............................................
மின் அஞ்சல் .....................................

No comments:

Post a Comment