Monday, April 18, 2016

தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது.” 1யோவான்:3.9
பரிசுத்த வேதாகமத்தின் துவக்கத்தில்(ஆதியாகமம்:3.15) காணும் முதல் தீர்க்கத்தரிசன வசனத்திற்கு விளக்கமாக இந்த வசனம் அமைந்துள்ளது. ஆதாமும் ஏவாளும் பாவம் செய்து தேவ மகிமையை இழந்தனர். இதனால் அவர்களும், பாவத்தை தூண்டிய பாம்பும், தேவனுக்கு முன்பாக விசாரணைக்கு கொண்டு வரப்பட்டனர்.
அப்போது பாம்பிடம் இரு விதமான வித்துக்களின் செயல்பாடுகளை குறித்து தேவன் குறிப்பிடுகிறார். 1.ஸ்திரீயின் வித்து அல்லது தேவனின் வித்து, 2.பாம்பின் வித்து அல்லது பிசாசின் வித்து. இதில் ஸ்திரீயின் வித்து என்று குறிக்கப்படும் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, தனது சிலுவை மரணத்தின் மூலம் பிசாசை ஜெயம் எடுத்தார். மரித்த இயேசு 3 நாட்களுக்கு பிறகு உயிரோடு வந்து மரணத்தையும் ஜெயித்தார்.
அவரது இந்த வெற்றிகளை தனக்காக மட்டும் வைத்துக் கொள்ளாமல், தன் மீது விசுவாசம் வைக்கும் அனைவருக்கும் அளிக்கிறார். இதன்மூலம் இயேசுவை நமது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் போது பாவம், சாபம், பிணி, மரணம் ஆகியவை மீது நமக்கு ஜெயம் கிடைக்கிறது.
இயேசு கிறிஸ்துவை ஒரு மனிதன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் போது, அவனுக்குள் இயேசுவின் வித்து உருவாகிறது. அவனுக்குள் அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, ஒரு கட்டத்தில் இயேசுவின் பூர்ண வளர்ச்சியை பெற்று, இயேசுவின் மறுவடிவமாக மாறுகிறான். அப்போது தியான வசனத்தில் யோவான் குறிப்பிடுவது போல, அவனுக்குள் பாவத்தின் மீது ஒரு வெறுப்பு ஏற்பட்டு, பாவ கிரியைகளை செய்யாமல் இருக்கிறான்.
ஆனால் பலரும் இரட்சிக்கப்பட்ட பிறகு கூட, ஒருசில பாவங்களில் ஈடுபடுகிறார்களே என்ற சந்தேகம் நமக்கு ஏற்படலாம். உண்மைத் தான், இரட்சிக்கப்படும் போது, அவர்களுக்குள் புகுந்த கிறிஸ்துவின் வித்து வளர்ச்சி அடையாமல் போவதால் தான் இந்த நிலை உருவாகிறது.
இரட்சிக்கப்படும் போது, நமக்குள் உருவாகும் கிறிஸ்துவின் வித்து வளர்ச்சி அடைய வேண்டுமானால், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்ற தண்ணீரும், தேவ வசனம் என்ற ஆகாரமும் தேவை. இவை இரண்டையும் சரியாக உட்கொள்ளும் ஒரு நபரின் வாழ்க்கையில், பாவம் குறுக்கிட வாய்ப்பே இல்லை. அப்படியே பாவ சிந்தைகள் வந்தால் கூட, தேவனுடைய ஆவியானவர் அதை உணர்த்தி, உடனடியாக அதில் இருந்து விடுவிக்கிறார்.
இந்நிலையில் நம் வாழ்க்கையில் விட முடியாத பாவங்கள் ஏதாவது இருக்கிறதா? எவ்வளவு முயற்சி செய்தாலும் அதை மேற்கொள்ள முடியவில்லையா? கவலை வேண்டாம். இரட்சிக்கப்பட்ட போது, நமக்குள் அளிக்கப்பட்ட அந்த கிறிஸ்துவின் வித்து வளரும்படி, தேவ வசனத்தையும், பரிசுத்தாவியின் அபிஷேகத்தையும் நிறைவாக பெறுங்கள்.
கர்த்தருக்கு காத்திருக்கும் ஒவ்வொருவரின் மீதும் பரிசுத்தாவியின் வல்லமை இறங்குகிறது. எனவே பரிசுத்தாவியின் வல்லமையை தினமும் உங்களுக்குள் புதுப்பித்து கொள்ளுங்கள். அப்போது நம்மோடு போராடும் எல்லா பாவ வல்லமைகளையும் ஜெயிப்பது எளிதாக அமையும். நாமும் பாவம் செய்யாமல், தேவனுடைய வித்தை உடையவர்களாக இருப்போம்.
ஜெபம்:
அன்பான இயேசுவே, இவ்வுலகத்தில் உள்ள எல்லாவற்றின் மீதும் எங்களுக்கு ஜெயத்தை பெற்று தர நீர் வல்லவராக இருக்கிறீர். எங்களுக்குள் இருக்கும் தேவனுடைய வித்தை ஒவ்வொரு நாளும் வளர்த்தி, ஒரு பூர்ண இயேசுவின் சாயலை அடைய உதவி செய்யும். பாவத்தை ஜெயிக்க கிருபை தாரும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.